Published:Updated:

'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது!'

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது!'

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

Published:Updated:
'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது!'
##~##
''நோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ய் நொடி இல்லாம, நல்லாருக்கணும்! நானும், என்னைச் சுத்தியிருக்கிற மக்களும், நோய்களோ வேறு எந்தக் குறைகளோ இல்லாம, நிம்மதியா வாழணுங்கறதுதான், என் தினசரி பிரார்த்தனை!''  - ஸ்ருதி பிசகாமல், மென்மையாகப் புன்னகைக்கிறார் வீணை இசைக் கலைஞர், ரேவதி கிருஷ்ணா.

''நான் 11 வயசு சிறுமியா இருந்தப்போ, மடியில வீணையை ஏந்திக் கத்துக்கிட்டேன். இன்னிக்கி நினைச்சுப் பார்த்தா, வீணைங்கறது வெறுமனே ஒரு இசைக்கருவியா  எனக்குத் தெரியலை; ஒரு குழந்தையாத்தான் வீணையை உணர்றேன். ஒரு குழந்தையைப் பார்த்ததும், அள்ளியெடுத்து, அப்படியே மடியில வைச்சுக்கிட்டு, தலையைக் கோதி, கன்னத்தைக் கிள்ளி, செல்லமாக் குட்டி, ஆதரவா வருடிக் கொடுத்து... அந்தக் குழந்தையை எப்படியெல்லாம் சீராட்டறோம்?! ஆக, குழந்தைதான் வாழ்க்கை, வீணைதான் என் இதயத் துடிப்புன்னு வந்துட்ட பிறகு, நோய்களாவது வியாதியாவது?!'' என்று சிரித்தபடி சொல்கிறார் ரேவதி கிருஷ்ணா.

'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது!'

''காலைல எழுந்து, பல் தேய்ச்சு, முகம் கழுவின உடனே நான் செய்றது, என்னைச் சுத்தியிருக்கிறவங்க எல்லாரும் நல்லாருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கறதுதான்! அப்புறம், மொட்டை மாடில அரை மணி நேரம் வாக்கிங். கிட்டத்தட்ட, அந்த அரை மணி நேரமும் நான் மௌனச் சாமியார்தான். இன்னிக்கி என்ன வேலை, எங்கே நிகழ்ச்சி, என்ன செய்யலாம்னு திட்டமிடறதும் அந்த நேரத்துலதான்! மாடியிலேருந்து அண்ணாந்து வானத்தைப் பார்க்கும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்னு தோணும். அதனால, பாராட்டு, புகழ் எதையுமே தலைக்கு ஏத்திக்கறது இல்லை. தலையில கனமில்லேன்னா, மனசுல பயமும் இல்லை; பதற்றமும் இருக்காது!

வாக்கிங் முடிஞ்சு வந்ததும், 'ஸ்டெப்பர்’ல பெடலிங் பண்ணுவேன். நேரா நிமிர்ந்து நின்னு, கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் கொடுத்துப் பெடல் பண்றது தனிச் சுகம். சட்டுனு, சின்ன வயசுல சைக்கிள் ஓட்டினது பிளாஷ்பேக்ல ஓடும். என் பிளாஷ்பேக்ல எப்போதுமே சோகக்காட்சிகளுக்கு இடமில்லை'' என்று சொல்லும்போதே, கலகலவெனச் சிரிக்கிறார் ரேவதி கிருஷ்ணா.

''உண்மையில் இந்தச் சிரிப்பு கூட அற்புதமான மருந்துதான்! 'வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்’னு எந்தப் புண்ணியவான் சொன்னாரோ தெரியலை. ஆனா, அனுபவிச்சு, சிரிச்சுச் சிரிச்சு, ரசிச்சு ரசிச்சு சொன்னதாத்தான் உணர்றேன். எந்த விஷயமா இருந்தாலும், அதை ரசிக்கவும், அதைப் புரிஞ்சுக்கிட்டு மனசு விட்டுச் சிரிக்கவும் செஞ்சாப் போதும்; நோய் நொடியெல்லாம் ஓடிடும். ரசனை ஒரு மெடிக்கல் ஷாப்னா, அங்கே கிடைக்கிற சர்வரோக நிவாரணி -  சிரிப்பு! அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க. அகத்துல ரசனை இருந்தாத்தான், முகத்துல சிரிப்பு படர்ந்திருக்கும். அதனால, மனசுல முட்களைச் சேகரிக்கறதை விட்டுட்டு, ரோஜாக்களைப் பதியனிடுறதுதான், மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கான முதல் வழியும்கூட!

சுவாரஸ்யமான விஷயங்களை ரசிக்கிறதுக்கும், சிரிக்கிறதுக்கும் நாம தயாரா இருக்கணும். குறிப்பா, நம்ம மனசு அலம்பிவிட்ட மொசைக் தரை மாதிரி, பளிச்சுனு அமைதியா இருக்கணும். அந்த அமைதியை, இசையால தரமுடியும். அமைதியான மனசுல பதற்றமோ படபடப்போ இருக்காது; நிதானமும் நேர்த்தியும் நிறைஞ்சிருக்கும். ஆக, அமைதியான மனசுக்கு உத்தரவாதம், இசை; சந்தோஷமான வாழ்க்கைக்கு, ரசிப்புத்தன்மை உத்தரவாதம்! தியாகப் பிரும்மம் தனது கீர்த்தனையில சொல்வார்... 'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது’ன்னு! அமைதியும் ரசிப்புத் தன்மையும் இருந்துட்டா, எப்பவும் சௌக்கியமா, ஆரோக்கியமா இருக்கலாம். நான் அப்படித்தான் இருக்கேன்.

'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது!'

உடற்பயிற்சி முக்கியம்தான்; ஆனா, அதைவிட மனசை ஒருநிலைப்படுத்தற மனப்பயிற்சியும், மனம் குவித்த பிரார்த்தனையும் ரொம்பவே அவசியம்! குளிச்சு முடிச்சு, பூஜையறைக்குப் போனதும், அடுத்த அரை மணி நேரத்துக்கு, மறுபடியும் நான் மௌனச் சாமியார். 'இப்பிறவியை எனக்குத் தந்து, இசையில் ஞானத்தையும் புகழையும் தந்த இறைவா, உனக்குக் கோடி முறை சொல்கிறேன், நன்றிகளை!’ என்று பிரார்த்தனை ஓடிக்கொண்டே இருக்கும்.

எல்லாம் முடிஞ்சு வந்ததும், நானும் என் 'குழந்தை’யும் தான்! 'வாடாக் கண்ணு...’னு செல்லமா தூக்கி, மடியில வைச்சுக்கிட்டு, அதன் விரல்களை, தலையை வருடிவிட்டபடி, குழந்தையோட குழந்தையா, வீணையோட வீணையா மாறி, கரைஞ்சு கலந்திருக்கும் அற்புதமான தருணம் அது!

'ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்...’, 'பூமாலையில் ஓர் மல்லிகை’னு ரம்மியமான சினிமா பாடல்களை விரல்களின் வழியே, வீணையின் நரம்புகளில் செலுத்தி, இசையாக, நாதமாக, கீதமாகக் கொண்டு வர்றது, ஆத்மானுபவம். விவரிக்கவே முடியாத சிலிர்ப்புத் தித்திப்பு இது! மனசுல என்ன சோகம் இருந்தாலும், உடம்புல எத்தனை அசதி இருந்தாலும், எல்லாமே காணாமப் போயிடும்; கண்ணுக்கு எட்டின தூரத்தைக் கடந்து ஓடியே போயிடும்!'' என்று கண்களை மூடியபடி, அனுபவித்துச் சொல்கிறார் ரேவதி கிருஷ்ணா.

''எல்லாத்துக்கும் மேலே முக்கியமா ஒரு விஷயம்... நாம எந்த வேலையைச் செய்தாலும், அதுல ஆத்மார்த்தமா ஈடுபடணும். வேலையின் நிலை, சூழல் எல்லாத்தையும் உள்வாங்கிக்கிட்டு, அந்த வேலைக்கு நம்மளை அப்படியே ஒப்படைச்சிடணும். அப்படி வேலை பார்க்க ஆரம்பிச்சுட் டோம்னா, ஆரோக்கியமான தேகமும் மனசும் நிச்சயம்! அதுக்கு நான் கியாரண்டி!'' என்று விளம்பரத்தில் வருவது போல் முகம் மலரச் சொல்லிவிட்டு, வீணையின் நரம்புகளில் விரல்களை ஓடவிடுகிறார், ரேவதி கிருஷ்ணா.  

அவர் சொன்னதை ஒப்புக்கொண்டு ரசிப்பதுபோல், சிணுங்கிச் சிரிக்கிறது வீணைக் குழந்தை!

- வி.ராம்ஜி
  படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism