Published:Updated:

2ஜி விசாரணை: ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ்!

Vikatan Correspondent
2ஜி விசாரணை: ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ்!

புதுடெல்லி, டிச.20,2010

2ஜி ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது.

அந்நிலையில், அவர் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னையில் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டார். ##~~## 

ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரிப்பதற்காக, ஆ.ராசாவுக்கு சிபிஐ இன்று சம்மன் அனுப்பியது. அதேபோல், அரசியல் தரகர் நீரா ராடியா உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு வீடு திரும்பிய போது நிருபர்களிடம் ஆ.ராசா கூறுகையில், "நான் சி.பி.ஐ.-க்கு அஞ்சவில்லை. நான் ஒரு வழக்கறிஞர். ஒரு வழக்கறிஞராக, நான் சட்டத்துக்குக் கீழ்ப்படிவேன். சட்டத்தை தட்டிக் கழிக்க மாட்டேன்," என்றார்.

முன் ஜாமீன் கோரவிருப்பதாக வெளியான தகவலை 'ரப்பிஷ்' என்றவர், "நான் குற்றவாளி அல்ல. எனவே, முன் ஜாமீனுக்கு விண்ணப்பிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை," என்றார் ராசா.

சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவிருப்பதாக கூறிய அவர், "என்னிடம் விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ.-யிடம் இருந்து தகவல் வந்துள்ளது. அவர்களது சோதனைக்குப் பிறகு இது இயற்கையான நடைமுறைதான். சி.பி.ஐ.யின் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்," என்றார் ஆ.ராசா.

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.

அதில் சிக்கிய அவரது டைரிகளில் இடம்பெற்ற விவரங்களின் அடிப்படையில், அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் வீடுகள், அலுவலகங்களில் அண்மையில் சிபிஐ சோதனை நடத்தியது. அதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், தற்போது விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2ஜி ஊழல் வழக்கில், சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவை பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி, வரும் பிப்ரவரியில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்த விசாரணைகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் கவனத்துக்குரியது. 

இதனிடையே, ராசா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவரை கட்சியில் இருந்து தூக்கி எறியவும் தயங்கமாட்டோம் என பேட்டி ஒன்றில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.