Published:Updated:

தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்

தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்

தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்

தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்

Published:Updated:

01-04-09
தொடர்கள்
தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்
தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்
 
தீதும் நன்றும்!
தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடன்

தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்
தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்

மார்ச் மாதம் மகளிர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது!

கோலாகலம் என்பது நகை வாங்கு, புடவை வாங்கு, உயர்வான விடுதியில் ஒப்பனைப் பொருட்கள் வாங்கு, நடனங்களுக்காக முன்பதிவு செய்துகொள் என நாள்தோறும் தினசரியில் வணிக விளம்பரங்கள். அவ்வாறுதான் நமக்கு அட்சய திரிதியை, காதலர் தினம், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என எதையும் கொண்டாடுவதில் எவருக்கும் குறையும் வருத்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், சமூகத்தில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான மக்களுக்கே கொண்டாட்டங்களுக்கான நேரமும், நினைப்பும், வசதியும் இருக்கிறது. இதில் எமக்கென்ன ஒட்டும் உறவும் என விட்டேத்தியாகக் கேட்கிறார்கள் வாக்களிக்கக் காசு வாங்கும் ஏழை எளிய மக்கள்.

ஆடம்பரமான இந்தக் கொண்டாட்டங்கள் வறிய மக்களின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கின்றன. மாதம் ஐயாயிரம் பாக்கெட் மணி பெறும் மாணவரிடையே, மாதக் குடும்ப வருமானம் ஐயாயிரம்கூட இல்லாத மாணவரும் கற்கின்றனர். இது மனரீதியின் வன்முறை என்பது கொண்டாடுபவருக்கும், ஊக்குவிப்பவருக்கும், விளம்பரம் செய்யும் பெரு வணிகருக்கும் உறைப்பதில்லை.

நமது தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினர், பல லட்சக்கணக்கானோர் பதுங்கு குழிகளிலும், அகதி முகாம்களிலும், கொடுங்காடுகளில் சாக்குப் படுதாக் கூரைகளின் கீழும், கிளஸ்டர் குண்டுகளுக்கும் பாஸ்பரஸ் குண்டுகளுக்கும் அஞ்சி ஒடுங்கி, கையது கொண்டு மெய்யது போர்த்தி, புண்பட்ட காயங்களின் ஒழுகும் குருதிக்கும், வடியும் சீழுக்கும் வைத்தியமற்று... அஞ்சி அஞ்சி வாழும் தருணத்தில், நாம் 'பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என்று எஸ்.எம்.எஸ். செய்தோம்; மாய்ந்து மாய்ந்து விளம்பரங்கள் செய்தோம்; விற்பனை செய்தோம்; கேளிக்கை சேனல்களின் முன் அமர்ந்து, வாயில் எலி நுழைவது தெரியாமல், பண்பாட்டுப் பெட்டகங்களின் அருளுரைகளுக்கும் ஆசியுரைகளுக்கும் வாழ்த்துச் செய்திகளுக்கும் நாவூறிக் கிடந்தோம்.

மகளிரைப் போற்றவும் ஏற்றவும்தான் மகளிர் தினம் என்பது நமக்குப் புரியாமல் இல்லை. நமது கவிதான், 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்றான். நமது கவிதான், 'மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா' என்றான். ஆனால், 'ஆடுகள் தினம்' கொண்டாடி, அதற்குப் பொட்டிட்டு மாலை சூடி, பாடி ஸ்ப்ரே தெளித்து, வெட்டிப் பிரியாணி சமைப்பது போன்ற வெட்கக்கேடுதான் சமூகத்தில் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.

ஒரு பெண் கவி என்னிடம் கேட்டாள்... ஆண் கவிகள் துடி இடை, கொடி இடை, மின் இடை, இள வன முலை, பார இளநீர் சுமக்கப் பொறாத இடை, அபினி மலர் மொட்டுப் போன்ற முலைக் காம்பு, மூங்கில் தோள், ஆரஞ்சுச் சுளை அதரம், வண்டோ விழி, மேகக் கூந்தல், பச்சரிசிப் பல், அரவத்தின் படம் போன்ற, மான் குளம்பு போன்ற அல்குல், வாழைத்தண்டோ கால்கள், முன்னழகு பின்னழகு, புலியின் நாக்கு போன்ற பாதம், வில்லினை நிகர்த்த புருவம், பால் நிற மேனி, பளிங்கு போல் மேனி, மாம்பழக் கன்னம் என்றெல்லாம் பெண்களை வர்ணிப்பது போல், நாங்கள் உவமை சொல்ல ஆரம்பித்தால் என்ன ஆகும்?'

எனக்கு உண்மையில் திகிலாக இருந்தது. உண்மைதான். குற்றால அருவியில் குளிக்கும் ஆண் உடல்களைச் சற்றுக் கூர்ந்து பாருங்கள். பானை வயிறு, சூம்பிய தோள்கள், வற்றித் தொங்கும் மார்பு, கனிந்து கறுத்துச் சிறுத்த சிறு பழம் போன்ற ஆண் குறி, பறித்துப் பதினைந்து நாட்கள் ஆன நீலக் கத்திரிக்காய் போன்று வாடி வதங்கிய விதைப் பைகள், கோரை முடி, மாட்டுப் பற்கள், குடியில் இடுங்கிச் சிவந்த கண்கள், இல்லாத புட்டம், மயிரற்ற மார்பு, ஏழாண்டுகளாக வெட்டாத கால் நகங்கள், பாளம் பாளமாகப் பித்தத்தில் வெடித்த பாதங்கள், முன் வழுக்கை, பின் வழுக்கை, உச்சி வழுக்கை, வறட்டு நோய் பிடித்த தேங்காய் மண்டை, மூளை இருக்கிறது என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாத வாய் மொழி... பெண் கவிகள் இவற்றை வர்ணிக்க ஆரம்பித்தால், நமது வெளிப்பாடு என்னவாக இருக்கும்? உடனே கேட்பவர் கற்பைக் கேள்வி கேட்க மாட்டோமா?

பெண்ணை வெறும் உடலாகப் பார்ப்பது, consumer durable ஆகப் பார்ப்பது, போக அனுபவமாகப் பார்ப்பது என்பது எவ்வளவு கேவலமான காரியம்?

நமது சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், நீதி நூல்கள், சித்தர் பாடல்கள் எனப் புகுந்து தேடினால், பெண்களுக்கான நியாயம் வழங்கப் பெற்றிருக்கிறதா? 'கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா' என்பதில்கூட மானுட நேயத்தை மறைத்ததொரு நாவூறல் நமக்குப் புலப்படவில் லையா?

'பெண்கள் நாலு வகை, இன்பம் நூறு வகை, வா' என்கிறது சினிமாப் பாடல் ஒன்று. 'ஆண்கள் ஆறு வகை, அனுபவம் அற்ப வகை, போ' எனப் பெண் பாடினால் தாங்குமா நண்பர்களே!

பெண் வயசுக்கு வந்த அடுத்த மாதமே உடலுறவுக்குக் கூப்பிடுகின்றன திரைப் பாடல்கள். 'மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே' என்கிறது இன்னொரு பாடல். அந்நாட்களில் பதின்மூன்று, பதினான்கு வயதில் பெண்கள் வயதுக்கு வந்தனர். இன்று எட்டு அல்லது ஒன்பது வயது முதலே பருவம் எய்துகிறார்கள். அடுத்த மாதம் அவர்கள் மாமனுக்குத்தானா? அவர்களுக்கு நாம் வழங்கும் பாடல்களா இவை?

'சிக்ஸ் பேக் மசில்ஸ் வெச்சிருக்கேன், முகமெல்லாம் மசிர் வெச்சிருக்கேன், மோட்டார் பைக் வெச்சிருக்கேன், பை நிறைய காசு வெச்சிருக்கேன், மனம் பூரா வக்கிரமான காமம் வெச்சிருக்கேன்' எனும் திரைப்பட நாயகர்களை, மகளிர் தினம் கொண்டாடுவோர் என்ன செய்ய உத்தேசிக்கிறார்கள்?

தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்

'எத்தால் விடியும் இரா?' என்றும், 'இரா என்னல்லது இல்லாத் துணை' என்றும், 'நெஞ்சு களம்கொண்ட நோய்' என்றும் பெண்ணின் காதலை, காமத்தை, தனிமையை, விரகத்தைக் கண்ணியமாகப் பாடிய கவிதைகள் இருக்கின்றன நம்மிடம். ஆனால், இன்று ஆண் கவிகள் நமது காமத்தை, வக்கிரத்தைக் கிளர்த்தும் தாபம், தாகம், மகளிரைக் கௌரவப்படுத்துவதாக இல்லை. எத்தனை இச்சை? எத்தனைக் கொச்சை? நிறையச் சம்பளம் வாங்குகிற, மெத்தப் படித்த, விரை வில் வெளிநாடு போகும் தயாரிப்புகளில் இருக்கிற புது மணமகன் தனது இளம் மனைவியை அறிமுகப் படுத்திக் கேட்கிறான், ''how is she?''. அவள் என்ன புதிதாக அவன் வாங்கிய ஆடம்பர வாகனமா? கட்டி முடித்துப் பால் காய்ச்சிய வீடா? What he means by -‘‘how is she?’’. அவளுடனான ஓர் இரவை நண்பர்களுக்குத் தலைக்கு ஒன்றெனப் பகிர்ந்து அளித்தும் கேட்பாயா, ''how is she?'' என? படிப்பு, பணம், பதவி, பண்பாடு எல்லாம் நமக்கு எதைக் கற்றுத் தந்தன நண்பர்களே?

இந்திய சினிமாக்கள் அனைத்தும் காதல் வந்தால், பனி பெய்யும் குளிர் மலை அடிவாரத்தில் போய் ஆடுகின்றன. ஆடட்டும்; நமக்கென்ன? நமக்கு விதித்தது 40 டிகிரி பாலை வெயில்! ஆனால், நமது வியப்பு பெண்கள் யாவரும் அரைக் கச்சு மட்டும் அணிந்து ஆடுகிறார்கள் அத்தனைக் குளிரில். ஆணெல்லாம் செஸ்ட் கோட், நெக் கோட், ஓவர் கோட், மப்ளர், தொப்பி, கையுறைகளுடன் ஆடுகிறார்கள். முன்பு ஒரு நட்சத்திர இயக்குநர், நாயகி பெருந்துடை வரை புடவை வழித்து அம்மி அரைக்கும் காட்சியும், பெருத்த முலை பிதுங்கக் குனிந்து பெருக்கும் காட்சியும் மறக்காமல் வைப்பார். இன்றைய நட்சத்திர இயக்குநர்கள் கிட்டத்தட்ட அம்மணமாகப் பெண்களைப் படம் பிடிக்கிறார்கள். எல்லாப் பருவ இதழ்களும் கண்ணும் கருத்துமாக முன்னட்டை முதல் பின்னட்டை வரை வண்ணங்களில் குழைத்துப் பரிமாறுகின்றன! அழகுக்கு யாரும் எதிரி இல்லை. நிர்வாணத்துக்கு எவரும் விரோதி இல்லை. புணர்ச்சிக்கும் உட்பகை கிடையாது. ஆனால் காதல் என்பதும், காமம் என்பதும், தெள்ளிய நீரோடும் நட்டாற்றில் மலத் துணியை அலசுவது அல்ல. இந்த மீமனிதர்கள்தாம் மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் செய்தி விடுக்கிறார்கள். இது பொய்மைமட்டு மல்ல; கயமையும் கூட அல்லவா? ஒரு பக்கம்'தேனாட தினையாட', இன்னொரு பக்கம் 'கற்பின் கனலி, பொற்பின் செல்வி' எனில், இதை எந்தக் கடையில் கொண்டு விற்பது நாம்? யார் வாங்குவார்கள்?

'செம கட்டை' எனும் வடமொழிக் கலப்பற்ற தூய தமிழ்ச் சொல்லை மொழிக்குள், பண்பாட்டுக்குள் உரு வாக்கி உலவவிட்ட பீடங்கள் எவை? பெண்ணை ஃபிகர் என்று சொல்லக் கூசவில்லையே நமக்கு? அதைச் சொல்லாத சேனல்கள், எஃப்.எம் அலைவரிசைகள், சினிமாக்கள், பருவ இதழ்கள், விளம்பரங்கள் உண்டா நமது மொழியில்? எவனும் வெட்கமின்றிச் சொல்வானா, தன்னுடன் வரும் பெண்ணை ஃபிகர் என்று? இந்த ஃபிகர் என் தங்கை, அந்த ஃபிகர் என் மனைவி, பின்னால் வரும் ஃபிகர் என் தாய், முன்னால் வேகமாக நடக்கும் ஃபிகர் என் மகள் என எவனும் முன்மொழிவானா? அதை நீங்கள் வழிமொழிவீர்களா?

முட்டை போடும் பெட்டைக் கோழி, அடுப்பூதும் பெண், பொட்டப்புள்ள, பொட்டச்சி, ஊரான் சொத்து, இன்னொருத்தன் வீட்டுக்குப் போறவ, பொம்பள சிரிச்சாப் போச்சு, உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு எனும் பிரயோகங்கள் நம் நாடு தவிர வேறெங்கும் உண்டா?

மகளிர் தினம் கொண்டாட நமக்கு என்ன யோக்கியதை? அல்லது, மக்கள் சம்பந்தம் அற்ற அரசு விழாவா இது? சுதந்திர தினம், குடியரசு தினம், கொடி தினம், தியாகிகள் தினம், தேசிய ஒருமைப்பாடு தினம், எய்ட்ஸ் ஒழிப்பு தினம், சாலைப் பாதுகாப்பு தினம், சிறுசேமிப்பு தினம், ஆசிரியர்கள் தினம், தாய்மார்கள் தினம், உலகச் சுகாதார தினம் போல?

இந்தக் கட்டுரை எழுதத்தான், வெளியிடத்தான் எமக்கு என்ன யோக்கியதை இருகிறது? இந்திய மக்கள் தொகை 112 கோடி எனில், பெண்கள் அதில் 56 கோடி. கள்ளிப் பால் கொடுத்தது போக, முழு நெல் கொடுத்தது போக, குச்சி வைத்தது போக, தனியார் மருத்துவமனைகள் கலைத்தும் கரைத்தும் தள்ளியது போக, இந்த 56 கோடிப் பேருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் எத்தனை பிரதிநிதிகள்? இருக்கும் பிரதிநிதிகளும் சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்படுவார்களா அல்லது ஆண்களின் கரங்களில் அசையும் பாவைகளா? 50 சதவிகிதம் என்றும், 30 சதவிகிதம் என்றும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு எத்தனை ஆண்டுகளாக ஏலம் போட்டுக்கொண்டு இருக்கிறோம்? இந்த ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதில் இந்திய நாட்டில் உள்ள 919 அரசியல் கட்சிகளின் பிரச்னை என்ன? நம்மில் யாருக்காவது தெரியுமா? இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் சரிசமமான பிரதிநிதித்துவம் வருமா நமது நாட்டில்?

பிறகென்ன, மகளிர் தினக் கொண்டாட்டங்கள்? தாய்க்கு ஒளித்த மகளின் சூல் போலத் தெரியவில்லையா? முதுகில் வேல் வாங்கிய கோழைக்குப் பால் கொடுத்த தாய், தன் மார்பை அறுத்து எறிவேன் என வெஞ்சினம் உரைத்த சங்கப் பாடல் உண்டு நம்மிடம். ஐம்பதாண்டு கால அரசியல் வரலாற்றில், கேட்டுக் கேட்டுக் காது புளித்துப்போன பாடல்.

எல்லோர்க்கும் பொதுவாக என்னிடம் ஒரு கேள்வி உண்டு... அங்ஙனம் அறுத்து எறிவது என ஆரம்பித்தால், அறுக்கப்படாத தாய் மார்புகள் எத்தனை மிஞ்சும் நம்மிடம்?

பெண்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எவருக்கும் இளைத்தவரோ சளைத்தவரோ அல்ல. எவரிடமும் உமது உரிமைக்கு யாசிக்கும் நிலையிலும் இல்லை. தங்கத் தட்டில் வைத்து பட்டுத் துணி பொதித்து, தாமாக ஆண்கள் நீட்டவும் மாட்டார்கள்.

வில் வண்டி வைத்திருப்பவர்கள், காளைகளை அடித்து ஓட்ட சாட்டைக் கம்பு வைத்திருப்பார்கள். சாட்டையின் நுனியில் பட்டுக் குஞ்சம் கட்டி இருப்பார்கள். அந்தப் பட்டுக் குஞ்சம் காளைகள் கண்டு ஆனந்திக்க அல்ல. அடித்தால் வலிக்கும்; முதுகில் தடம் பதியும். துடித்துத் துள்ளிக் காளைகள் ஓட வேண்டியது இருக்கும். அந்தக் குஞ்சம் போலத்தான் இந்த மகளிர் தின மாயைகளும்.

பிறகு எதற்காக, யார் உத்தரவுக்குக் காத்து நிற்கிறீர்கள்?

 
தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்
- இன்னும் உண்டு
தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்