ஞானியர்கள் தம் கடைசிக் காலத்தில் சொல்லிவைத்தாற்போல் புற்றுநோயை அனுபவித்து இருக்கிறார்களே... அதற்கு ஏதேனும் தெய்விகக் காரணங்கள் உண்டா?
மகானாக இருந்தாலும் சரி, மடையனாக இருந்தாலும் சரி, உடம்பு என்கிற வண்டி பொதுவானது. அது எப்போது வேண்டுமானாலும் ரிப்பேர் ஆகலாம். நீங்கள் சொல்வது தவறு. ரமண மகரிஷிக்கு மட்டும்தான் தோள் பகுதியில் புற்றுநோய் வந்தது. அவர் அதைச் சாதாரணமாக ஏற்றுக்கொண்டார். விவேகானந்தருக்குச் சர்க்கரை நோய் இருந்தது. 'ஹார்ட் அட்டாக்'கில் மறைந்த மகான்களும் உண்டு. இதற்கெல்லாம் 'தெய்விகக் காரணம்' எல்லாம் எதுவும் கிடையாது.வாட்ட சாட்டமாக வளர்ந்து, களியாட்டங் களில் மூழ்கி, எல்லாத் தப்புகளை யும் செய்யும் போலிச் சாமியார்கள் கடைசி வரை எந்த வியாதியும் வராமல் நடமாடவும் முடியும். இதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்?!
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
'பாராட்டு - புகழாரம்' என்ன வேறுபாடுங்க மதன்?
பாராட்டு என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக நாம் ஒருவர் மீது தூக்கிப்போடும் ஒரே ஒரு ரோஜா. புகழாரம் என்பது பெரிய ரோஜா மாலை. பாராட்டு என்பதைக்கூட நிஜம் என்று சொல்லலாம். புகழாரம் என்பது அநேகமாகப் பொய்!
என்னுடைய ஒரே ஒரு பதிலை மட்டும் படித்துவிட்டு என்னை நீங்கள் பாராட்டலாம். பதிலுக்கு நீங்கள் எதையும் என்னிடம் எதிர்பார்க்கக்கூட மாட்டீர்கள். புகழாரம் என்கிற ஒன்றைச் சூட்டிவிட்டு, நாளைக்கு மேலவையில் பதவிகூட நீங்கள் எதிர்பார்க்கலாம்!
ஜெ.கண்ணன், சென்னை-101.
மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் சூரிய கிரகணத்தின்போது பார்வை பறிபோகாதா?
இந்த முட்டாள்தனத்தை எல் லாம் செய்கிறவன் மனிதன்தான். மிருகங்களும் பறவைகளும் கிரகணத்தின்போது சூரியனைப் பார்க்காது!
சிவமலை சுந்தரம், சங்கரன்கோவில்.
இறந்தவர்களின் உடல் கனமாக இருக்கும் என்கிறார்களே உண்மையா?
இறந்த சில மணி நேரங்களில், தசைகளில் உள்ள புரோட்டீன்கள் இறுகி உடல் விறைத்துக்கொள் ளும், இதைத்தான் Rigor Mortis என்கிறார்கள். கூடவே, ரத்தம் ஓடுவது நின்றுபோய் 'க்ராவிடி' காரணமாக கீழ்ப் பகுதியில்தேங்கி உறைய ஆரம்பிக்கும். இதனால் உடல் வளைந்துகொடுக்காமல் போவதால், மேலும் கனமாகி விட்டதைப்போலத் தோன்றுகிறது என்பதுதான் உண்மை!
வே.முருகேசன், சென்னை-88.
துன்பங்களுக்கு எல்லாம் ஆசையே காரணம். அதனால், ஆசையை ஒழிக்க வேண்டும் என புத்தர் கூறுகிறாரே. அவரும் ஆசையை அனுபவித்த பின்தானே இவ்வாறு கூறுகிறார்?
ஆசையை அனுபவித்தவர் சித்தார்த்தர். துன்பங்களுக்கு ஆசையே காரணம் என்றவர் புத்தர். குழப்பிக்கொள்ள வேண்டாம்!
த.சத்தியநாராயணன், அயன்புரம்.
நரி முகத்தில் விழித்தது உண்டா?
|