Published:Updated:

"எனக்கு திமிர் பிடிக்கும்!”

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள் வாசகர் கேள்விகள்

"எனக்கு திமிர் பிடிக்கும்!”

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள் வாசகர் கேள்விகள்

Published:Updated:
##~##

ஹரிகிருஷ்ணன், நாமக்கல்.

''உங்க குருநாதர் பாலசந்தர், உங்களை சின்னத்திரையில் நடிக்க அழைத்தால் ஒப்புக்கொள்வீர்களா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''நான் நடிகன். நடிக்க எங்கே வாய்ப்பு கிடைச்சாலும் நடிப்பேன். 'சமூக விழிப்பு உணர்வுக்காக ஒரு தெரு நாடகம் பிரகாஷ்’னு கூப்பிட்டாக்கூட, பிடிச்சிருந்தா போய் நடிப்பேன். பாலசந்தர் சார், சினிமாவில் என் முதல் முகவரி. 'நீ நல்லா வருவடா’னு என்னை முதல்ல ஆசீர்வதிச்ச பெரிய மனசுக்காரர். குருநாதர் கூப்பிட்டா, அவர் வீட்டு வாசல்ல கூர்க்காவாகூட நிப்பேன்னு முன்னாடியே சொன்னவன்தான் நான். இப்பவும் அதுல எந்த மாற்றமும் இல்லை!''

சண்முகம், குமாரபாளையம்.

'' 'டூயட்’ காலம் முதல் கவனித்து வருகிறேன்... கடந்த 10 வருடங்களில் பிரகாஷ்ராஜின் திமிர், ஈகோ கொஞ்சம் குறைந்திருக்கிறது அல்லது இன்னும் பக்குவப் பட்டிருக்கிறீர்கள்... என்ன காரணம்?''

''கோயம்புத்தூரில் ஒரு வாசகர் கூட்டம். வாசகர்கள் கேள்வி கேட்கணும். அப்ப நான் என்ன நினைக்கிறேனோ, அதை உடனே பதிலா சொல்லணும்.

"எனக்கு திமிர் பிடிக்கும்!”

'உங்க இளமையின் ரகசியம் என்ன?’னு கேட்டார் ஒருத்தர். நான் யோசிக்கவே இல்லை. 'உங்களோட அறியாமை’னு பட்டுனு சொன்னேன். 'ரொம்பத் திமிரான பதில் இது’னு ஒரு விமர்சனம் வந்துச்சு. 40 வயசுல ஒரு ஹீரோ கல்லூரி மாணவனா நடிச்சு, அந்தப் படம் ஹிட் ஆகுதுன்னா, அது மக்களோட அறியாமைதானே?

போலியா இருக்கிறதைவிட, திமிரா இருக்கிறதுல எனக்கு சம்மதம்தான். இந்தத் திமிர், சாகிற வரை என்கூட இருக்கும்னுதான் நினைக்கிறேன். அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏத்த மாதிரி 'டிகிரி’ கூடக் குறைச்சலா இருந்தாலும், திமிர் எப்பவும் இருக்கும். 'நீ ஒண்ணுமே இல்லை’ங்கிறதுதான் திரும்பத் திரும்ப வாழ்க்கை சொல்லித்தர்ற பாடம். அதனால, 'நான் யார் தெரியுமா?’ங்கிற ஈகோ எனக்கு எப்பவும் பிரச்னையா இருந்தது இல்லை!''

உமா மகேஸ்வரி, கோவை.

''ஆண்கள், தங்களின் மனைவியை விவாகரத்துசெய்யலாம்; மறுமணம் செய்துகொள்ளலாம்; தங்கள் காதலிகளைப் பற்றி பொது இடங்களில் பேசிச் சிலாகிக்கலாம். ஆனால், அதையே பெண்கள் செய்தால், வேறு பட்டம் கட்டி நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்களே... ஆணாதிக்கத்தின் மோசமான முகம் அல்லவா இது?''

''ஆதிக்கம் செலுத்துறதுன்னு வந்தாலே, ஒருத்தர் மத்தவங்களோட சுதந்திரத்தில், உரிமையில் தலையிடுறதுன்னுதான் அர்த்தம். ஆனா, ஆணாதிக்கம் இருக்கே... அது பெத்த தாய், கட்டிய மனைவி, கூடப் பிறந்த சகோதரி, தனக்குப் பிறந்த பெண், சக தோழினு மனசுக்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமான பெண்களையே கிள்ளுக்கீரையா நினைக்கவைக்கும்.

'ஒரு ஊர்ல நூறு ஜோடி கணவன்-மனைவி இருந்தா, அதுல ஒருத்தர் இன்னொருத்தர் மனைவியோட தொடர்புவெச்சிருப்பாங்க. அதைப் பெருமையா மத்தவங்ககிட்ட ஆண்மையின் அடையாளமா சொல்லுவாங்க. ஆனா, ஒவ்வோர் ஆணும், தன் மனைவி பத்தினியா இருக்கணும்னு ஆசைப்படுவான்’. பாரதியார், ஆணாதிக்கம் எப்படிப்பட்டதுனு இந்த உதாரணத்துல சுளீர்னு தோலுரிச்சுக் காட்டுறார்.

ஆணாதிக்கம், மோசமானது மட்டுமில்லை சகோதரி... ரொம்ப சுயநலமானது. அதனாலதான், தன்னைக் காதலிச்ச பெண் ஏமாத்திட்டானு முகத்துல ஆசிட் ஊத்துறான். தன்னை ஏமாத்தின ஆண்கள் முகத்துல ஆசிட் ஊத்தணும்னு பெண்கள் நினைச்சா, எல்லா ஆண்களும் முகம் கருகித்தான் அலையணும்!

பெண், நம்ம சமூகத்துக்கு ஒரு பக்கம் புனிதம்; இன்னொரு பக்கம் போகப்பொருள். ரெண்டும் இல்லாம, அவ எப்போ பெண்ணா மட்டும் பார்க்கப்படுறாளோ, அப்பதான் இந்தச் சிக்கலுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும்!''

கே.நாகலிங்கம், கோவை.

''சமீபத்தில் கேட்டதில் ரசித்த பாடல் வரிகள்?''

''இசைஞானி இளையராஜா இசையில், நான் இயக்கும் 'உன் சமையல் அறையில்..’ படத்துக்கு பாடல் பதிவை இப்போதுதான் முடிச்சோம். அதுல ஒரு பாட்டுக்கு கவிஞர் பழநிபாரதி,

'தேடல் ஒரு இன்பம்.. தேடுவது துன்பம்’னு எழுதியிருந்தார்.

தேடல் இல்லாமப் போயிட்டா, வாழ்க்கை தேங்கிப்போயிடும். 'அடுத்தது என்ன?’னு தேடுறதுதான் வாழ்க்கையோட இலக்கா இருக்கணும். 'தேடல்’ என்ற குறிக்கோள் நம்ம வாழ்க்கையை அழகா மாத்திடும். ஆனா, தேடிப்போற பயணம்... அது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு துன்பம் தரும்.

அந்த நாலு வார்த்தையில நிறைய அர்த்தம் இருக்குனு தோணுச்சு. ரசிச்சு யோசிக்கவெச்ச வரிகள்!''

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

 ''எம்.என்.நம்பியார், அசோகன், பி.எஸ்.வீரப்பா, எம்.ஆர்.ராதா ஆகியோரில் தங்களுக்குப் பிடித்த வில்லன் நடிகர் யார்? ஏன்?''

''எம்.ஆர்.ராதா வில்லத்தனத்தை ரசிக்கிற மாதிரி செஞ்சவர். அவர் நடிச்ச, 'ரத்தக்கண்ணீர்’ படத்தை இந்தி, தெலுங்கு மொழிகளில் எடுக்க முயற்சி செஞ்சாங்க. 'அவர் மாதிரி நடிக்க ஆள் இல்லை’னு அந்த ரீமேக் முயற்சியையே கைவிட்டுட்டாங்க. இப்பவும் அவர் நடிச்ச படம் டி.வி-ல வந்தா, எந்த அவசர வேலை இருந்தாலும் ரெண்டு நிமிஷமாவது நின்னு பார்த்துட்டுத்தான் போவேன்!''

"எனக்கு திமிர் பிடிக்கும்!”

சந்தான முருகேசன், போடி.

''நீங்க நல்லவரா... கெட்டவரா?''

''உங்க கேள்வி, மகாபாரத காலத்துக் கேள்வி. துரியோதனனையும் தர்மனையும், அவங்க கண்ல படுறவங்கள்ல எத்தனை பேர் நல்லவங்க, எத்தனை பேர் கெட்டவங்கனு ஒரு சர்வே எடுத்துட்டு வரச் சொன்னாங்களாம். துரியோதனன் கண்ல மாட்டின எல்லார்கிட்டயும் ஒரு கெட்ட விஷயமாவது இருந்துச்சாம். 'நான் பார்த்ததுல ஒருத்தன்கூட நல்லவன் இல்லை’னு சொல்லிட்டான் துரியோதனன். தர்மன் கண்ல பட்ட எல்லார்கிட்டயும் ஒரு நல்ல குணமாவது இருந்திருக்கு. அதனால, 'நான் கெட்டவங்களையே பார்க்கலை’னு சொன்னாராம் தர்மன்.

நிறையும் குறையும்தான் மனிதர்களோட இயல்பு. அதுதான் அழகு. நான் மட்டுமில்லை... நீங்க உட்பட எல்லாருக்குள்ளயும் நல்லவனும் இருக்கான்; கெட்டவனும் இருக்கான்!''

குருபிரசாத், விசாகப்பட்டினம்.

 ''நீங்கள் ரசித்து தயாரிக்கும் படம், எதிர்பார்த்த அளவு ரசிகர்களைச் சென்றடையவில்லையென்றால், ரசிகர்களின் ரசனை மீது கோபம் வருமா?''

''நான் தயாரிக்கும் படம்னு மட்டும் இல்லை. ஒரு நல்ல படத்தை, மக்கள் ஆதரிக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அது நடக்காம போறப்ப, வருத்தம் வரும். அவ்வளவுதான்.

ஒரு படம் மக்களைச் சென்று சேர, இன்னைக்கு அது நல்ல படமா மட்டும் இருந்தா போதாது. அதுக்கு விளம்பரம் தேவைப்படுது. 100 ரூபாய் பொருளுக்கு  10 ரூபாய்க்கு விளம்பரம் செஞ்சா ஓ.கே. ஆனா, சினிமாவுல 200 ரூபாய் விளம்பரம் பண்ணவேண்டி இருக்கு. அதுதான் பிரச்னை. விமர்சனம் படிச்சிட்டு மக்கள், தியேட்டருக்கு வர ஒரு வாரத்துக்கு மேல ஆகிடும். அதுக்குள்ள படத்தை தியேட்டர்ல இருந்து எடுத்துடுவாங்க. அப்புறம் திருட்டு டி.வி.டி-லதான் பார்த்தாகணும்.

எல்லா சிக்கலும் தீர்ந்து ஒரு தீர்வு கிடைக்கும்னு நம்பிக்கையிலதான் தொடர்ந்து படம் தயாரிக்கிறேன். ஜெயிச்சாலும் தோத்தாலும் நம்பிக்கையை விட முடியாது இல்லையா?''

பாண்டியராஜன், சென்னை.

 ''நீங்கள் நாத்திகர் என்பதை அறிவேன். ஆனால், நீங்களும் மற்றவர்களைப் போலவே இந்து மத நம்பிக்கைகளை மட்டுமே விமர்சனம் செய்கிறீர்கள். ஏன் இந்தப் பாரபட்சம்? மற்ற மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்ட என்ன தயக்கம்?''

''என் அம்மா தீவிர கிறிஸ்டியன். 'காட் ப்ளஸ் யூ மை சைல்டு’னு அவங்க சொல்லும்போது, ஒரு சிஸ்டர் மாதிரியே இருக்கும். சமீபத்துல எங்க தோட்டத்துக்கு வெள்ளை அங்கி போட்டுக்கிட்டு ஒரு ஃபாதர் வந்திருந்தார். எங்க அம்மா, வாராவாரம் போற சர்ச்ல ஃபாதர் அவர். என் தோட்டத்துல இருக்கிற செடிகளை ஆசீர்வாதம் பண்றதுக்காக வந்திருக்கேன்னு சொன்னார்.

எல்லா செடிகள் மேலேயும் லேசா தண்ணியைத் தெளிச்சிட்டு, 'கடவுள் உன் தோட்டத்தை ஆசீர்வதிச்சிட்டார்’னு சொன்னப்ப, எனக்கு சிரிப்பு வந்துடுச்சி. என் அம்மாவுக்கு என் மேல கோபம். 'எல்லாருடைய தோட்டத்தையும் ஆசீர்வதிச்சா, நாட்ல காய்கறி விலையாவது குறையுமே’னு நான் சொன்னதும் என்னைத் திட்டினாங்க. 'இயேசுவே, என் பையன் அறியாமல் பிழை செய்கிறான். மன்னிச்சிடுங்க’னு பிரார்த்தனை பண்ணாங்க.

சின்ன வயசுல இருந்து இந்தச் சண்டை, என் வீட்ல நடந்துகிட்டேதான் இருக்கு. மூடநம்பிக்கை   கண்டிப்பா விமர்சிக்கப்பட வேண்டியதுதான். அது எந்த மதத்துல இருந்தா என்ன?''

எஸ்.ராமகிருஷ்ணா, ஆலத்தூர்.

"எனக்கு திமிர் பிடிக்கும்!”

 ''உங்களின் உண்மையான அக்கறையையும் மனதையும் கண்டுகொள்ளாமல், 'ஆயிரம்தான் இருந்தாலும் நீ தமிழனில்லை’ என்று உங்களை யாரேனும் காயப்படுத்தியது உண்டா? அது யார் எவரென்று சொல்லாவிடினும், என்ன நிகழ்வு என்று சொல்லுங்களேன்!''

''சில நேரங்கள்ல அப்படி, முட்டாள்தனமா யாராவது சொல்வாங்க. அதுக்கெல்லாம் காயப்பட்டா, அடிக்கடி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக வேண்டியிருக்கும்.

இலங்கையில் தமிழர்கள் மேல் அரசாங்கமே குண்டு போட்டு கொத்துக் கொத்தா மக்கள் இறந்துட்டு இருந்த நேரம். அந்த சமயம் அமெரிக்காவுல 'நியூஜெர்ஸி தெலுங்கு அசோசியேஷன்’ல என்னை சிறப்பு விருந்தினராக் கூப்பிட்டிருந்தாங்க. அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான தெலுங்கு மக்கள் கூடி இருந்த சபை அது. நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, 'போரில் அநியாயமா சாகடிக்கப்பட்ட மக்களுக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தலாம்’னு சொன்னேன். எல்லோரும் எழுந்து நின்னாங்க. 'நீங்க கர்நாடகா. தெலுங்கு நிகழ்ச்சிக்கு வந்திருக்கீங்க. தமிழர்களுக்கு எதுக்காக அஞ்சலி செலுத்துறீங்க?’னு 'புலனாய்வு’ செஞ்சு கேட்டார் ஒருத்தர்.

'சக மனுஷனா, யாரு வேணும்னாலும் இதைச் செய்யலாம். எந்த மொழியா இருந்தா என்ன?’னு நான் சொன்னேன். 'காவிரி நீர் பிரச்னை வரும்போதெல்லாம், 'உங்க கருத்து என்ன?’னு கேட்பாங்க. அரசியல்வாதிகளும், அறிஞர்களும், மக்களும் கருத்துச் சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தை, ஒரு நடிகன்கிட்ட ஏன் கேட்கிறாங்கனு தெரியலை.

தெரிய வேண்டியவங்களுக்கு நம்மளைப் பத்தி நல்லாத் தெரிஞ்சா போதும். எல்லார்கிட்டயும், 'நன்னடத்தைச் சான்றிதழ்’ கேட்டுட்டும் இருக்க முடியாது. நம்மளை விமர்சிக்கிறவங்ககிட்ட, அதைக் காட்டிட்டும் இருக்க முடியாது!''

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

''பழமொழிகள் ஆயிரம் உண்டு. உங்களுக்கு ரொம்பப் பிடித்த பழமொழி எது... ஏன்?''

''இது பழமொழி இல்லை. நான் எப்பவும் பின்பற்ற நினைக்கும் பொன்மொழி.

எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்றால், அந்தக் காரியத்தை இப்போதே தொடங்கு!''

- அடுத்த வாரம்...

• ''தங்கள் பெயருக்கு முன் பட்டமிட்டுக்கொள்ளும் நடிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

• ''நீங்க பெற்ற முதல்... 'கன்னத்தில் அறை’, 'கன்னத்தில் முத்தம்’ பற்றிக் கூற முடியுமா?''

•  '' 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் சூர்யா... பிரகாஷ்ராஜ்... யார் பெஸ்ட்? ஒரு நேயராக கருத்துச் சொல்லவும்!''

- பேசலாம் செல்லம்...

பிரகாஷ்ராஜிடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:   'விகடன் மேடை- பிரகாஷ்ராஜ்’, ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002.இ-மெயில்: av@vikatan.com கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.\

"எனக்கு திமிர் பிடிக்கும்!”

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.