Published:Updated:

தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு என்ன?

Vikatan Correspondent
தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு என்ன?
தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு என்ன?

வாசகர் பக்க கட்டுரை

கி.பி.2215 : 'தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்', 'மீன்பிடி வலைகள் அறுக்கப்பட்டன', 'மீனவர்கள் சிறைபிடிப்பு', 'கண்டித்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை', 'தமிழக முதல்வர் மீனவர் விடுதலை குறித்து பிரதமருக்கு கடிதம்', அதே கி.பி. 2215 'மீனவர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு' மத்திய அமைச்சர் உறுதி, என இன்னும் 200 வருடமானாலும் தீர்க்கமுடியாத கன்னித்தீவு கதை போல மீனவர் பிரச்னை நீண்டு கொண்டே போக காரணம் என்ன?

தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு என்ன?

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுடுவோம் என ரணில் கொக்கரிப்பதை கண்டிப்போம். அதேநேரத்தில், நமது தரப்பின் தவறுகளையும் பார்ப்போம்...

மீன் பிடிப்படகுகளில் Trawler boats என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற இழுவைப் படகுகள் என்று ஒரு வகை உள்ளது. அதேபோல மீன்பிடிக்கப் பயன்படுத்துகின்ற வலைகளில் மடிவலை என்று ஒரு வகை உள்ளது. இந்த இழுவைப் படகுகளிலிருந்து மடிவலையை வீசி இழுக்கும்போது அந்த வலை கடலின் தரைப் பகுதி வரையில் சென்று படிந்து இறால் போன்ற ஆழத்தில் வாழ்கின்ற மீன் வகைகளை இழுத்துக் கொண்டு வருகிறது.

இதில் இருக்கின்ற எதிர்மறை அம்சம் என்னவென்றால் மடிவலை வளர்ந்த மீன்களை மட்டும் இழுத்து வருவதில்லை. குஞ்சுகளையும் குளுவான்களையும், ஏன் முட்டைகளையும் கூட இழுத்துக்கொண்டு வருகின்றது. வலையில் சிக்கியிருக்கின்ற இறால்கள் நல்ல விலையைப் பெற்றுத் தருகின்றன. மற்றவை எல்லாம் கழிவுகளாகிப் போகின்றன. குஞ்சுகளும், முட்டைகளும் கழிவுகளாகிப் போனால் அடுத்த மீன்வளம் எங்கிருந்து வரும்..?

இந்த நிலையில், தங்கள் பகுதியில் அதிக வருமானம் தருகின்ற இறால் மீன் வளம் குறைந்து விட்டதால், வேறு வழியின்றி அவை அதிகமாக உள்ள இலங்கையின் கடல் பகுதி வரை சென்று தமிழக மீனவர்கள் மடிவலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது அதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கருதுகின்ற இலங்கை மீனவர்கள் அங்கே வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

இதற்கு  இருதரப்பு பேச்சு வார்த்தையில் இலங்கை விட்டு கொடுத்தால் மட்டுமே முடியும். இல்லாவிட்டால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீனவர் மீது தாக்குதல் என தொடக்கத்திலே  சொன்னது போல் தொடரும்...

ஷான் (மயிலாடுதுறை)