சினிமா
Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன் - 24 - 24

மறக்கவே நினைக்கிறேன்
பிரீமியம் ஸ்டோரி
News
மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

து எப்படி இந்த அம்மாக்களுக்கு மட்டும் இவ்வளவு பேய்க் கதைகள் தெரிந்திருக்கின்றன?

நடுராத்தியில், நடுக்காட்டுக்குள் போய் உறங்க வேண்டும்போல் இருந்தால், விறகு பொறுக்கப் போனபோது நரி கடித்து இறந்துபோன காட்டுப் பேச்சிக் கதையைச் சொல்லச் சொல்லிக் கேட்பேன். அல்லது அர்த்தராத்திரியில் ஆற்று நீருக்குள் மூழ்கிக்கொண்டு ஒற்றைச் சிப்பியைப் போல தூங்க வேண்டுமென்றால், வயிற்றுக் கருவோடு ஆற்றுக்குள் விழுந்து இறந்துபோன 'ஆச்சி முத்தா’ கதையைச் சொல்லச் சொல்லிக் கேட்பேன். இவை எதுவுமில்லாமல் ராத்திரி முழுவதும் வானத்தில் ஒரு கள்ளப் பருந்தைப் போல பறந்துகொண்டே இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், ஆலமரமாக மாறி வானத்தைப் பார்த்து கிளையாக, இலையாக வளர்ந்துகொண்டே இருக்கும், ஊரே கூடி கொலை செய்த ஜெபமணியின் கதையைச் சொல்லச் சொல்லிக் கேட்பேன்.

இந்தக் கதைகளைச் சொல்லும்போது மட்டும் அம்மாவின் குரல், முகம், சிரிப்பு ஆகியவை கதாபாத்திரத்துக்கு ஏற்ப மாறும். அதிர்ச்சியாக சில நேரங்களில் மூக்குகூட மாறி விடும். அது மட்டுமில்லாமல், கதையைக் கேட்கக் கேட்க... வீடு காடாக மாறும், பூனை புலியாக மாறும், நாய்கள் நரிகளாக மாறும், முற்றம் கடலாக மாறும், படுக்கை நதியாக மாறி, ஏதோ ஒரு திசையில் சலசலத்துக் கொதிக்கிற நீராகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும். விடிந்தும் விடியாமலும் முதுகில் சுளீரென்று அண்ணனின் அடி விழும்போதுதான் தெரியும் என் மொத்த உடலும் உடுப்பும் சிறுநீரால் நனைந்திருப்பது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  உங்களுக்குச் சொல்வதற்கு என்னிடமும் பேய்க் கதை ஒன்று இருக்கிறது. ஆனால், அது பேய்க் கதையா அல்லது கடவுளின் கதையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

மறக்கவே நினைக்கிறேன் - 24 - 24

நான்கு வருடங்களுக்கு முன்னால் தூறிக் கொண்டேயிருக்கும் மழை மாதம் ஒன்றில், முன்னதாகவே இருட்டத் தொடங்கிவிட்ட ஒரு நாளில் மழைக் கோட்டும் கேமராவுமாக இரவில் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்குத் தனியாக பைக்கில் வந்துகொண்டிருந்தேன். அப்படியே பாடிக்கொண்டும் நடுங்கிக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டும் சென்னைக்கு முழு இரவிலும் பயணம் செய்துவிட வேண்டும் என்பது என் திட்டம். தூறலும் தூரத் தெரியும் வானமுமாக பயணம் பிடித்தமானதாக இருந்தது.

சேலத்தைக் கடக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. சேலத்துக்கும் ஆத்தூருக்கும் இடையில் ஊர்களே இல்லாத, நடமாடும் மனிதர்களே தென்படாத இரு பக்கங்களும் மரங்கள் மட்டும் உள்ள சாலையில், 'ஆகட்டும்டா தம்பி ராஜா, நடராஜா... மெதுவா செல்லய்யா...’ போன்ற பழைய பாடல்களை புதுராகத்தில் ரீமேக் செய்து பாடியபடி போய்க்கொண்டிருந்தபோதுதான் அதைப் பார்த்தேன்.

மழைத் தூறிக்கொண்டிருக்கும் அந்த ராத்தியில் ஆள் நடமாட்டம் இல்லாத அந்தச் சாலையில் மஞ்சள் புடவையில் ஒரு பெண் நடந்து போய்க்கொண்டிருந்தாள். கடந்து போகும் பெரியப் பெரிய வாகனங்களின் ஒளியில் தெளிவாகத் தெரிந்தாள். அவள்  இளம் பெண். 25 வயது இருக்கலாம். அவள் எந்த வாகனத்தையும் மறிக்கவில்லை. எந்த உதவியும் கேட்கவில்லை. யாரையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. யாரையும் தொந்தரவு செய்யாமல் சாலையில் ஓரமாக நடந்து போய்க்கொண்டிருந்தாள். எப்படி இவ்வளவு நேரத்துக்கு இந்த மழையில் ஒரு பெண் தனித்துப் போக முடியும்? அவளை வேகமாகக் கடப்பதா, பின்தொடர்வதா, அப்படிக் கடக்கும்போது கை நீட்டி மறித்தால், ஏதேனும் உதவி கேட்டால் என்ன செய்வது?

'இரவில் மஞ்சள் சேலையோ, சிவப்பு சேலையோ கட்டிய பெண் ஒருத்தி மறித்தால் நிற்கக் கூடாது’ என்று அம்மா சொன்னது நினைவுக்கு வர, கழுத்துப் பிடிபட்ட சேவலாக 'உடல்’ சிலிர்த்துக் கூவியது. வேகமாக வண்டியைத் திருகினேன். எனக்கு நன்றாகவே தெரிகிறது, என் பைக் 80 கிலோமீட்டர் வேகத்தையும் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. குளிர்ந்த காற்றும் அதீதத் தூறலுமாக உடல் வேகமாகக் கரைந்தோடுவதுபோல் இருந்தது. ஆனால், அந்தக் காற்றின் சிறு அசைவுகூட இல்லாமல், முதல் முறை என் கண்ணில் தட்டுப்பட்டபோது எப்படி நடந்தாளோ அப்படியே அந்தப் பெண் அதே வேகத்தில் பொடி நடையாக எனக்கு முன்பாகவே நடந்து போய்க்கொண்டிருந்தாள். ஆடி அசைந்து நடந்துபோகும் அவளை, 80 கிலோமீட்டர் வேகத்தில் போய்க்கொண்டிருந்த நான் கடக்க முடியாமல் தவிப்பது தெரிந்தபோது, வண்டியோடு சேர்ந்து உடலும் அச்சத்தில் நடுங்கியேவிட்டது.

சாலையில் ஒரு சிறு ஊர் வரும்வரை அந்தப் பெண் எனக்கு முன் நடந்துகொண்டே இருந்தாள். அந்த ஊரில் உள்ள டீக்கடையில் தெரிந்த சின்ன பல்பு வெளிச்சத்தில் போய் அவள் மறைந்தாள். ஆமாம்... ஆச்சர்யம், அந்த மஞ்சள் சேலைப் பெண்ணை அதற்குப் பிறகு காணவில்லை. மழையைவிட வியர்வை உடலைத் தெப்பலாக நனைத்திருந்தது. டீக்கடையில் வண்டியை நிறுத்தினேன். இவ்வளவு நேரம் கண்டது அத்தனையும் ஏதோ ஒரு சினிமாவிலிருந்து புத்திக்குள் தங்கிவிட்ட காட்சியின் பிரமை என்று நம்புவதற்காக, நம்பி அச்சத்தைப் போக்குவதற்காக, உதடும் உள்ளமும் சுடச்சுட ஒரு தேநீர் குடித்தேன்.

அந்த டீக்கடையில் ஒரு பெரியவர் மட்டும்தான் இருந்தார். அவர் உடலில் எனக்குத் தெரிந்த எல்லா முடிகளுமே வெள்ளையாகத்தான் இருந்தது. எங்கிருந்தோ வந்து ஒற்றை ஆளாக நடுங்கும் உடலோடும், எதையோ கண்டு கசங்கிய கண்களோடும் டீ குடித்துக்கொண்டு இருந்த என்னையே பார்த்துக்கொண்டிருந்தார் பெரியவர்.  

'ஐயா... நான் வர்ற வழில ஒரு பெண்ணைப் பார்த்தேன். யாருமே இல்லாம தனியா நடந்து போய்க்கிட்டு இருந்துச்சு!’

'எங்கே போய்க்கிட்டு இருந்துச்சு?’

'தெரியலங்கய்யா. எனக்கு முன்னாடியே போய்க் கிட்டு இருந்துச்சு. அப்புறம் இந்த ஊருக்குப் பக்கத்துல வந்ததும் உங்க டீக்கடை பல்ப் வெளிச்சத்துல காணாமப்போய்டுச்சு!’

மறக்கவே நினைக்கிறேன் - 24 - 24

'நினைச்சேன் தம்பி... உங்க முழி தண்ணிப் பாம்பு மாதிரி முங்கி முங்கி முழிக்கும்போதே நினைச்சேன். நீங்க மஞ்சனத்திய பார்த்திருப்பீங்கன்னு. எல்லாரும் இருட்டுலதான் மறைவாங்க. வெளிச்சத்துல மறையிறானா, அவ மஞ்சனத்தியாத்தான் இருப்பா!’

இதற்குப் பிறகு, பெரியவர் என்னை வெளியே நின்று பேச அனுமதிக்கவில்லை. வலுக்கட்டாயமாக கடைக்குள் கூட்டிப் போய்விட்டார். தலையைத் துவட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டு, நெஞ்சு நடுக்கம் போக்க இன்னுமொரு தேநீரைக் கொடுத்துவிட்டு கடையை இழுத்து மூடிவிட்டார். அப்புறம் பேய்க் கதை சொல்லும் அம்மாவின் குரலில் பெரியவரும் பேசத் தொடங்கினார்.

'எங்க ஊரு பொண்ணுதாங்க அந்த மஞ்சனத்தி. யாரு பேரு வைச்சானு தெரியலை. எப்ப எங்க ஊருக்குள்ள வந்தா, எப்படி வந்தா எதுவும் எங்களுக்குத் தெரியாது. அப்பனும் ஆத்தாளும் இல்லாம ஒத்தையா ஊருக்குள்ள அலைஞ்சுக்கிட்டு இருந்தா. கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லாத பொண்ணு. யார் எந்த வேலை சொன்னாலும் செய்யும். சாப்பிட ரெண்டு இட்லி கொடுத்தா, என் டீக்கடைக்கு தண்ணி எடுத்துக் கொடுக்கும். ஆனா, அது இஷ்டத்துக்குத்தான் செய்யும். ஊர் பொம்பளைங்க வேலைக்குப் போகும்போது, குழந்தைங்களை அதுகிட்ட விட்டுட்டுப் போவாங்க. பெத்தவங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் பிள்ளைங்கள அழவுடாம ஆடிப் பாடி விளையாட்டுக் காட்டி நல்லாப் பாத்துக்கும். சமைஞ்ச பிள்ள ஆடிக்கிட்டும் பாடிகிட்டும் பேசிக்கிட்டும் தனியாத் திரிஞ்சா, பொறுக்கிப் பயலுவ சும்மா இருப்பானுங்களா? ஆனா, எவன் என்ன செஞ்சாம்னு அதுக்குச் சொல்ல தெரியாது. ஆள் தெரியும்; பேர் தெரியாது. திடீர்னு சில நாள் ஊர் சந்தியில நின்னு கத்தும்; கதறி அழும். ஆனா பாவம், நடந்த கதையைச் சொல்லத் தெரியாது. அப்புறம் எதாவது குழந்தை சிரிச்சுட்டே வந்தா, அதுகூடச் விளையாடப் போயிடும். அப்படியரு பொண்ணுப்பா அது!’ சின்னதாக இடைவெளிவிட்டு தொண்டையைச் செருமிக்கொண்டு தொடர்ந்தார்.

'ஒரு நாள் அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை. பார்த்துக்கச் சொல்லி விட்டுட்டுப்போன ஒரு குழந்தையோட மூக்கை கடிச்சிவெச்சுட்டா. மூக்கு இல்லாம மொட்ட மூக்கா புள்ள கெடந்து கதறுது. ஊர்க்காரன், புள்ளையப் பெத்தவன் எல்லாரும் சும்மாவா இருப்பாங்க? மஞ்சனத்திக்கு லூஸு முத்திப் போச்சுனு சொல்லி அடி... அடின்னு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான்கூட மூக்கு இல்லாத புள்ளையப் பாத்த கோபத்துல அவளை ரெண்டு மிதிமிதிச்சது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு தம்பி. ஆனா, பாரு... அவ்வளவு அடிச்சும் அவ அழவே இல்லை. அப்படியே அட்டகாளி மாதிரி நாக்கைக் கடிச்சிக்கிட்டு நின்னா. அடிச்சவங்க எல்லாரையும் விலக்கிவிட்டுட்டு, அதுநாள் வரைக்கும் எதுவும் பேசாதவ கேட்டா பாரு ஒரு கேள்வி... ஊர்ல எல்லா பொம்பளைங்களும் அப்படியே ஆடிப்போய்ட்டாளுக.

'உங்க புள்ள மூக்க கடிச்சதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம் வருதே... இந்த ஊர்ல எவ்வளவு பேரு என்னை எங்கெங்கே கடிச்சிருப்பாங்க... அடிச்சிருப்பாங்க. அப்போ ஏன் யாரும் எதுவும் கேட்கலை?’

ஒரு பொம்பளை வாயைத் திறக்கல. அதுக்கு அப்புறம் எங்க ஊரு ஆம்பிளைங்க அவள அடிச்ச அடி இருக்கே... யப்பா! அந்தச் சாமியே பொறுக்காதுப்பா... அவ்வளவு அடி. அவளால அடி தாங்க முடியலை. ஓட ஆரம்பிச்சிட்டா. ரோட்ல ஓடுனவளை விரட்டி விரட்டி அடிச்சானுங்க. கல்லெறிபட்ட நாயாட்டம் உசுரை கைல பிடிச்சுக்கிட்டு ஓடுனுவதான். எங்க போனா, என்ன ஆனானு ரெண்டு வருஷமா எந்தத் தகவலும் இல்லை. அப்புறம் உங்கள மாதிரி வண்டில போறவங்க, பக்கத்து ஊர்க்காரங்க, எல்லாரும், 'ராத்திரி உங்க ஊர் பக்கத்துல மஞ்ச சேலை கட்டிக்கிட்டு, ஒரு பொண்ணு அலையுதே’னு சொன்ன பெறவுதான் எங்களுக்கு அது மஞ்சனத்தியாதான் இருக்கும்னு சந்தேகம் வந்துச்சு. எல்லோரும் தேடிப் போனோம். பகல்லயும் தேடினோம். ராத்திரி முச்சூடும் தேடினோம். எங்க கண்ணுக்கு மட்டும் அகப்படவே இல்லை தம்பி. ஒரு வருஷம், ரெண்டு வருஷமில்லை. நாலு வருஷமாத் தேடினோம். மத்தவங்க கண்ணுக்குத் தெள்ளத் தெளிவா மஞ்ச சேலையோட தெரிஞ்ச அவ, எங்க கண்ணுக்கு மட்டும் இன்னைக்கு வரைக்கும் தெரியவே இல்ல தம்பி!

ஊருக்குள்ள குழந்தைங்களுக்குத் திடீர்னு காய்ச்சல் வந்தாலும் சரி, சளி பிடிச்சாலும் சரி அவதான் காரணம்னு எல்லாரும் பயப்படுற அளவுக்கு ஆகிடுச்சி. அப்புறம் வேற வழியில்லாம, மஞ்சனத்தி கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டுரலாம்னு ஊர் கூடி முடிவெடுத்தோம். நீங்க அந்தப் பொண்ண மொதமொத எங்க பார்த்தீங்களோ, அங்க ஒரு மஞ்சனத்தி மரம் நிக்கும். அப்போ சிறுசா இருந்துச்சு. அந்த மரத்துக்குக் கீழ ஒரு கூடாரத்தைப் போட்டு தீபத்தை ஏத்தி வெச்சு குழந்தை உருவத்துல ஒரு மரப்பாச்சி செஞ்சுவெச்சு, மொத்த ஊரும் கும்பிட்டுட்டு வந்தோம் தம்பி. அவ இருக்காளா செத்துட்டாளானு இன்னும் தெரியாது. இருந்தாலும், அவ பேயா பிசாசா இருக்கக் கூடாதுனு வலுக்கட்டாயமா கால்ல விழுந்து சாமியாக்கிட்டு வந்தோம் தம்பி. ஆமா... எங்களுக்கு மரப்பாச்சி மஞ்சனத்தி தம்பி அவ!’

மறக்கவே நினைக்கிறேன் - 24 - 24

பெரியவர் சொல்லி முடிக்கும்போது மழை விட்டிருந்தது. அந்த மொத்த இரவையும் தவளைகள் குத்தகைக்கு எடுத்ததுபோல இருந்தது சத்தம். புளியங்குளத்தில் அரைக்கால் சட்டைச் சிறுவனாக மரமேறி குரங்காட்டம் விளையாடிய அத்தனை மஞ்சனத்தி மரங்களும், அடிபட்டு அழுததற்காக அம்மா சுட்டுக்கொடுத்த மஞ்சனத்திப் பழங்களுமாக முழு இரவும் மஞ்சனத்தி வாசத்தால் நிரம்ப உறங்கிப்போனேன்.

காலையில் எழுந்து சென்னைக்குப் போகாமல் மறுபடியும் கோயம்புத்தூரின் திசைக்கு வண்டியைத்  திருப்பியதைப் பார்த்து பெரியவர் கேட்டார்,

'என்ன தம்பி அங்கிட்டுப் போகாம இங்கிட்டுப் போறீங்க?’

'இல்லங்க... அந்த மஞ்சனத்தி மரத்தைப் பார்க்கணும் போல இருக்கு. அதான் போறேன். நீங்களும் வாங்களேன்’ என்றதும் பெரியவரும் வந்து ஏறிக்கொண்டார். பெரியவர் சொன்னதைப் போல, ஒற்றை மஞ்சனத்தி மரம். அதற்கு  அடியில் மண்ணால் கட்டப்பட்ட சிறு கூடம். அதற்குள் ஒரு விளக்கு. அதற்குப் பின்புறம் அந்த மரப்பாச்சிப் பொம்மை இருந்தது. யாருக்கோ பயந்து ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு சிறுபெண் குழந்தையின் முகச் சாயலில் இருந்த அந்த மரப்பாச்சிப் பொம்மையில் சுற்றியிருந்த மஞ்சள் பட்டுத் துணிதான் நேற்று மழையின் ஊடாக நான் பார்த்துச் சிலிர்த்த மஞ்சள் துணியாக இருக்கும் என்று பெரியவர் சொன்னார். உள்ளிருந்து ஊசிக் குத்தியதுபோல் உடல் நடுங்கி இரு கைகூப்பி மஞ்சனத்தி மரத்தை நான் வணங்கியது, மஞ்சனத்தியின் மீதுள்ள இரக்கத்தாலா அல்லது பயத்தாலா என்பது இன்று வரை எனக்குத் தெரியாது!

- இன்னும் மறக்கலாம்...