Published:Updated:

நிருபன் முகங்கள்... முகமுடிகள்

நிருபன் முகங்கள்... முகமுடிகள்

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
நிருபன்! முகத்திரை கிழிக்கும் தொடர்
நிருபன் முகங்கள்... முகமுடிகள்
நிருபன் முகங்கள்... முகமுடிகள்
 
முகங்கள்... முகமூடிகள்
நிருபன் முகங்கள்... முகமுடிகள்
நிருபன் முகங்கள்... முகமுடிகள்

மொபைல் அலறியது. எதிர்முனையில் புகழ்பெற்ற ஜோதிடர்.

"என்னங்க இந்த நேரத்துல..?"

"சார், கொஞ்ச நாளைக்கு முன்னாடி சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்த முக்கியமான நடிகர் ஒருத்தருக்கு நான் ஜோசியம் பார்த்தேன். வில்லன் நடிகர் ஒருவர்தான் அவரை எனக்கு அறிமுகம் செஞ்சுவெச்சார். அவரோட ரேகையையும் அவர் மனைவியோட ரேகையையும் வெச்சு ஜாதகம் கணிச்சேன். எப்போ கட்சி ஆரம்பிக்கணும், எப்போ கூட்டணி வெச்சுக் கலாம், யார் யாருக்குப் பதவி கொடுக்கலாம் அப்படின்னு நிறைய ஐடியாக்கள் சொன்னேன். 'நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கிறேன்'னு வாக்கு கொடுத்தார். நான் குறிச்சுக் கொடுத்த நாள்லதான் கட்சி ஆரம்பிச்சார். ஜோசியம் பார்த்து ஆறு மாசத்துக்கு மேல ஆகுது. ஆனா, இதுவரைக்கும் எனக்குப் பைசாவே தரலை சார்!"

"என்ன பாஸ்... உங்க ஜோசியத்துல அந்த நடிகர் காசு கொடுக்க மாட்டார்னு கண்டுபிடிக்க முடியாதா?" என்றேன் சிரிப்புடன்.

"இல்லை தம்பி..." என்று இழுத்தவரிடம், "பஞ்சாயத்துப் பேசி பைசா வாங்கித் தர்றது எல்லாம் என் வேலை இல்லை. வேணும்னா நியூஸ் போடலாம். உங்க ஆளு கோபப்பட்டு பணம் தர வாய்ப்பு இருக்கு" என்றேன்.

நிருபன் முகங்கள்... முகமுடிகள்

அடுத்த சில நாட்களில் ஜோதிடரின் வருத்தம் எழுத்துக் களாக உருமாறியது. புத்தகம் கடைக்கு வந்த காலையில் 'நன்றி' போன் செய்த ஜோதிடர், மூன்று மணி நேரம் கழித்து பதற்ற போன் போட்டார்.

"தம்பி, அவர் போன் பண்ணினார். 'உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நைட் போனை ஆன் பண்ணிவெச்சிரு'ன்னு சொன்னார். குரல் ரொம்ப கோபமா இருந்துச்சு. எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு தம்பி. என்ன பண்ணட்டும்?"

'அதிரடியா ஒரு ஃபாலோ-அப் அடிச்சிரலாமே' என நினைத்து, "அவர் போன் பண்ணினா கட் பண்ணிட்டு, எனக்கு கான்ஃபரன்ஸ் கால் போட்டுட்டு, பிறகு அவர்கிட்டப் பேசுங்க. என்ன பேசுறாருன்னு நானும் கேட்டுக்கிறேன். எதுவும் பிரச்னைன்னா பார்த்துக்கலாம்" என்றேன். இருந்தாலும், அவர் கொஞ்சம் பயத்துடன்தான் போனை வைத்தார். இப்போது எனக்கும் ஆர்வம். இரவுக்காகக் காத்திருந்தேன்.

நள்ளிரவு தாண்டியும் எந்த போனும் வரவில்லை. அசதியில் தூங்கிப்போன அதிகாலை 5 மணிக்கு அடித்தது ரிங். யெஸ்... அழைத்தது ஜோதிடர். "சார், இப்பதான் அவர் போன் பண்ணினார், நான் எடுக்கலை. அப்படியே லைன்ல இருங்க. நான் அவருக்குக் கூப்பிடுறேன்..." என்றார். குரலில் லேசான நடுக்கம்.

"ஹலோ" என்ற கனமான குரலுடன் என்ட்ரி ஆனார் நடிகர். அந்த அதிகாலையிலும் கடும் போதையில் இருந்த நடிகரின் குரல் குழறியது. ஆனாலும், எத்தனை சினிமாக்களில் ஒலித்த குரல் அது? ஆனால், இப்போது நாராசமாக ஒலிக்கத் தொடங்கியது.

"யோவ்... ஜோசியா... உனக்கு நான் என்னய்யா துரோகம் பண்ணேன்? என்ன .....த்துக்குடா பத்திரிகையில நியூஸ் குடுத்த. வெறும் பத்தாயிரம் ரூவா... அதுக்காக என்னை வந்து நீ ஃபோர்ஜரி, கிரிமினல் மாதிரி போட்டுவிட்டல்ல. டேய்... உன்னை வெச்சுக்குறன்டா."

ஜோதிடர் என்ன ரியாக்ட் செய்வது எனப் புரியாமல் "சார்... இல்ல சார்..." என கெஞ்சிக்கொண்டு இருந்தார்.

"க்ளக்... க்ளக்..." சத்தம். அடுத்த ரவுண்ட் குடிக்கிறார். மறுபடியும் அர்ச்சனை. "உன்னை என்னோட ஆஸ்தான ஜோதிடரா வெச்சுக்கலாம்னு நினைச்சேன். எல்லாத்தையும் நீயே கெடுத்துக்கிட்டியேடா. உன்னை எவ்ளோ நம்புனேன் தெரியுமாடா?"

"டேய்! நான் யாரு தெரியுமாடா? என் சாதிக்கு எவ்வளவு ஓட்டு இருக்கு தெரியுமாடா? எவ்வளவு உண்மைகளை உன்கிட்டே கொட்டினேன். அந்த மரியாதையை நீ காப்பாத்தி இருக்கணும்டா."

இந்த ஆட்டம் எனக்குப் பிடித்திருந்தது. என்னதான் நடக்கும்?

" 'பொம்பளை சகவாசத்தைக் குறைச்சுக்கோ... அதை வெச்சு அரசியல்ல உனக்குக் கெட்ட பேரு வரலாம்'னு நீ சொன்னதை நம்பி எவளையும் திரும்பிக்கூடப் பார்க்கலையேடா. நீ சொன்ன வார்த்தையைக் காப்பாத்துன எனக்கு நீ பெரிய கௌரவம் கொடுத்துட்டடா."

"ஐயா... தப்புப் பண்ணிட்டேன்யா... இந்த நிருபர் தம்பி சொன்னதை நம்பி நான் பாட்டுக்கும் பேசிட்டேன்யா... வேணும்னா அந்த நிருபர்கிட்டயே கேளுங்கய்யா... என்ன தம்பி கேட்டுக்கிட்டே இருக்கீங்களே... என் மேல எந்தத் தப்பும் இல்லேன்னு சொல்லுங்களேன்"- டமாலென்று போட்டு உடைத்துவிட்டார் ஜோசியர்.

நிருபன் முகங்கள்... முகமுடிகள்

இப்போது நான் மாட்டிக்கொண்டேன். இவ்வளவு நேரம் ஒட்டுக்கேட்ட சங்கடத்தை எப்படி மறைப்பது என்ற தடுமாற்றத்தில், 'சார், நடந்தது என்னன்னா...' எனப் பேச்சை மாற்ற முயன்றேன். ஆனால், நடிகர் அந்தச் சங்கடத்தைக்கூட எனக்குக் கொடுக்கவில்லை. 'ஓ' வென்று கதறி, விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தார். "சார், நீங்களே சொல்லுங்க... இந்த ஆளு சொன்னான்னு என் வீட்டு கொல்லைப் பக்கத்துல இருந்த ரெண்டு மரத்தை வெட்டினேன், ஒரு கெணத்தை மூடினேன். இவன் என்னடான்னா என்னைக் கடன்காரன்னு எழுதிட்டான். என் பொண்டாட்டி என்னைப்பத்தி என்ன தம்பி நினைப்பா? என்ன இருந்தாலும் இந்த ஜோசியன் இப்படி எழுதியிருக்கலாமா?" அழுகையின் இடையே வார்த்தைகள் விழுந்தன.

"இல்லை... அவர் சொன்னார். நான்தான் எழுதினேன்."

மறுபடியும், விசும்பி விசும்பி அழுதார். இப்போது ஜோதிடரின் குரலும் அவருடன் அழுகையில் ஜோடி சேர்ந்தது. "நானும் இதை எல்லாம் பத்திரிகையில போய்ச் சொல்லி இருக்கக் கூடாதுங்கய்யா.." 'கூ... கூ...' என அழுதார்கள் இருவரும். 'கொஞ்சம் முன்னாடி வரைக்கும் இந்த ஸீன் வேற மாதிரி இருந்துச்சேடா...' என எனக்கு யோசனை. அவர்கள் இருவரும் மாறி மாறி அழ... நான், கம்ப்யூட்டரைத் திறந்து ஃபாலோ-அப் அடிக்கத் தொடங்கி இருந்தேன்.

நிருபன் 'மருத்துவனாகி', மாட்டிக்கொண்டு விழித்த கதை ஒன்று உண்டு!

 
நிருபன் முகங்கள்... முகமுடிகள்
- அது... அடுத்த வாரம்
நிருபன் முகங்கள்... முகமுடிகள்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு