Published:Updated:

கவுண்டமணி - செந்தில் ஜோக்கும் விவசாயிகளும்!

கவுண்டமணி - செந்தில் ஜோக்கும் விவசாயிகளும்!
கவுண்டமணி - செந்தில் ஜோக்கும் விவசாயிகளும்!

'கரகாட்டகாரன்' படத்தில் பிரபலமான "ரெண்டு பழத்துல ஒண்ணு இங்க இருக்கு...இன்னொன்னு எங்க?"

கவுண்டமணி - செந்தில் ஜோக்கும் விவசாயிகளும்!

என்று செந்திலிடம் கவுண்டமணி கேட்கும் வாழைப்பழ காமெடி போல் நமது விவசாயிகளின் நிலையை மாற்றி விட்டார்களே..?! என்ற ஆதங்க குரல்கள் எழுந்துள்ளன.
 
"உங்களிடம் ஆராய்ச்சி விதைகள் இருக்கு. இதை உருவாக்கிய பாரம்பர்ய விதைகள் எங்கே இருக்கு?" என்று கேட்டால் 'அதுதாங்க இது' என்கிறார்கள் விவசாயிகள்.

'பார்ப்பதற்கு நம்முடைய பாரம்பர்ய விதைகள் மாதிரியே இருக்கு!' என்று ஆராய்ச்சி நிலைய விதைகளையோ அல்லது ஹைபிரிட் விதைகளையோ காட்டுகிறார்கள். கடந்த 40 வருடங்களில் கம்பெனி விதைகளும், ஆராய்ச்சி விதைகளும் செலுத்திய ஆதிக்கத்தில் பாரம்பர்ய விதைகள் கிட்டத்தட்ட காணாமலே போய்விட்டது.

விவசாயிகளும், மக்களும் ஏனோ அதை மறந்துவிட்டார்கள். தற்போது பயிர் செய்வதற்கு விதைகள், உரம், பூச்சிகொல்லி, அனைத்துமே ரெடிமேடாக கிடைப்பதால் நம்மிடம் இருந்த விதைச் சேமிப்பு நுட்பம் கிட்டத்தட்ட அழியும் நிலைக்கே வந்துவிட்டது.

இன்றைக்கு எஞ்சியிருக்கும் நமது பாரம்பர்ய விதைகளை விதை கம்பெனிகளோ, வேளாண் பல்கலைக் கழகங்களோ, அரசாங்கமோ காப்பாற்றவில்லை. எங்கேயோ பெயர் தெரியாத இடத்தில் இருக்கும் விவசாயிகள்தான் காப்பாற்றி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாரம்பர்ய விதைகளைத் தேடி பல இடங்களில் விசாரித்தோம். பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், உதவி வேளாண் அலுவலகங்கள், தக்காளி, காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து தரும் தனியார் நர்சரிகள், கம்பெனி விதைகளை விற்கும் உரக் கடைகள் என பல இடங்களில் கேட்டோம். பேச்சுக்குக்கூட பாரம்பர்ய விதைகள் இல்லை.'அதெல்லாம் யார் பண்றாங்க? அதை விதைச்சா, உரம், பூச்சிக்கொல்லி மருந்தையெல்லாம் எப்படி விக்கிறதுன்னு' ஏகப்பட்ட பேச்சுக்கள், வக்காலத்துக்கள்.

கவுண்டமணி - செந்தில் ஜோக்கும் விவசாயிகளும்!

இதையெல்லாம் மீறி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தையில் பாரம்பர்ய சிறுதானியங்களை விற்றுக் கொண்டிருந்தார் 65 வயதுடைய சுப்பிரமணி.

அவர், "விவசாயத்துக்கு தேவைப்படுற பாரம்பர்ய நெல், பருப்பு, காய்கறி  விதைகள் முதல்கொண்டு எல்லாமே வாரம் ஒருநாள் நடக்கிற இந்த ஞாயித்துக்கிழம சந்தையில கிடைச்சிட்டு இருந்தது. சுத்துவட்டாரத்துல இருக்கிற கிராமங்கள்ல இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்து விப்பாங்க. காலப்போக்குல அக்ரி ஆபீஸ்(உதவி வேளாண் அலுவலகம்), உரக் கடைகள்னு திறந்தாங்க. நாட்டு விதைகள விட அதிகமா விளையும்னு விவசாயிகள்கிட்ட மத்த விதைகள வித்தாங்க. விவசாயிகளும் கொஞ்சம் கொஞ்சமா வாங்க ஆரம்பிச்சி, இப்போ நிறைய அங்கதான் போய் வாங்குறாங்க.

ஆனா, இந்த சிறுதானிய விதைகள உரக் கடைகளாலோ, அக்ரி ஆபீஸ்காரங்களாலோ அவ்ளோ ஈஸியா இருப்பு வெச்சி விக்க முடியல. அதனால சிறுதானிய விதைகள வாங்குறதுக்கு போச்சம்பள்ளி வார சந்தைக்குத்தான் இந்த பகுதி மக்கள் வர்றாங்க.

கவுண்டமணி - செந்தில் ஜோக்கும் விவசாயிகளும்!

இப்போ விவசாயிகள்கிட்ட விதைகள சேமிச்சி வெச்சுக்கிற பழக்கமும் குறைஞ்சு வர்றதால சிறுதானிய விதைகளுக்கு இங்கதான் வர்றாங்க. வாங்க வர்ற விவசாயிங்ககிட்ட சும்மா விதையை மட்டும் வித்துடமாட்டேன். தண்ணி பாய்ச்சலா? மழைக்கு போடுறதான்னு கேட்டுக்கிட்டுதான் விப்பேன். வைகாசி, ஆனி, ஆடிக்குள்ள விதைக்கிறதா இருந்தா விதைகள விப்பேன். அதுக்கப்புறம் வந்தா தண்ணி பாய்ச்சல் இருந்தாதான் விப்பேன். இல்லேன்னா அடுத்த வருஷம் வந்து வாங்கிக்கோன்னு சொல்லிடுவேன். பட்டம் தவறிபோய் விதைச்சா சரியா முளைக்காது. சிறுதானிய விதைகள பொருத்தவரை ஆடிப் பட்டம்தான் முக்கியம். அத தவிர்த்து மத்த நேரத்துல செஞ்சா விளைச்சலும் குறையும்; தண்ணியும் அதிகம் பிடிக்கும்.

இப்போவெல்லாம் எப்போ மழை பெய்யுது, பெய்யமாட்டேங்குதுன்னு தெரியல. மழை பெஞ்சாதான் விதைகள தேடுறாங்க விவசாயிகள். இந்த பகுதில கம்பு, சோளம், கேழ்வரகு, கொள்ளு, நிலக்கடலை, அவரை, துவரை, உளுந்து, பயறு வகைகள பயிர் செய்றாங்க. இன்னைக்கும் தரமான சிறுதானிய விதைகள் தேவைப்படுறவங்க இந்த சந்தைக்குத்தான் வர்றாங்க. வாரத்துல ஞாயித்துகிழம மட்டும் சந்தை கூடும். சந்தைக்கு போனா வாங்குற பொருள் சேர்ந்து கிடைக்கும். விலையும் பேசி வாங்கலாம்னு மக்கள்கிட்ட இருக்கிற நம்பிக்கைதான் சந்தைகளோட பலமே. அந்த நம்பிக்கையை இந்த சந்தை இன்றும் காப்பாத்திட்டு இருக்கு" என்று பெருமையாக சொன்னார்.

சந்தையை ஒட்டி மளிகைக் கடையிலே சிறுதானிய விதைகளை விற்பனை செய்துவரும் அசோக்," தமிழ்நாட்டுலே பெரிய சந்தை பொள்ளாச்சி சந்தை. அதுக்கடுத்து போச்சம்பள்ளி சந்தைனு சொல்வாங்க. அந்தளவுக்கு வீட்டுக்கு, விவசாயத்துக்கு தேவையான எல்லாப் பொருள்களும் இந்த சந்தையில கிடைக்குது. இந்த பகுதி மேய்ச்சல் பகுதிங்கிறதால செம்மறியாடு, வெள்ளாடு, நாட்டு மாடுகள், சீமை மாடுகள், நாட்டுக் கோழிகள் அதிகமா விற்பனையாகும். இதோட தானியங்கள், பருப்பு வகைகள், வேர்க்கடலை, கரும்பு வெல்லம், பனை வெல்லம், காய்கறிகள், விவசாய வேலைகளுக்கு தேவையான மண்வெட்டி, கடப்பாரை, களைவெட்டும் கருவிகள், மாடு, கன்னுகுட்டிகளுக்கு தேவையான முச்சானி, மூக்கணாங்கயிறு, திருஷ்டி கயிறு, சலங்கை, மாடு கட்ற கயிறுனு எல்லாமே கிடைக்கும்.

கவுண்டமணி - செந்தில் ஜோக்கும் விவசாயிகளும்!

இதோட சிறுதானியங்களும் போட்டி போடுது. ஞாயித்துக்கிழம ஆனா, சிறுதானியங்கள் சந்தையில் வரிசைக்கட்டி நிக்கும். காலையில 5 மணியிலிருந்து 10 மணிக்குள்ள வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வர்ற தானியங்களோட வியாபாரம் முடிஞ்சிடும். அந்த நேரத்துல குறைஞ்ச விலைக்கு மொத்தமா வாங்கலாம். இந்த பகுதில எப்பவுமே சிறுதானியங்களுக்கு வரவேற்பு இருக்கிறதால கடைகள்லயும் சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, பயறு வகைகள்ன்னு வெச்சிருக்கிறோம். இதோட புங்கன், வேப்பங்கொட்டை, அகத்தி விதைகளும் வெச்சிருக்கோம். அந்தந்த சீஷனுக்கு என்ன விளையுதோ அது சந்தைக்கு வந்துடும். அதனால எப்பவுமே கிடைக்கிற மாதிரி 15க்கும் மேற்பட்ட நாட்டு ரக விதைகள வெச்சிருக்கோம்" என்றார்.

-த. ஜெயகுமார்

படங்கள்: க. தனசேகரன்