18-02-09

ஸ்பெஷல்

இலங்கை இன்று...

- ப.திருமாவேலன்

எல்லோர் பார்வையும் முல்லைத் தீவு நோக்கி... நித்தமும் தனது சாதனையை சிங்கள ராணுவம் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்களோ கனத்த மௌனம் காக்கிறார்கள். இலங்கை ராணுவத் தலைமையகம் சொல்வதையும் புலி ஆதரவு இணையதளங்களின் அறிவிப்புகளையும் தவிர்த்தால், இலங்கை நிலைமைகளை நடுநிலையாகச் சொல்பவர்களைத் தேடத்தான் வேண்டியிருக்கிறது!

'முல்லைத் தீவின் கடல் பரப்பு மட்டும்தான் புலிகள் வசம் உள்ளது. அதையும் பிப்ரவரி 4-ம் தேதிக்குள் கைப்பற்றிவிடுவோம்' என்றது இலங்கை ராணுவம். 'கவலைப்படாதீர்கள்... அதற்கு முந்தைய நாளே அனைத்து மக்களுக்கும் இந்தத் தகவலை எஸ்.எம்.எஸ். மூலம் பரப்புவோம்!' என்றார் பிரதமர் ரத்ன

விக்கிரமநாயக. 'ஐந்து நாட்களில் பாருங்கள்!' என்று கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பிப்ரவரி 5-ம் தேதியை 'இலங்கையின் இரண்டாவது சுதந்திர தின'மாக அறிவிக்க ஆயத்தங்கள் நடந்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அனைத்தையும் சாதித்து முடித்ததற்காக சரத் ஃபொன்சேகாவுக்கு நான்கு சக்கரப் பதக்கம் தருவதாகச் சொன்னதும் தரப்படவில்லை. இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசும் பாகிஸ்தானும் நீங்கலாக அனைத்து நாடுகளும் சண்டையை உடனே நிறுத்தச் சொல்லிவிட்டன. யார் சொன்னாலும் சண்டையை நிறுத்த மாட்டேன் என்று மகிந்தாவும் சொல்லிவிட்டார்.

இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும் அங்கு என்னதான் நடக்கிறது. சில தகவல்கள்...

பிரபாகரன் நம்பும் மூன்று பேர்!

சூசை, தீபன், பானு இந்த மூன்று பேரைத்தான் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாகச் சொல்கிறார்கள். கர்னல் பால்ராஜ் உடல்நலம் சரியில்லாமல் மறைந்த பிறகு போர்க்களத்தில் இவர்கள்தான் தனக்கான வெற்றிகளைப் பெற்றுத் தருவார்கள் என்று எதிர் பார்க்கிறாராம்.

கடற்புலிகளின் சிறப்புத் தளபதியாக இருக்கிறார் சூசை. இவர் வசமாக இருக்கும் கடற் புலிகள்தான் பல ஆண்டுகளாகக் கடலில் எந்தச் சேதமும் இல்லாமல் தங்கள் அமைப்பைக் காத்து வருகிறார்கள். அதுபோக கடல் வர்த்தகம், ஆயுதப் பரிவர்த்தனைகளையும் இந்தப் படைகள்தான் செய்துவருகின்றன. ஓராண்டுக்கு முன்னால் அதிவேகமாகப் படகை ஓட்டிப் போய் விபத்தில் சிக்கிக்கொண்டார் சூசை. அதில் அவருக்குக் காயம் ஏற்பட்டுத் தப்பினாலும், அவரது மகன் இறந்துபோனார். அது முதல் சூசையைக் கவனமாக இருக்கச் சொல்லி வருவாராம் பிரபாகரன்.

'ஓயாத அலைகள்' என்னும் போரின் மூலம் பல்வேறு வெற்றிகளை மூன்று ஆண்டுகளில் பிரபாகரனுக்கு வாங்கிக் கொடுத்தவர்கள் தீபனும் பானுவும். அவர்கள்தான் இன்று வடக்கு போர் முனையின் கட்டளைத் தளபதிகளாக நிற்கிறார்கள். 'இதைப் படையினரின் ஆண்டு' என்று மகிந்தா அறிவித்துள்ளார். 'அவர்களுக்கு இது அழிவு ஆண்டு' என்று பானுவும், 'எங்களை அழிக்க முயற்சித்த லலித் அதுலத் முதலி, ரஞ்சன் விஜயரத்னே ஆகியோர் தான் அழிந்தார்கள். நாங்கள் இன்னும் இருக்கிறோம்' என்று தீபனும் சொல்லி தங்கள் வீரர்களுக்கு உற்சாகம் கொடுத்து வருகிறார்கள்.

முல்லைத் தீவில் ராஜபக்ஷே மகன்!

முல்லைத் தீவு கடற்படையைப் பலப்படுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளது ராஜபக்ஷேவின் ராணுவம். மகிந்தாவின் மூத்த மகன் யோஷித ராஜபக்ஷே இலங்கை கடற்படையில் சேர்ந்து பயிற்சிபெற்றார். 21 வயதான அவர் தனக்கான பொறுப்பை அப்பாவிடம் இருந்து தானே வாங்கிக்கொண் டாராம். கடந்த வாரத்தில் முல்லைத் தீவு அதிவேகப் படகு சேவைப் பிரிவில் இணைந்துள்ளார். கடற் படையின் மத்திய வகுப்பு அதிகாரி யான தனது மகன், போர்ப் பயிற்சி பெற முல்லைத் தீவுதான் சரியான களம் என்று மகிந்தா நினைத்திருக் கக் கூடும்!

அடுத்த பாலசிங்கம்!

ஆண்டன் பாலசிங்கம் மறைவுக்குப் பிறகு, புலிகளுக்குச் சரியான சர்வதேச பொறுப்பாளர் இல்லை என்ற நிலைமை இருந்தது. உலக அளவில் நடந்து வரும் ஆதரவுப் போராட்டங்கள், மற்றும் பல்வேறு நாடுகளைத் தொடர்புகொண்டு தனது கருத்துக்களைச் சொல்வதற்கான ஆள் ஒருவர் தேவை என்பதை பிரபாகரன் உணர்ந்தார். அதன்படி குமரன் பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை கே.பி. என்று புலிகள் அழைக்கிறார்கள்.

இன்று அமைப்பில் இவருக்குப் பதவி அளிக்கப்பட்டாலும் கடந்த 30 ஆண்டுகளாக அவர்களுக்கான வேலைகளைப் பார்த்து வந்த நிழல் மனிதர் இவர். பிரபாகரனுக்கு உறவினர். காங்கேசன்துறையைச் சேர்ந்தவர். திருமணம் ஆகாதவர். புலிகள் அமைப்பை ஆரம்பித்த காலத்தில் அதற்கான பணத் தேவைக்காக பிரபாகரன் ஒரு கப்பல் கம்பெனி தொடங்குகிறார். சீன மாடல் கப்பலை விலைக்கு வாங்கி எம்.வி.சோழன் என்ற பெயரில் வர்த்தகத்தைத் தொடங்கினார். அது வர்த்தகத்துக்காக மட்டுமல்ல, தங்களுக்கான ஆயுதங்களைக் கொண்டுவரவும் தான்! இப்படி ஆயுதங்களை வாங்கித் தரும் மனிதராக இருந்தவர் கே.பி. இன்று வரை அவர்களுக்கான அனைத்து ஆயுத சப்ளையையும் இவர்தான் கவனித்து வந்தார்.

புலிகள் அமைப்புக்காகப் பல்வேறு நாடுகளில் இருக்கும் கிளைகள், அதன் வங்கிக் கணக்குகளை மேற்பார்வை செய்வதும் இவர்தான். இன்டர்போல் கையில் சிக்காமல் வலம் வரும் கே.பி-க்குத் தெரியாத புலனாய்வு அதிகாரிகளே இல்லை. தாய்லாந்துதான் அவரது நிரந்தர இருப்பிடம். அங்கு அவரைக் கைதுசெய்ததாக இரண்டாண்டுக்கு முன் தகவல் வந்தது. பிறகு அது மறுக்கப்பட்டது. யாருக்கும் சிக்காத குமரன்பத்ம நாபன், இப்போது சர்வதேசப் பொறுப்பாளராக உலா வருகிறார்!

பாலகுமாரனுக்கு என்னாச்சு?

பொதுமக்கள் வாழும் இடங்களைக் குறிவைத்து சிங்கள ராணுவம் குண்டு போட்டு வருகிறது. புலிகள் இங்கு எதிர் தாக்குதல்நடத்தவில்லை. அதனால், முக்கியமான தளபதிகளுக்கு எந்தப் பாதிப்பும்ஏற்படவில்லை. ஆனால், இந்த குண்டு வீச்சில் பால குமாரன் சிக்கி பலத்த காயமடைந்து உள்ளார். இவர் புலிகள் அமைப்பின் சிறப்பு உறுப்பினர் பொறுப்பில் இருக்கிறார். பிரபாகரன் புலிகள் அமைப்பை ஆரம்பித்த காலத்தில் ஈராஸ் என்ற ராணுவ அமைப்பைத் தொடங்கியவர். மார்க்சிஸ்ட் சிந்தனை யாளர். கால ஓட்டத்தில் புலிகள் அமைப்பில் ஐக்கியமானார்.இவருக்கு அமைப்பில் ஏதாவது பதவி கொடுத் தால், ஏற்கெனவே இருந்தவர்களுக்கு வருத்தம் ஏற்படும் என்பதால் சிறப்பு உறுப்பினர் என்ற பதவியை உரு வாக்கி, தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டார் பிரபாகரன். ஈராஸ் அமைப்பில் இருந்து இறந்தவர் களையும் மாவீரர்களாக பிரபாகரன் அறிவித்தது பாலகுமாரனை மகிழ்ச்சி யில் ஆழ்த் தியது.

கொள்கைகள் வடிவமைப்பு, தீர்மானங்களை எழுதுவது என அமைப்புக்கான தத்துவார்த்த வேலைகளில் இருந்த பாலகுமாரன் இன்னும் பல மாதங்கள் தீவிர சிகிச்சையில் இருந் தாக வேண்டும் என்று தெரிவிக்கின் றன தகவல்கள். காட்டுக்குள் இருக் கும் மருத்துவமனையில் தங்கியுள்ளா ராம்.

இந்தியா எதிர்ப்பு வாரம்!

சிங்களவர் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் அமைப்புகளில் ஒன்று ஜனதா விமுக்தி பெரமுனா. மார்க்சிஸ்ட் கொள்கையைத் தாங்கிய அமைப்பு என்று இவர்கள் சொல்லிக் கொண்டாலும் இவர்களது கொள்கை, இனவெறிதான். இவர்களிடம் நல்லபெயர் வாங்குவதற்காகத்தான் அங்கு வரும் ஆட்சியாளர்கள், தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இன்றைய மகிந்தா அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சிகளில் இதுவும் ஒன்று.

இந்தக் கட்சி இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களைச் செய்து வருகின் றன. 'இந்தியா எதிர்ப்பு வாரம்' என்று அறிவித்து கொண்டாடி வருகின்றன. 'இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்து நம்மை மீண்டும் அடிமைப் படுத்த இந்தியா நினைக்கிறது. அதை நிறைவேற்ற விட மாட்டோம்' என்று சொல்லி வரும் இக்கட்சி, இந்திய அதிகாரிகள் யார் கொழும்பு போனாலும், அவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது!

எப்படி இருக்கிறார் சந்திரிகா?

மகிந்தா ராஜபக்ஷே வருவதற்கு முன் பத்தாண்டு காலம் இலங்கை யின் அசைக்க முடியாத இரும்பு மனுஷி சந்திரிகா குமாரதுங்கா. ஆனால், இப்போது அம்மணி இருக்குமிடம் பரம ரகசியம். வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை, பொது நிகழ்ச்சியில் தலை காட்டுவதில்லை. அவரைப் பொறுத்தவரை அமைதியாக இருக்கிறார். ஆனால்,அவர்அதைச் செய்யப் போகிறார், இவரைச் சந்திக்கிறார் என்ற வதந்திகளுக்குப் பஞ்சம் இல்லை. ஆளுங்கட்சியில் இவரைத்தான் புலனாய்வுத் துறைஅதிகமாகக் கண்காணிக்கிறது. மகிந்தாவைக் கவிழ்த்துவிட்டு, அவர் மறுபடியும் வந்துவிடுவாரோ என்ற பயம் ராஜபக்ஷே சகோதரர்களுக்கு. 'எனக்குஎதிர்க் கட்சிகளோடு மட்டுமல்ல, பிரபாகரனுடனும் எந்தத் தொடர்பும் இல்லை. போகிற போக்கில் என்னையும் பயங்கரவாதி என்று சொல்வார்கள்' என்று சிங்களப் பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்குமளவுக்கு நொந்துபோய்க் கிடக்கிறார் அவர்.

சந்திரிகாவின் பாதுகாப்பை முன்னிட்டு மாஜி அதிபர் என்ற அடிப்படை யில் அவர் அதிகாரபூர்வ வீட்டில் இருந்தார். ஆனால், அதை கோர்ட் வரைக்கும் கொண்டுபோய் காலி செய்ய வைத்ததன் பின்னணியில் மகிந்தாவும் இருப்பதாகச் சந்தேகம். வீட்டை உடனே காலி செய்ததுமட்டு மல்ல, 'நான் எந்தப் பொருளையும் எடுத்து வரவில்லை' என்று வாக்கு மூலம் கொடுத்தார் சந்திரிகா.அவரை எப்படியாவது கட்சியில் இருந்து விரட்டும் முயற்சிகள் இப்போது ஆரம்பித்துள்ளன. 'நான் பிறந்த கட்சி... வளர்ந்ததும் இங்கு தான்... இங்குதான் நீடிப்பேன்' என்று சொல்கிறார். ஆனால், அதற்கும் சங்கடம் நெருங்கி வருவ தாகச் சொல்கிறார்கள்.

ஓடிப்போன பத்திரிகையாளர்கள்!

இலங்கையில் இருந்து இப்போது ஓட்டமெடுத்துக்கொண்டுஇருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். சிங்களம், தமிழ், ஆங் கிலம் என்ற பாகுபாடு இல்லாமல் இதுவரை 27 பேர் ஓடிப் போயிருக்கிறார்கள். அங்கு நடக்கும் உள்நாட்டு யுத்தம் குறித்து ராணுவம் தரும் பத்திரிகைச் செய்தி தவிர, வேறு எதை எழுதினாலும், அந்தப் பத்திரிகையாளர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

சுப்பிரமணியம் சித்தரஞ்சன்(சுடரொளி),சுரேஷ் குமார், ரஞ்சித்குமார் (உதயன்), சம்பத் லக்மல் டி சில்வா(பத்திரிகையாளர்), மரிதாஸ் மனோஜன் தாஸ் (பத்திரிகை ஏஜென்ட்), சதாசிவம் பாஸ்கரன் (உதயன்),சின்னத்தம்பி மகாராஜா(நமது ஈழநாடு), ருசிகா பிரசாந்தி (பெண் பத்திரிகையாளர்), சுபாஷ் சந்திரபோஸ்(நிலம்), செல்வராஜ் ராஜவர்மன் (உதயன்),நிலக்ஷன் சகாதேவன் ( இதழியல் மாணவன்), இசைவிழி செம்பியன், சுரேஷ் லின்பியோ, தர்மலிங்கம்(வாய்ஸ் ஆஃப் டைகர்ஸ்), குணசிங்க(திபவனா), லசந்தவிக்கி ரதுங்க(சண்டே லீடர்) ஆகிய பத்திரிகையாளர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ள திகிலில்தான் இந்த முடிவுகள்.

இப்படி வெளிநாடுகளுக்குத் தப்ப முடியாதவர் கள், தங்கள் அலுவலகத்தில் பார்த்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மறைமுகமாகப் புனை பெயர்களில் எழுதி வருகிறார்கள். அங்கிருக்கும் பத்திரிகையாளர்களை ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இப்போது வந்திருக்கும் பகுதிகளுக்கு அழைத்துப் போகச் சொல்லி உலகப் பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், மகிந்தா காதில் இது இன்னும் விழவில்லை!

ராஜபக்ஷே கட்சியில் கருணா

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற புதிய அமைப்பை ஆரம்பித்தார். இப்போது அதிலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா, தன்னை பிரான்ஸின் நிரந்தரக் குடிமகனாக்க வேண்டும் என்று சிங்கள அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார். அதன்படி பாஸ்போர்ட் எடுத்து அவர் லண்டனுக்கு அனுப்பப்பட்டார். ஆனால், அது போலியானது என்று சொல்லி கைது செய்து 17 மாதங்கள் சி¬றையில் வைத்துவிட்டார்கள். அதற்குள் அவரது கிழக்கு மாகாணத்தில் கண்துடைப்புக்காக ஒரு தேர்தலை நடத்தி கருணா கட்சியில் இருந்த பிள்ளையானை முதலமைச்சராக ஆக்கினார் மகிந்தா. இது கருணாவுக்குப் பிடிக்கவில்லை.'சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் மறுநாளே கொழும்பு போய்விட வேண்டும்' என்ற நிபந்தனையுடன் லண்டனில் இருந்து விரட்டப்பட்ட கருணா, மகிந்தா காலில் வந்து விழுந்தார். 'என்னைக் கிழக்கு மாகாண முதலமைச்சராக்குங்கள்' என்றார். அதை மறுத்த மகிந்தா, கருணாவுக்கு எம்.பி. பதவியைத் தந்தார். உடனே அமைச்சர் பதவி கேட்டார் கருணா. அவருக்கு அதைக் கொடுக் கக் கூடாது என்று இன்னொரு அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா சொல்ல... அதுவும் நடக்கவில்லை. 'இன்னொரு டக்ளஸாக கருணாவை விட மாட்டேன்' என்று கர்ஜிக்கி றார் அவர். மத்திய மாகாணத் தேர்தல் முடிந்ததும் தனக்கு அமைச்சர் பதவி தரப் போவதாக கருணா சொல்லி வந்தார்.

இந்நிலையில் பிள்ளையானுக்கும் அவருக்குமான மோதல் அதிகமானது. கருணாவின் பாதுகாவலர்கள் திடீரென்று கொல்லப்பட்டார்கள். பிள்ளையானின் உதவியாளர் பதிலுக்குக் கொல்லப்பட்டார். 'திறமை சாலிகள்தான் முதலமைச்சராக இருக்க வேண்டும். அது பிள்ளையானுக்கு இல்லை' என்று சொல்லப் போக, அடுத்த குழப்பம் ஆரம்பமானது. 'எனக்கு எந்த அதிகாரமும் கொடுக்காமல் நான் என்ன செய்ய முடியும்?' என்று பதிலுக்குக் கேட்ட பிள்ளையான், கட்சியின் மத்திய குழுவைக் கூட்டி கருணாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இனி, இவர்களுடன் குப்பை கொட்ட முடியாது என்று முடிவெடுத்த கருணா, மகிந்தாவின் கட்சியில் சேர்வ தற்கான பேச்சுவார்த்தையைத் தொடங் கினார். 'கிழக்கை மட்டும் அடிப்படை யாகக்கொண்ட சின்ன கட்சியில் என் னால் இனி இருக்க முடியாது' என்று அறிவித்துள்ளார் கருணா.

'கிழக்கு மாகாணத்து மக்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை பிரபாகரன்' என்று காரணம் சொல்லிவிட்டு வெளியேறிய கருணா, இப்போது 'அகில இலங்கையர்' என்ற கோஷத்தைக் கிளப்பியுள்ளார். அமைச்சர் பதவி கிடைக்கும் வரை இன்னும் எதுவேண்டுமானாலும் சொல்லலாம்!

புலிகள் மறைக்கும் போர்ச் செய்திகள்!

சமீபத்தில் நடந்த இரண்டு முக்கியத் தாக்குதல் தொடர்பான தகவல்களைப் புலிகள் மறைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கல்மடுகுளம் அணையைப் புலிகளின் கரும்புலிகள் படை குண்டு வைத்துத் தகர்த்ததாகவும் அதில் 3,400 சிங்கள வீரர்கள் இறந்துபோனதாகவும் தகவல் வந்தது. ஆனால், இதைப் புலிகள் தங்களது வெற்றியாகச் சொல்லவில்லை. இதை ராணுவமும் மறுக்கவில்லை. புலிகளின் படகுகளைக் கைப்பற்றியதாக மட்டும் ராணுவம் ஒப்புக்கொண்டது. ஊருக்குள் எப்படிப் படகு வந்திருக்கும்? அணையை உடைத்துவிட்டு அதன் தண்ணீர் பாய்ச்சலில் படகுகளை இயக்கி ராணுவ முகாம்களைப் புலிகள் தகர்த்ததாகக் கூறப்படுகிறது. இது ஒன்று.

அடுத்ததாக, புதுக்குடியிருப்பு பகுதியைக் கைப்பற்ற ராணுவத்தினர் முன்னேறி வருவதாகத் தெரிந்ததும் வற்றாப்பனை, கேப்பாப்புலவுக்கு இடையில் கடலில் குதித்து புலிகள், ராணுவத்தைச் சுற்றி வளைத்திருக்கிறார் கள். அதாவது, முக்கோணமாகப் புலிகள் சுற்றி இருந்துகொண்டு செல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் 59-வது பட்டாலியனே நி¬லை குலைந்திருக்கிறது. ராணுவத்தின் டாங்கிகள் மட்டுமல்ல, வெடி மருந்துகள் ஏற்றி வந்த பஸ்கள், லாரிகளும் சிதைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலிலும் சுமார் 500 ராணுவத்தினர் பலியாகி இருக்கலாம். இதுபற்றியும் அதிகாரபூர்வ தகவல்களைப் புலிகள் சொல்லவில்லை!

கடைசி யுத்தம் கடலில்தான்!

பல ஆண்டுகளுக்கு முன் முல்லைத்தீவு கடல்பகுதி சிங்கள ராணுவத்தின் கையில்தான் இருந்தது. இதனால் புலிகளின் கடல் போக்குவரத்துக்கு தடைப்பட்டது. 'ஓயாத அலைகள்-1' என்ற போரின் மூலம் முல்லைத்தீவை மீட்டார்கள் புலிகள். ஆறு மாத காலம் முல்லைத்தீவு கடற்படைத் தளத்தைப் புலிகளின் புலனாய்வுப் படை வேவு பார்த்து அதன் மொத்த பிளானையும் பிரபாகரனுக்குச் சொன்னது. ஒருபக்கம் இந்து மகா சமுத்திரம், இன்னொரு பக்கம் நந்திக்கடல், அடுத்த பக்கம் வட்டவாகல் ஆறு என மொத்தமும் தண்ணீர்தான். இந்தப் பகுதியில் மொத்தம் 1,600 சிங்கள ராணுவ வீரர்கள் இருந்தார்கள். எட்டு முனைகளில் இந்த முனைகளைப் புலிகள் தாக்கினார்கள். இரண்டு முனைகளைக் கடற்புலி தாக்கியது. உடனே, பல்வேறு இடங்களில் இருந்து முல்லைத்தீவை நோக்கி ராணுவம் வந்தது. அவர்கள் அத்தனை பேரையும் பல இடங்களில் வழிமறித்தார்கள் புலிகள். சிக்கலில் மாட்டிக் கொண்ட சிங்கள ராணுவம், வான்படை வீரர்களை உள்ளே இறக்கியது. அவர்களையும் புலிகள் பிடித்தார்கள்.காலை 9 மணிக்கு ஆரம்பித்த சண்டை மாலை 5 மணிக்கு முடிந்தது. புலிகள் பக்கம் 315 பேரும் ராணுவத்தினர் 1,500 பேரும் ஒரே நாளில் பலியான பெரிய சண்டை அது.

அங்குதான் 12 ஆண்டுகள் கழித்து இப்போது சண்டை நடக்கப் போகிறது. இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட அமைதிப்படை உள்ளே நுழைய முடியாத இடத்தில், சிங்கள ராணுவம் ஒரு நாள் சண்டையில் பறிகொடுத்த இடத்தில் நடக்கப் போகிறது கடைசி யுத்தம்!