Published:Updated:

ஆறாம் திணை - 54

மருத்துவர் கு.சிவராமன், படம்: ர.சதானந்த்

ஆறாம் திணை - 54

மருத்துவர் கு.சிவராமன், படம்: ர.சதானந்த்

Published:Updated:
##~##

சென்னையில் மழைக்காலம், அதிகம் சிலாகிக்கவைப்பதில்லை. நேற்று மழையில் அத்தனை வண்டிகளும் நகராமல் ஊர்வலமாக நின்றுகொண்டிருக்கும்போது, சாலையோரத்தில் பள்ளிக் குழந்தை ஒன்று, தன் பென்சில் டப்பாவைத் திறந்து உள்ளிருந்த  ஆஸ்துமாவின் மூச்சுக்குழல் இறுக்கத்தை இலகுவாக்கும் இன்ஹேலரை எடுத்து, வாயில் வைத்து அவசர அவசரமாக உறிஞ்சியதைப் பார்க்க நேரிட்டது. பின்னர் குடையைப் பிடித்துக்கொண்டு அந்தக் குழந்தை மழைக் கூட்டத்தில் கரைந்தது.

'ஆட்டோவுக்கு ரொம்ப செலவாகும்.  சைக்கிள்ல பின் சீட்ல உக்காந்துக்கோ...  நான் தள்ளிட்டே வாரேன். வெரசாப் போயிரலாம்!’ என்று டபுள்ஸ் அடிக்கத் தெரியாத அப்பா, மருத்துவர் வீடு வரை அடிக்கடி வீசிங்கில் அவஸ்தைப்படும் என்னை வைத்துக்கொண்டு தள்ளிச்சென்ற நாட்கள் சடாரென நினைவுக்கு வந்து சென்றன. அப்போதெல்லாம் 'அட்ரீனலின்’ எனும் ஊசிதான் ஆஸ்துமா அவசரத்தின் ஆபத்பாந்தவன். ஓரிரு விநாடிகள் கயிலாயம், பரலோகம் எல்லாம் பார்த்துட்டுத் திரும்பி வருகிற மாதிரி, ஓர் உலுக்கு உலுக்கி, சளியை வாந்தியெடுக்கச் செய்து, தடாலடியாக மூச்சு இறுக்கத்தில் இருந்து  விடுதலை கொடுக்கும். ஆனால், இன்றைய நவீன மருத்துவம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த எட்டியுள்ள அசுர வளர்ச்சியைப் பார்க்கும்போது, 'சே... இந்த இன்ஹேலரை அன்னைக்கே கண்டுபிடிச்சிருக்கக் கூடாதா!’ என்று சந்தோஷம் கலந்த பொறாமை எட்டிப் பார்க்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நகரமயமாக்கலும் தொழில்மயமாக்கலும் ஆஸ்துமாவின் புள்ளிவிவரத்தை ஏற்றிக் கொண்டே போகின்றன. இந்த நோய், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும், 50 சதவிகிதத்துக்கும் மேலாக அதிகரிக்கிறது. ஆஸ்துமா, புதிதாக வந்த நோய் அல்ல. கிரேக்கத்தின் அறிவியல் மேதை ஹிப்போகிரேட்டஸ் முதல் நம் ஊர் யூகி முனிவர் வரை பலரும் இந்த நோயைப் பற்றிப் பேசியுள்ளார்கள். 'மந்தாரகாசம்’ என்று அந்த நாட்களிலேயே அழைக்கப்பட்ட இந்த நோய், சூழலில் மாசு இல்லாத அந்தக் காலத்திலும், பெரிதும் மழைக்காலத்திலும், மழைக்கு முந்தைய மேகமூட்டமான காலத்திலும் சிரமப்படுத்தும். மூச்சிரைப்பும் செரிமானக் குறைவும் கலந்துகட்டி அவதி தரும் இந்த நோய்க்கெனத் தனியே காலை பானமும், சிறப்பு உணவும் அப்போதே இருந்திருக்கின்றன.

ஆறாம் திணை - 54

கீரை வகையில் நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத முசுமுசுக்கைக் கீரை, கரிசாலைக் கீரையைப் பொடித்து தேநீர் போடுவதுபோல் கஷாயமாக்கி, பனை வெல்லத்துடன் கலந்து 'மந்தாரகாசம்’ வரும் நபர்கள் சூட்டோடு பருகியதாக வரலாறு சொல்கிறது. சளி, மூக்கடைப்பு, இருமல் உள்ளோருக்கான காலை பானம் இது. தென் தமிழகத்தின் சிறப்புக் கீரையான முசுமுசுக்கைக் கீரை, அலர்ஜியால் உண்டாகும் மூக்கடைப்பு, தும்மல், நீரேற்றத்தைத் தருவிக்கும் 'ஹிஸ்டமின்’களை மட்டுப்படுத்துவதை இன்றைய அறிவியலும் உறுதிப்படுத்தியுள்ளது. ('Melothria Maderaspatana என்ற அதன் தாவரவியல் பெயரிலேயே 'மதராஸப்பட்டணம்’ இருப்பதைக் கவனியுங்கள்!)

ஆஸ்துமா நோயுள்ளோர், பால் பொருட்களை அறவே தவிர்ப்பது அவசியம். அதே சமயம் அதிகபட்ச நீரும், பாலில்லாத தேநீரும் தினசரி பருகுவது நல்லது. சாப்பிடும் எல்லா குழம்புக்காய்களிலும் மிளகுத் தூளைத் தூவிச் சாப்பிடுவது சளியைச் சேரவிடாது என்கிறது சித்த மருத்துவம். அதுவே மூச்சுக்குழல் இறுக்கத்தைத் தணிக்கும், நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் என்கிறது நவீன உணவு அறிவியல்.

மழைக்காலத்தில் பீர்க்கன், சுரை, புடலை முதலான நீர் அதிகமுள்ள காய்கறிகளைத் தவிர்க்கவும். அப்படியே சாப்பிட்டாலும் மிளகுத் தூளைத் தூவிச் சாப்பிடச் சொல்கிறது நமது உணவுப் பாரம்பரிய அனுபவம். மழைக்கால நாட்களில் வீட்டுப் பிள்ளைகளுக்கு காலையில் கற்பூரவல்லி ரசமும், மதிய உணவில் தூதுவளை ரசமும், இரவில் திரிகடுகமும் தசமூலமும் சேர்ந்த கஷாய பானமும் குடிக்கக் கொடுப்பது மூச்சு இரைப்பு நோயைத் தடுக்கும் வழி.

நம் மரபு சொன்ன தடுப்பு மருந்தான 'உரைமருந்து’ 'குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி அட்டவணை’யில் இடம் பெறாததால் அதை மறந்தே விட்டோம். மகப்பேறுக்கென தாய் வீட்டுக்கு பெண் வந்தவுடன், 'உரைமருந்து’ தயாரிப்பு பல வீடுகளில் தொடங்கும். சில வீடுகளில் வளைகாப்பு முடிந்த கையோடேகூடத் தொடங்கும். விதை நீக்கிய கடுக்காயும், தான்றிக்காயும், மேல்தோலைச் சீவி மாசு நீக்கிய சுக்குவும், ஈரம் போகும்படி உலர்த்தி வறுத்தெடுக்கப்பட்ட திப்பிலி, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, மாசிக்காயும், இவற்றோடு வெள்ளைப் பூண்டையும் சேர்த்து, இனிப்பான அதிமதுரக் கஷாயம் விட்டு அரைத்து, விரல்கள் போன்ற குச்சிகளாக உலர்த்தி, அந்த உரைமருந்தைச் செய்வார்கள்.

குழந்தையைக் குளிப்பாட்ட கால்களை நீட்டிப் பலகையில் அமர்ந்து தன் கால்களில் குப்புறப் படுக்கவைத்துக்கொள்வாள் அன்னை. குழந்தையின் மூக்கில் தண்ணீர் ஏறாமல், உடலில் நீர் தங்காமல், அம்மாவின் கால்களைப் பற்றி கைக்குழந்தையே தன் குளியலை ரசிக்கும் அந்த நிகழ்வு, அந்தக் கால கவிதை. இன்றைய 'டப்புக் குளியலில்’ அந்தக் கவிதை நயம் காணாமல் போய்விட்டது. தலைக்குக் குளிப்பாட்டியவுடன் பசியில் வீறிட்டு அழும் குழந்தைக்கு, முதலில் உரைமருந்தை தாய்ப்பாலில் இரண்டு இழைப்பு இழைத்துக் கொடுத்து, பின்னர் தாய்ப்பால் கொடுக்கச் சொல்லும் 'உரைமருந்து மரபு’தான் அந்தக் காலத்துத் தடுப்பூசிகள். இந்த உரைமருந்தின் ஒவ்வொரு மூலிகையும் மணப்பொருளும் குழந்தையின் ஆரம்பக்கால சவால்களான சளி, இருமல், தும்மல், கணை, பசியில்லாமை, செரியாமை, மாந்தம் என ஒட்டுமொத்த சிக்கல்களையும் வருமுன் காக்கக்கூடியது. பாரம்பரியமாக வரும் ஆஸ்துமாவின் நீட்சியையும் கட்டுப்படுத்தும்!

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism