##~##

'அவங்களுக்கென்ன சந்தோஷமா இருக்காங்க. நம்ம நிலைமைதான் எப்பவும் கஷ்ட திசையிலயே இருக்கு’ என்ற அங்கலாய்ப்பு நம்மில் பலருக்கு இருக்கிறது.

'காலையில சீவின தலை சாயங்காலம் வரை கலையாம சொகுசா இருந்துட்டுப் போறாங்களே’ என்று நானும்கூட சில பேரை நினைத்தது உண்டு... பொறாமைப்பட்டதும் உண்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படி நான் நினைத்த ஒருவரை, இரண்டு நாட்களுக்கு முன் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பிரபல நடிகர் அவர். ஜாலியான வாழ்க்கை, கை நிறைய சம்பளம், பேட்டிகள், பாராட்டுகள் என, மனுஷன் சந்தோஷமாக இருக்கிறார் என்பது என் கணக்கு. ஆனால், ஒரு மணி நேர சந்திப்பில் அவர் புலம்பியதுதான் நிறைய.

பாஸ்வேர்டு்

  'என்னங்க வாழ்க்கை இது? ஒரு நல்ல நாள் வீட்டுல இருக்க முடியலை. இன்னைக்கு இருக்குற வாழ்க்கை நாளைக்கு இருக்குமானு திக்திக்னு இருக்குது. சராசரி சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க முடியலை. காலையில வேலைக்குப் போனோமா, சாயந்திரம் வந்து பிள்ளைங்களைக் கொஞ்சிட்டு சந்தோஷமா இருந்தோமானு அமைதியான ஒரு வாழ்க்கை எனக்கு அமையலங்க. அரசாங்க விதியை மீறுறோம்னு தெரிஞ்சாலும் கார் கண்ணாடியில கறுப்பு ஃபிலிமை ஒட்டிக்கிட்டு போறப்ப, ரோட்ல ஹெல்மெட் போடாம பைக்ல போறவனைப் பார்த்தா பொறாமையா இருக்கு’ என்று இதுவும் இன்னமுமாக ஏதேதோ புலம்பினார்!

'இவருக்கு வாழ்க்கையில என்ன கஷ்டம் இருக்கப்போகுது’ என்று நினைத்த என் எண்ணத்தில் சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்தது அவரது ஒவ்வொரு வார்த்தையும்!  

பாஸ்வேர்டு்

'அமெரிக்காவுல உட்காந்துகிட்டு லட்ச லட்சமா சம்பாதிக்கிறான். ஒரு ஆத்திர அவசரத் துக்குக் கேட்டா, பிச்சைக்காரன் வேஷம் போடுறான். நீயே என்னன்னு கேளு உன் ஃப்ரெண்டுகிட்ட’ என்று நண்பனின் மாமா என்னிடம் கடுப்படித்தார். 'ஏன் மாப்ள... மாமாவுக்குக் கொஞ்சம் கொடுத்தாத்தான் என்ன?’ என்ற என் கேள்விக்கு, தலையில் கை வைத்துக்கொண்டு அரற்ற ஆரம்பித்துவிட்டான். 'வீட்டுக்கு, காருக்கு கடன் கட்டிக்கிட்டு தினசரி செலவைப் பார்த்துக்கிட்டு நான் படுற அவஸ்தை எனக்குத்தான் தெரியும்!’ என்றவனை, 'அமெரிக்காவுல பேங்க் பேலன்ஸ் எக்குத்தப்பா வைச்சிருப்பானே.. ஏன் நம்மகிட்டகூட இவன் பொய் சொல்றான்?’ என்ற சந்தேகத்தோடு பார்த்தேன். அதைப் புரிந்துகொண்டு அவனே விளக்கம் அளித்தான்.

'நீங்க நினைக்கிற மாதிரிக் கிடையாதுடா. டாலர் டாலரா சம்பளம் வாங்கினாலும் கைக்கும் வாய்க்குமே சரியா இருக்கு. ஒரு தடவை ஊருக்கு வந்துட்டுப் போனா, ஒரு வருஷ சேவிங்ஸ் காலி ஆகிடும். புள்ளைங்க ஆசைப்பட்டு ஒரு பொருள் கேட்டாக்கூட வாங்கிக் கொடுக்க முடியாது. ஆயிரம் கணக்குப் பார்க்கணும். ஏதாச்சும் ஒரு எமர்ஜென்சினா, நம்மளை இந்த ஊரைவிட்டு உடனே துரத்திடுவானுங்க. அப்போ பொட்டி படுக்கையோட ஊருக்கு வர்றதுன்னாக்கூட நாலஞ்சு லட்சம் கையில எப்பவும் இருக்கணும். இந்த லட்சணத்துல மாமா கேட்டாரு, சித்தப்பா கேட்டாருனு உடனே தூக்கிக் கொடுக்க முடியாது!’ - சொல்லியதோடு அல்லாமல் அந்த காபிஷாப்பில் உட்கார்ந்துகொண்டு அவன் ஒரு கணக்குப் போட்டுக் காட்டினான்.

என் கையில் இருந்த கொஞ்சம் டாலர்களையும் அவனிடம் கொடுத்துவிட்டு வரலாமா என்று யோசிக்கிற அளவுக்கு கழுத்தை நெறித்தது அந்தக் கணக்கு. கிராமத்தில் இருக்கும் மாமா அளவுக்குக்கூட அவன் வசதியாக இல்லை என்ற நிதர்சனம் உரைத்தது.

'புலி வாலைப் பிடிச்ச கதை சார்... கிடைச்சதைத் தக்கவைச்சுக்க தினம் தினம் நான் படுறபாடு எனக்குத்தான் தெரியும். அமைதியா, தனியா இருப்போம்னு எங்கேயாவது வெளியே போனா, அங்கேயும் சிரிச்சமேனிக்கு போஸ் கொடுங்கனு நாலு பேர் வந்து நிப்பாங்க!’ என்பது அந்த நடிகரின் புலம்பல். 'நல்லது கெட்டதுக்கு ஆள் இல்லாம, கான்க்ரீட் காட்டுல மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்’ என்று மருகுகிறான் அமெரிக்க நண்பன். என் கண் வழியே பார்க்கும்போது ஆனந்தமாகத் தெரியும் அடுத்தவரின் வாழ்க்கை, அவர்கள் கண் வழியே பார்க்கிறபோது சுமையாகத் தெரிகிறது.

பாஸ்வேர்டு்

'அடுத்தவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்’ என்பதில், பொருளாதாரரீதியாக வளமானவர்களை மட்டும் நம் மனசு கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. எலுமிச்சம்பழ லோடு அடிக்கும் வேனில் பழக் குவியலின் மீது காலை மடக்கிக்கொண்டு படுத்துக்கிடக்கும் 15 வயது சிறுவனைப் பார்த்து, 'எவ்வளவு நிம்மதியாத் தூங்குறான் பாரு. நம்ம பொழப்புதான் நாய் பொழப்பு!’ என்று உடன் வரும் நண்பன் சலித்துக்கொள்கிறான். 'பேங்க் வேலை, நிம்மதியான வாழ்க்கை’ என்று நண்பனைப் பற்றி நான் மனதுக்குள் பொருமிக்கொண்டிருந்த பிம்பம், அப்போது உடைபடுகிறது!

ஏழு ஏக்கர் தென்னந்தோப்பில் இளநீர் பறித்துக் குடித்துவிட்டு ஏ.சி. காரில் வரும் அந்தப் பண்ணையார் சாலையோரம் கூலி வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து, 'ம்ம்ம்... இவங்க பொழப்புதான்யா சந்தோஷமான பொழப்பு. மம்பட்டிய எடுத்து ரெண்டு கொத்துக் கொத்திட்டு நிழல்ல போயி நிம்மதியா உட்கார்ந்து கஞ்சியைக் குடிச்சுக்கலாம். கவர்மென்ட் காசு 100 ரூவா கைல வந்துரும்’ என்று பொருமுகிறார்.  

இந்த வாழ்க்கைப் பயணமே, நிம்மதியையும் மகிழ்ச்சியையும் இலக்காகக்கொண்டதுதான். ஆனால், அப்படி மகிழ்ச்சியாக இருக்க ஏதேனும் திட்டமிட்டுச் செயல்படுகிறோமா?  மெனக்கெட்டு துயரமான விஷயங்களை மனதில் அசைபோட்டு நம்மை நாமே துன்புறுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.

தமிழருவி மணியன் ஐயா ஒருமுறை சொன்னார்... 'வாராவாரம் செவ்வாய்க்கிழமை எனக்கான நாள். அன்றைக்கு என் வாழ்வில் என் பிரியமான விஷயங்களைத் தவிர வேறு எதற்கும் இடம் இல்லை. நானும் நான் நேசிக்கும் புத்தகங்களுமாக அந்த நாளை ஆனந்தமாக அனுபவிப்பேன். தொலைபேசியைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு தொடர்புகளில் இருந்து துண்டித்துக்கொண்டு, எனக்காக என் மனசுக்காக அந்த நாளை வைத்துக்கொள்வேன்!’ என்று. தனக்கு மகிழ்ச்சி அளிக்கும்  விஷயத்தைச் செய்வதன் மூலம் நிம்மதி மற்றும் அமைதியை நாடும் மனசு எவ்வளவு பேருக்குக் கிடைத்துவிடுகிறது.

செய்தி ஊடகத்தில் பணிபுரியும் என் சீனியர் ஒருவரை, ஞாயிற்றுக்கிழமையில் யாரும் அணுக முடியாது. 'அந்த நாள் என் குடும்பத்துக்கும் எனக்குமானது. அவசரமாக என்னை அணுக வேண்டியவர்களுக்கு என் வீட்டுத் தொலைபேசி எண் தெரியும். நீங்கள் நினைக்கக்கூடிய அளவுக்கு இந்த உலகம் உங்களைத் தேடவில்லை!’ என்று தெளிவாகப் பேசுவார். அவரைத் தாண்டி பொருளாதாரரீதியாக வளர்ந்தவர்களை அவர் மகிழ்வோடு பார்த்து மனநிறைவு அடைவதைக் கண்டு எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்!  

பாஸ்வேர்டு்

தனக்கான சந்தோஷத்தைப் பராமரித்துப் பாதுகாத்துக்கொள்ளத் தெரிந்தவன், 'அடுத்தவன் நம்மைவிட சந்தோஷமாக இருக்கிறான்’ என்ற கழிவிரக்கத்தோடு காலம் தள்ளுவது இல்லை. மீடியாவில் நன்கு வளர்ந்துவரும் காலகட்டத்தில் வேலையை உதறிவிட்டு, தனக்குப் பிடித்த  பி.ஹெச்டி-யைப் படிப்பதற்காகக் கிளம்பிப் போனான் அவன். 'இது தேவையில்லாத வேலை’ என்று சொன்ன நண்பர்களிடம், 'எனக்குப் பிடிச்ச விஷயத்தைச் செய்யப் போறேன்’ என்று தயக்கமில்லாமல் சொன்னான். வெளிப்பார்வையில் (அதாவது, நம் பார்வைக்கு!) அவன் சிரமப்படுவதுபோல தெரிந்தாலும், எப்போதும் உற்சாகம் குறையாமல்தான் பேசுகிறான். 'ரொம்ப ஜாலியா இருக்கேன் மாப்ள... நல்ல ஃப்ரெண்ட்ஸ், நல்ல கைடு’ என்று ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் பூரிக்கிறான். அவனுடைய மீடியா ஜூனியர்கள் மேலே மேலே வளர்வதைப் பார்த்து ஆனந்தப்படுகிறான். அவனுடைய மகிழ்ச்சியையும் நிம்மதியையும் யாராலும் களவாட முடியவில்லை.

நாம் வெளியில் இருந்து பார்க்கிறபோது, அடுத்தவர் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதாகவே படுகிறது. நம்மையும் நாலு பேர் அப்படித் தான் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அதனால், அடுத்தவரைப் பற்றி நினைப்பது போல நம்மைப் பற்றியும் நாம் உயர்வாக நினைத்துக்கொள்வதில் தவறேதும் இல்லை!

'பாத்திரச் சீட்டு கட்டினதுல பரிசு விழுந்திருக்குடா. எலெக்ட்ரிக் குக்கர் வாங்கப் போறேன்’ - ஒவ்வொரு விஷயத்திலும் சந்தோஷத்தின் புள்ளியைத் தேடும் அந்த நண்பன் போன் பண்ணுகிறான். 'ச்சே... ஒரு எலெக்ட்ரிக் குக்கர் இவனை இவ்வளவு சந்தோஷப்படுத்துதே... எப்படி?’ என்ற யோசனைக்குள் மூழ்குபவனை, எத்தனை குக்கர் வந்து விசிலடித்தாலும் சந்தோஷப்படுத்த முடியாது!

- ஸ்டாண்ட் பை...