ந.சேதுராமன், கொடுமுடி.
நானும் என் மனைவியும் இரவில் தூங்கும்போது, பல்லி வந்து உடம்பெல்லாம் கடிக்கிறது. விழித்துப்பார்த்தால், முழங்கையின் கீழே உட்கார்ந்துகொண்டு தனது நகங்களால் பிறாண்டியும், வாயால் சதையையும் கடிக்கிறது. அடிக்கப் போனால் தாவி ஓடி, மறைந்துவிடுகிறது. பல்லி விஷமா... இதற்கு நாங்கள் என்ன செய்வது?
போன ஜென்மத்தில் நீங்கள் யாரிடமோ வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் டபாய்த்துவிட்டீர்களா?! அவர் பல்லியாகப் பிறந்து பழி வாங்குகிறாரோ? ஏதோ சிறுத்தை அளவுக்குப் பல்லியை விவரிக்கிறீர்களே. பல்லி, விஷம் அல்ல. பூச்சி ஒழிப்பு நிறுவனம் எதற்காவது போன் செய்து ஆலோசனை கேளுங்கள்!
எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.
பய பக்தியோடு கோயில்களுக்குச் செல்பவர்கள்கூட விபத்தில் சிக்கிப் பலியாகிவிடுகின்றனரே?
எமனின் சுதந்திரத்தில் எந்தச் சாமியும் தலையிடுவது இல்லை. விபத்தில் பலியாவதற்கு முன்பு அவர்கள் செய்தது - கோயில்களுக்குப் போனது. அது நெகிழ்ச்சியாக இல்லை?!
ஜி.மாரியப்பன், சின்னமனூர்.
கும்பகர்ணன் நீண்ட நாட்கள் துயிலும் பழக்கம் உள்ளவன் எனப் படித்திருப்பீர்கள். அப்படியெனில், நம்பர் ஒன், டூ சமாசாரங்களை எப்படிச் சமாளித்தான்?
Bed pan உதவியோடுதான் என்று நினைக்கிறீர்களா?! முன்பொரு சமயம் வெஸ்ட் இண்டீஸ் குழுவில் விளையாடிய புகழ்பெற்ற பேட்ஸ்மேன் வோரல், பெவிலியனில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருப்பாராம். ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆனவுடன் அவரை எழுப்பு வார்கள். நேரே சென்று செஞ்சுரி அடித்துவிட்டுத் திரும்பி வந்து படுத்துக்கொள்வாராம். கும்பகர்ணன் ஏதோ 'கோமா' அளவுக்குத் தூங்கியதாகச் சொல்வது எல்லாம் கற்பனை. அவன் ஞானி. தவத்தில் இருந்து இருக்கலாம் அல்லது ரிலாக்ஸ் பண்ணிக்கொண்டுஇருக் கலாம். தேவைப்படும்போது, உடனே கிளம்பிச் சென்று தன் பணியைப் பிரமாதமாகச் செய்து முடித்த, கடமை உணர்வும் விசுவாசமும்கொண்ட மாவீரன் அவன். 'ராமனோடு மோதாதே!' என்று ராவணனுக்கு ஏராள மான அறிவுரை சொல்கிறான் கும்பகர்ணன். எப்போ தும் தூங்கிக்கொண்டே இருந்திருந்தால், ராமனைப் பற்றியும், ராவணன் செய்த தவறுகளைப்பற்றியும் அவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்?!
மு.முத்துமாணிக்கம், சென்னை-17.
என்னுடைய ஓர் ஓட்டு எந்த ஆட்சியையும் கவிழ்த்துவிடாது... எந்த ஆட்சியையும் உருவாக்கிவிடாது. பிறகு, எதற்கு நான் ஓட்டு போட வேண்டும்?
ஒரே ஓட்டில் ஆட்சி அமையலாம். அல்லது ஒரே ஓட்டில் வேட்பாளர் தோற்று, அதனால் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் ஆட்சி கவிழலாம். அதன் காரணமாக நாட்டின் வரலாறே மாறலாம். என்னங்க இது, உங்க ஓட்டின் சக்தி உங்களுக்கே தெரியலேன்னா எப்படி?!
சிவராம சுப்பிரமணியன், தூத்துக்குடி.
சாமியார்கள், பூசாரிகள், அர்ச்சகர்கள் தவறு செய்யப் பக்தர்கள்தானே முதல் காரணம்? யாரைத் தண்டிக்க வேண்டும்?
பக்தர்கள் தவறு செய்யக் காரணம் மூடநம்பிக்கை. சாமியார்கள் செய்வது நம்பிக்கைத் துரோகம். மூடநம்பிக்கை, திருத்தப்பட வேண்டிய விஷயம். தண்டிக்கப்பட வேண்டியது துரோகம்தான்!
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
பாரதம் 'புண்ணிய பூமி' என்று சொல்வதில் தங்களுக்கு உடன்பாடு உண்டா?
பூமியில் புண்ணிய பூமி, பாவ பூமி எல்லாம் கிடை யாது. அந்த அடைமொழி எல்லாம் அங்கே தோன்றும் மனிதர்களைப் பொறுத்தது. மிகப் பெரிய மகான்களும் மதங்களும் விசுவரூபம் எடுத்த பூகோளப் பகுதிநம் பாரதம். அவர்களை எல்லாம் 'லிஸ்ட்' போடுங்கள். மற்ற எந்த நாடும் இந்த விஷயத்தில் இந்தியாவின் அருகேகூட வர முடியாது. ஆனால், இது எல்லாம் பழம்பெருமைதான். தொடர்ந்து 'புண்ணிய பூமியாக இருக்க வழிமுறைகள் உண்டு. அவற்றை எல்லாம் இப்போது பின்பற்றுகிறோமா என்பதுதான்கேள்வி!
|