மற்ற எபிசோடுகள்
Published:Updated:

''நானும் விகடனும்!'' - 05

நானும் விகடனும்
பிரீமியம் ஸ்டோரி
News
நானும் விகடனும் ( விகடன் டீம் )

இந்த வாரம் கோபிநாத்படம் : 'தேனி' ஈஸ்வர்

##~##
''ப
ள்ளிக்கூடத்தில் விளையாட்டுப் பொருட்கள் அடுக்கிவைத்திருக்கும் அறையைச் சுத்தம் செய்கிற வேலை அவ்வப்போது கொடுக்கப்படும்.  நிறைய பேர் எரிச்சலாக அந்த அறைக்குள் வருவார்கள். நானும் இன்னொரு நண்பனும் ஆனந்தமாக உள்ளே போவோம். பி.டி. மாஸ்டர் படித்து முடித்த புத்தகங்களை அங்கேதான் வைத்திருப்பார். 'டேய், நீ ரெண்டு எடுக்கற... நான் ரெண்டு எடுத்துக்கிறேன்!’ என்று டீல்பேசி, அடுக்கிவைக்கப்பட்ட ஆனந்த விகடன் இதழ் களை யாருக்கும் தெரியாமல் அந்த அறையில் இருந்து கடத்தி வருவதற்குள் வியர்த்துவிடும்.

'திருட்டுப் புள்ளையாருக்கு சக்தி அதிகம்’ என்பது மாதிரி, திருடித் திருடிப் படித்த விகடன், படிப்பைத் தாண்டி நிறைய சொல்லித் தந்தது. அப்போது எல்லாம் ஆனந்த விகடன் சின்ன சைஸில் இருக்கும். 'சுடுவது’ சுலபம். சுட்ட புத்தகங்களைப் பத்திரப்படுத்துவதுதான் பெரும்பாடு. ஹாஸ்டலில் இருக்கிற 'போட்டுக்கொடுக்கும் புண்ணியவான்’களின் கண்களில் படாமல், அதை ஒளித்துவைப்பதும், இன்டர்வெல்லில் கிடுகிடுவென ஓடிப் போய், பதுக்கிய இடத்தில் இருந்து எடுத்து இரண்டு பக்கங்கள் படித்துவிட்டு மீண்டும் ஒளித்துவைப்பதுமாக... பள்ளிப் பருவத்தில் எனக்கும் விகடனுக்குமான உறவு என்பது ஏரியா விட்டு ஏரியா போய், பிடித்த பெண்ணிடம் பேசிவிட்டு வருவது மாதிரியான சுவாரஸ்யமும் ஆபத்தும் நிறைந்த அனுபவம்!

''நானும் விகடனும்!'' - 05

அப்போது எல்லாம் அதிகம் படிப்பது விகடனின் நகைச்சுவைத் துணுக்குகளும் கார்ட்டூன்களும்தான். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுரைகள், செய்தி சார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் வந்தது.

எந்த இடத்தில் இருந்துகொண்டு புத்தகம் படிக்கிறோம் என்பதுதான் அதன் அனுபவத்தைத் தீர்மானிக்கிறது. பேருந்தில் உட்கார்ந்துகொண்டு விகடன் படிப்பது பேரானந்தம். பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவர், இவர் படித்து முடிந்தவுடன் கொஞ்சம் ஓசி கேட்கலாம் என்ற நினைப்பில் என்னைப் பார்த்துக்கொண்டே இருப்பார். கண்டக்டரின் குரலுக்கு ஒரு முறை தலை நிமிர்வதோடு சரி. முழுப் புத்தகத்தையும் முடித்த பிறகுதான் அடுத்த வேலை!

கல்லூரியில் படித்தபோது, 'டே... இந்த வாரம் நான் வாங்கிர்றேன்டா!’ என்று நண்பர்களுக்குள் முறை வைத்து ஒவ்வொருவரும் வாங்குவோம். எங்கள் ரூமில் விகடன் படிக்கிற டீம் கொஞ்சம் கூடுதலாகப் பந்தா பண்ணுவோம். 'ஆ.வி வாங்கியாச்சா?’ என்று சுருக்கப் பெயரில்தான் கேட்போம். பால், டீ குடித்துவிட்டுப் படுத்திருக்கும் எதிர் டீம் பார்ட்டி லேசாக முறைப்பான்.

என்ன படம் பார்ப்பது என்பதும் விகடன் எத்தனை மார்க் போட்டிருக்கு என்று பார்த்துவிட்டுத்தான் முடிவு செய்யப்படும். எதிர் டீமில் இருக்கிற பால், டீ பார்ட்டிகளும்கூட ஏற்றுக்கொள்ளுகிற விஷயம் அது. அடுத்த முக்கியமான விஷயம், விகடனில் படித்த விஷயத்தை, தனக்கு ஏற்கெனவே தெரிந்த மாதிரியான தோரணையில் வக்கணையாகப் பேசுவோம். ஆனால், மனசுக் குள், 'ஆண்டவா... இந்த வாரம் விகடனைஇவன் படிச்சிருக்கக் கூடாது!’ என்று மனசுக்குள் மணியடித்துக்கொண்டே இருக்கும்!

திருச்சி நேஷனல் காலேஜில் நான் படித்த சமயம், காவேரிக் கரைக்குக் கொஞ்சம் அருகில் நண்பர்களுடன் வீடு பிடித்துத் தங்கியிருந்தேன். அப்போது சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்துத் தேவதை கள்’ தொடர் விகடனில் வந்துகொண்டு இருந்தது. கடல் இல்லாத ஊரில் ஒரு தீவு எஃபெக்ட் கொடுப்பதால், ஸ்ரீரங்கம் எப்பவும் எனக்குப் பிடிக்கும். அதிலும் அந்தத் தொடரில் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து வர்ணனைகளைக் கண் எதிரே பார்த்து, ரசித்து, எழுத்துக்களோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது பரவச அனுபவ மாக இருக்கும். ஆச்சர்யமாகத் தொடரில் வர்ணிக்கப்பட்ட அம்சங்களுடன் அப்போதும் சில தேவதைகள் ஸ்ரீரங்கத்தில் உலவிக்கொண்டு இருந்தார்கள்!    

வண்ணதாசனின் 'அகம் புறம்’ தொடர் வாழ்க்கை பற்றிய எனக்கு ஒரு ரசனையான புரிதலை ஏற்படுத்தியது. தொடரின் ஒவ்வொரு வார்த்தையையும் வரியையும் நேசித்து வாசித்தேன். ஒவ்வொரு வாரம் படித்து முடித்ததும் அந்தப் பக்கங்களைக் கிழித்து,  பத்திரப்படுத்தி, பிறகு மொத்த அத்தியாயங்களையும் நானே பைண்டிங் செய்தேன். அந்தத் தகராறில் முனை மடங்கிய பக்கங்களை நீவி நீவிச் சரிப்படுத்தியது இப்போதும் நெஞ்சில் நிழலாடுகிறது!

சைக்கிள் பிரேக்குக்கு நடுவில் சொருகிவைக்க, வயிற்றுப் பகுதியோடு அணைத்துக்கொள்ள, ஜீன்ஸின் பின் பாக்கெட்டில் மடித்துவைக்க எல்லாம் ஏதுவாக இருந்த விகடனைப் பெரிசாக ஆக்கிவிட்டார்களே என்று ஆரம்பத்தில் கொஞ்சம் கோபம். ஒருவேளை, சின்ன சைஸ் விகடனைச் சுடுவது சுலபம் என்ற எண்ணம்கூடக் காரணமாக இருக்கலாம். ஆனால், போகப் போக இப்போது வரும் பெரிய சைஸ் விகடன் ரொம்பப் பிடித்துவிட்டது.

விகடனின் எழுத்து நடையே அலாதியானது. உலக சினிமாக்களின் முதல் ஃப்ரேமே நம்மைப் படத்துக்குள் இழுத்துவிடும். அப்படி எந்தக் கட்டுரையின் முதல் வரியிலும் ஒரு 'விஷ§வல் ஸ்க்ரிப்ட்’ புதைத்துவைத்து இருப்பார்கள். அந்த வரியைப் படித்ததுமே சம்பந்தப்பட்ட கட்டுரையின் விஷ§வல் மனதினுள் விரிந்து பரவும். சில வாரங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என சிறப்புப் பக்கங்களை ஒதுக்கி, ஏரியாவின் ஸ்பெஷல் நிகழ்வுகளை கவர் செய்திருந்தார்கள். மதுரைப் பக்கங்களை வாசிக்கும்போது, அருகில் இட்லி ஆவி பறக்கும். திருச்சியில், கால் நனைத்து காவேரி சலசலக்கும், நெல்லைக்கு வந்தால், அல்வா மணக்கும். இப்படிச் சாதாரண துணுக்குச் செய்தியையும்கூட அழகியல் ரசனையோடு பரிமாறுவார்கள் விகடன் சமையல்காரர்கள். அந்த ருசிக்கு அடிமையான நாக்கு, வேறு எங்கும் திருப்தி அடையாது!

விகடனில் 'நீயும் நானும்’ தொடர் எழுத வாய்ப்பு கிடைத்தபோது, 'எப்படி எழுதப்போகிறோம்?’ என்ற பதற்றத்தைவிட, 'விகடனில் எழுதப்போகிறோம்!’ என்ற பிரமிப்பும் சந்தோஷமும்தான் என் மனதை ஆக்கிரமித்தது. அந்தத் தொடரின் முதல் கட்டுரையில் 'ஊரில் இருந்து கிளம்பி வரும்போது விகடனில் ஒரு தொடர் எழுதுவேன் என்று நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை!’ என்று நான் சொல்லியிருந்ததன் பின்னணியில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

கண்ணன்தான் சொன்னார், 'தினந்தோறும் எவ்வளவு பேர், எவ்வளவு விஷயங் களை உங்களிடம் சொல்றாங்க. நீங்க நல்லா எழுத முடியும்!’ என்று நம்பிக்கையோடு ஊக்குவித்தார். 'நீயும் நானும்’ தொடர் வர ஆரம்பித்தவுடன் செல்லும் இடங்களில், கூட்டங்களில், கருத்தரங்குகளில், கல்லூரி களில் என எல்லா இடங்களிலும் அந்தக் கட்டுரைகள் குறித்துக் கேட்க ஆரம்பித்தார்கள். விகடனின் ரீச் குறித்து, எனக்குள் இருந்த பிரமிப்பின் பரிணாமம் பல மடங்கு அதிகரித்தது!  

'நீயும் நானும்’ மூலமாக நான் மதிக்கிற நிறைய மனிதர்கள் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். திரை இயக்குநர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் எனப் பல துறை வல்லுநர்களும் அழைத்துப் பேசுவார்கள். மதிப்புக்குரிய மனிதர்கள் பலரும் யதார்த்தமாகவே விகடனின் வாசகர்களாக இருக்கிறார்கள்.

ஒரு வாசகன் என்பதைத் தாண்டி, ஒரு செய்தியாளனாகவும் விகடனிடம் எனக்குப் பிடித்த விஷயம், ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து, படாதபாடுபட்டு ஒரு முயற்சியை மேற்கொண்டு இருக்கும் மனிதரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரைக் கொண்டாடுகிற மனசு. இன்னொன்று... விஞ்ஞானம், நிதி நிர்வாகம், அரசியல், தொழில்நுட்பம் போன்றவற்றை வெகுஜன மக்களின் மொழியில் புரிந்துகொள்ளும்படியாகப் பதிவு செய்வது.

தனிப்பட்ட முறையில் என்னை, எனக்கு முக்கியமானவனாக அடையாளம் காட்டியது விகடன் விருதுகள்! ஆத்மார்த்தமாக என்னுள் நான் கொண்டாடும் தருணங்கள் அவை. அந்த விருதுகளைப் பெறும் தகுதியுடையவனாகத் தொடர்ந்து உழைக்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும் என்று, வெங்காயம் வாங்கப் போகிற பள்ளிக்கூடத்துப் பிள்ளை மாதிரி அடிக்கடி சொல்லிக்கொள்வேன்!

விகடனில் இப்போது ரொம்பப் பிடித்தது இன்பாக்ஸும் பொக்கிஷமும். எப்போதும் பிடித்தது அதன் சிறப்புக் கட்டுரைகள். பெயருக்கேற்ப உண்மையிலேயே ஏதேனும் ஒரு 'சிறப்பு’ ஒளிந்திருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும்.

நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது, இன்ஜினீயரிங் கல்லூரிகளில் அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பு! ஒரே ஒரு இன்ஜினீயரிங் சீட்டுக்காக லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கப் பெற்றோர்கள் அலைபாய்ந்துகொண்டு இருந்தார்கள். அப்போது விகடனில் இன்ஜினீயரிங் படிப்பு குறித்து வெளியான

''நானும் விகடனும்!'' - 05

ஒரு கட்டுரையில் இப்படிச் சென்றது ஒரு வரி. 'அரசாங்கம் இந்த நிலையை உடனடியாகக் கவனத்தில்கொள்ள வேண்டும். 'டிமாண்ட்’ குறைக்கிறேன் பேர்வழி என்று சகட்டுமேனிக்குப் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தால், விரைவிலேயே பிற பட்டங்களைப்போல இன்ஜினீயரிங் பட்டமும் தனக்கான மதிப்பை இழந்துவிடும்!’ என்று கணித்திருந்தார்கள். அது நிகழ்காலத்தில் நிதர்சனமானது. அது தான் விகடனின் தீர்க்கதரிசனம்!

அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரு பிரமிப்போடு தன்னைக் கவனிக்கவைக்க விகடன் நிறைய உழைக்கிறது, சிந்திக்கிறது. நிறைய விஷயங்களை பரீட்சித்துப் பார்க்கிறது. தன்னுடைய அடிப்படைத்தன்மையை விட்டுக்கொடுக்காமல், காலம் மாற மாற தன்னையும் மாற்றிக்கொள்ளுகிற விகடனின் வித்தை அலாதியானது!''