Published:Updated:

என் ஊர்!

வாருங்கள் அன்பைக் குடிக்கலாம்!புதுச்சேரி

##~##
னக்கும் புதுச்சேரிக்கும் 65 ஆண்டு கால, இறுகிய என்றும் நெகிழாத உயிர்ப் பிணைப்பு, என் பிறப்போடு உறுதி செய்யப்பட்டது. என் இளமைக் காலத்துப் புதுச்சேரி என் மனம் முழுக்க வியாபித்திருக்கிறது. பத்து புதுச்சேரித் தமிழர்களோடு நீங்கள் கை குலுக்கினால், அதில் இருவர் ஃபிரெஞ்சு தேசத்தவராகத் தம்மை மாற்றிக் கொண்டவராக இருப்பார். ஃபிரான்ஸில் வாழும் என் மூத்த மகனும், மருமகளும், குழந்தைகளும் ஃபிரெஞ்சு குடிமக்கள். அவர்கள் இந்தியாவில் வாக்களிக்க முடியாது. (என் வாக்குச் சீட்டு இன்னும் புதுச்சேரிக்குத்தான் சொந்தம்) புதுச்சேரிக்கும் ஃபிரான்ஸுக்கும் ஆன தொடர்பு, புதுச்சேரிக்கும் சென்னைக்குமானதுபோல. என் கடைசி மகன், ஃபிரான்ஸில்தான் பொறியியல் படிக்கிறான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் ஊர்!

ஒரு சுவாரஸ்யமான கதை -

19-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், பொன்னுத்தம்பிப்பிள்ளை, ஒரு வழக்கறிஞராக, ஃபிரெஞ்சு வழக்கறிஞர் பாணியில் கோட்டும் சூட்டும் சப்பாத்தும் (ஷூக்கள்) அணிந்துகொண்டு நீதிமன்றத்துக்குள் நுழைகிறார். நீதிபதி அதிர்ந்துபோகிறார். கேட்கிறார்.

'முசே பொன்னுத்தம்பி காலில் என்ன?’

'சப்பாத்து...’

'அது எப்படி, அடிமை தேசத்தைச் சேர்ந்த ஒருவர், என் முன்னால் சப்பாத்து அணிந்துகொண்டு வரலாம்? இது முறை அல்லவே.’

'நீதிமன்றத்துக்குள் நான் ஒரு வழக்கறிஞன். அடிமையா, சுதந்திரனா என்பது பிரச்னை இல்லை.’

'இல்லை. நான் இதை ஏற்க மாட்டேன். என் முன்னால் ஒரு அடிமை தேசத்தவன் சப்பாத்து அணிந்து வருவதை அனுமதிக்க மாட்டேன். சப்பாத்து அணியாமல் வாரும். இல்லையென்றால் வெளியேறும்.’

என் ஊர்!

வெளியேறினார் பொன்னுத்தம்பி. ஃபிரான்ஸில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. விளைவாக, 'புதுச் சேரியில் பிறந்தவர், ஃபிரெஞ்சு சட்டங்களை ஏற்று ஃபிரெஞ்சு வழி ஒழுகச் சம்மதிப்பார் எனில், அவருக்கு ஃபிரெஞ்சியரின் உரிமையும் சலுகைகளும் அளிக்கப்படும்’ என்கிற புது விதி அமலாக்கப்பட்டது. பொன்னுத்தம்பி, ஃபிரெஞ்சு சட்ட, நிதி, நடைமுறைகளைத் தழுவினார். அவருக்குக் குடும்பப் பெயராக 'லா போர்த்’ என்பது தரப்பட்டது. லா போர்த் என்றால், கதவு (The Door) என்று அர்த்தம். தமிழர் ஃபிரெஞ்சியராகும் கதவைத் திறந்து வைத்ததால், அவருக்கு அந்தப் பெயர். புதுவையில் லா போர்த் தெரு என்று ஒரு தெருவே இருக்கிறது.

ஃபிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்த எங்கள் சுதந்திரப் போரின் விதையை, ஃபிரெஞ்சியரையும் எதிர்க்க முடியும் என்கிற சுதந்திர உணர்வை எங்களுக்குள் ஊற்றியவர் பொன்னுத்தம்பி.

என்னுடைய ஏதோ ஒரு பிறந்த நாளில், அப்பா எனக்கு ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக் குறிப்புகளைப் பரிசளித்தார். ஆனந்த ரங்கர், ஃபிரெஞ்ச் குவர்னர்களுக்கு மொழி பெயர்ப்பாளர். தமிழர்களின் அதிகாரி. அவர் சுமார் 25 ஆண்டு காலம், புதுச்சேரி, சென்னை, மதுரை, தஞ்சை, மராத்தி, தில்லி அரசுகளின் விவகாரங்கள், சமூகக் கலாசார நடைமுறைகளை 1736 தொடங்கி எழுதி இருக்கிறார்.

ஒருமுறை சென்னையை புதுச்சேரி ஃபிரெஞ்சுக் காரர்கள் கைப்பற்றிவிடுகிறார்கள். குவர்னர் துய்ப்பிளக்ஸ் விழா கொண்டாடுகிறார். மகிழ்ச்சியின் உச்சத்தில் பிள்ளையைப் பார்த்து, 'ரங்கப்பா - உனக்கு என்ன வேண்டுமோ, கேள்.’ என்கிறார். கோட்டையில் நியாயம் இன்றிச் சிறைபட்ட மனிதர்கள் பற்றிப் பேசி, நீதி கேட்கிறார் பிள்ளை. 'உனக்கு என்ன வேணும்?’ என்கிறார் குவர்னர். 'எனக்கு வேண்டியதைக் கடவுள் கொடுப்பார்’ என்கிறார் பிள்ளை.

எனக்கு 'இந்தப்’ பிள்ளைதான் பிடித்தது. நாட்குறிப்புகளைப் படித்தேன். சுமார் 12 ஆண்டு காலம், 12 வால்யூம்களையும் படித்து, ஃபிரான்ஸ், இந்திய, மாநில, வரலாறுகளைப் படித்து, அவை சொன்னவை, சொல்லத் தவறியவை ஆகியவற்றை, அக்கால (1700-1750) வாழ்க்கையை 'மானுடம் வெல்லும்’, 'வானம் வசப்படும்’ என இரு நாவல்களாக எழுதினேன். 'வானம் வசப்படும்’ சாகித்ய அகாடமி பரிசு பெற்றது.

ஆஷ் கலெக்டரைக் கொல்ல வாஞ்சி நாதனுக்கு துப்பாக்கி சுட வ.வெ.சு.ஐயர் கற்றுக்கொடுத்த வீர பூமி எங்களுடையது. அரவிந்தர் கனவு கண்டது எங்கள் ஊரில்தான். பாரதிதாசன் தமிழ்த் தேசியக் குரலை உயர்த்தியது எங்கள் மண்ணில் தான். புதுச்சேரி ஞான பூமி என்றால், உங்களால் மறுக்க முடியுமா?

ஹரப்பா, மொகஞ்சதாரோவுக்கு நிகரான அரிக்கமேட்டு நாகரிகம் எங்களுடையது. கிரேக்க யவனத் தொடர்புகள், வணிக உறவுகளின் கேந்திரம் எங்கள் ஊர் என்கிறது வரலாறு. பலப்பல தலைவர்கள், கட்சிகளை ஒன்றிணைத்து, தென் ஆசியாவிலேயே உழைக்கும் வர்க்கத்துக்கு எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமைகளை மாபெரும் போராட்டம் நிகழ்த்தி, அம் மாபெரும் தியாகப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிப் பெற்றுத்தந்த மகத்தான தலைவர் வ.சுப்பையா அவர்களை ஈன்று பெருமை பெற்ற மண் எங்களுடையது. கம்யூனிஸ்ட் கட்சியைத் தென்னிந்தியாவில் விதைத்த ஆதி கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவர், மக்கள் தலைவர் வ.சுப்பையா ஆவார். தொழிலாளர் இயக்கத்தைச் சுதந்திரப் போராட்டமாக மாற்றி, 1954-ல் புதுச்சேரிக்கும் சுதந்திரம் பெற்றுத் தந்த தலைவர்களில் முதன்மையானவர் வ.சுப்பையா. அவர் வாழ்க்கையில் இருந்தே நான் மார்க்சியம் கற்றேன். என் வாழ்க்கையில் நான் ஏற்றுக்கொண்ட முதல் தலைவரும் கடைசித் தலைவரும் சுப்பையாதான். அவரையே கதாநாயகனாகக்கொண்டு ஒரு நாவலை ('கண்ணீரால் காப்போம்’) எழுதி இருக்கிறேன். இன்னும் எழுதுவேன்.

புதிய தமிழ் இலக்கியத்துக்கு முகம் தந்த புதுச்சேரி எழுத்தாளர்கள், தமிழர்கள் எண்ணற்றவர்கள். வாணிதாசன், தமிழொளி, அரிமதி தென்னகன், ராஜரிஷி முதலானோர் மரபார்ந்தும் புதிதாகவும் எழுதியவர்கள் என்றால், இன்று புதுச்சேரிப் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய நவீன எழுத்தாளர்கள் மாலதி மைத்ரி, பிரேம், ரமேஷ் ஆகியோரைத் தமிழ் இலக்கியம் மறக்க முடியுமா என்ன? பிரபஞ்சனையும்தான்.

வாருங்கள் புதுச்சேரிக்கு! சமத்துவம், சகோதரத்துவம், சக வாழ்வு என்கிற ஃபிரெஞ்சுப் புரட்சி, உலகுக்குத் தந்த மானுட வாழ்க்கையின் உன்னதங்களின் சாரத்தை, அவை பெரும்பாலும் தமிழ்நாட்டு மற்றும் வடநாட்டுக்காரர்களால் அழிக்கப்பட்டாலும், மிச்ச மீதியை நாங்கள் வைத்துக்கொண்டுதான் வாழ்கிறோம். கலப்பு இல்லாத, விலை மலிவான, நல்ல மதுக் குப்பியோடு அன்பைக் குடித்துக்கொண்டும், மதுவை அருந்திக்கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கலாம். வாழ்க்கையின் நோக்கம்தான் வேறு என்ன?

படங்கள்: வி.செந்தில்குமார்