பிரீமியம் ஸ்டோரி

24-06-09
ஆலயம் ஆயிரம். ஓவியங்கள்: ஜெ.பி., படம்: பொன்.காசிராஜன்
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம்
 
காஷ்யபன்
ஆலயம் ஆயிரம்
வளங்கள் நல்கும் வசந்தவல்லபர் கதிரி லஷ்மி நரசிம்மர்

ஆலயம் ஆயிரம்

ரண்யனை இரு கூறாக்கி வதைத்த பின்பும் அண்ணல் நரசிம்மரின் ஆங்காரம் அடங்கவில்லை. அமரரும் அறவோரும் கம்பாலராயனி துர்கம் என்னும் பிரதேசத்தில் ஓர் உயரமான குன்றின் மேல் இருந்து, உக்கிர நரசிம்மரைத் துதித்து, அவரது ஆங்காரம் அடங்க ஆராதித்தனர். நரசிம்மரும் ஆங்காரம் அழிந்து, அமைதியே உருவாக அரிய தரிசனம் நல்கினார்.

அந்த அமைதிக் கோலத்தைத் தரிசிக்க இயலாத பிருகு மகரிஷி ஆதங்கம்கொண்டார். தீர்த்தம் ஒன்றினைத் தோற்றுவித்து, அதன் கரையினில் அமர்ந்து, நாராயணனை எண்ணி நற்றவம் இயற்றினார்.

மாலனும் மகரிஷி முன் தோன்றி 'மகரிஷி, தீர்த்தக்குளத்தில் தாங்கள் தரிசிக்க விரும்பிய கோலத்தில், அர்ச்சாமூர்த்தியாக அமிழ்ந்து இருக்கிறேன். எம்மைக் கண்டெடுத்து, இவ்வையக மக்கள் பயனுறும் வண்ணம் பிரதிஷ்டை செய்வீராக' என்று மந்தகாசப் புன்னகையுடன் உரைத்தார்.

பிருகு மகரிஷி தீர்த்தத்தில் அமிழ்ந்து ஆராவமுதனைத் தேடி எடுத்து வெளிக்கொணர்ந்தார்.

சிம்ம முகம்கொண்டு இருந்தாலும், சினம் இன்றி அமைதியே உருவாக அண்ணல் காட்சி அளித்தார். பேரின்பம் அடைந்த முனிவரும், அந்த மூர்த்தியை வசந்தவல்லபர் என்று வாயார அழைத்துப் பிரதிஷ்டை செய்தார்.

கிருதா யுகத்தில் பிரதிஷ்டை ஆன மூர்த்தி காலப்போக்கில் காணாமல் போனது. கலியுகத்தில் 10-ம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்து வந்த ரங்கநாயக்கர் என்பவரின் பசுக்கள், ஒரு கதிரி மரத்தடியில் காணப்பட்ட சாளக்கிராமம் ஒன்றைப் பாலால் அபிஷேகம் செய்தன.

பசுக்கள் பாலை எங்கோ ஈந்துவந்தபோதிலும், நாயக்கரின் இல்லத்தில் அதுகாறும் இருந்த வறுமை மறைந்தது. யாரும் வரவேற்காமலே வளமை வந்து சேர்ந்தது.

இறைவனின் திருவிளையாடல் என்பதை அறியாத ரங்கநாயக்கர் அடுத்தவர் செல்வம் தன் அகத்தில் குவிகிறதோ என ஐயப்பட்டு அச்சம்கொண்டார்.

ஓரிரவு அவர் கனவில் நரசிம்மர் எழுந்தருளினார். அவரது பசுக்கள் அன்றாடம் தன்னைப் பாலால் அபிஷேகம் செய்வதைப் பகர்ந்தார். தனது தரிசனம் தரணி மக்களுக்குக் கிட்டும் வகையில் தனக்கொரு கருவறை கட்டுமாறு பணித்தார்.

ஆலயம் ஆயிரம்

ரங்கநாயக்கர் பசுக்களைத் தொடர்ந்து சென்று கதிரி மரத்தடியில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த அர்ச்சாமூர்த்தியை அகழ்ந்து எடுத்தார். அவருக்கு ஒரு கருவறை கட்டினார்.

அதன் பின்னர், 13-ம் நூற்றாண்டில் அர்த்த மண்ட பமும் கோபுரமும் கொண்ட கோயில் எழும்பியது. கதிரி மரத்தடியில் தோன்றியதால் ஊரும் கதிரி என்றே அழைக்கப்படலானது.

புகழ்பெற்ற கதிரி நரசிம்ம சுவாமி ஆலயம், ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்து உள்ளது.

நாற்புறமும் ஐந்து நிலைக் கோபுரங்கள்கொண்ட ஆலயம் வெகு அழகாக உள்ளது. கோபுர வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தவுடன் வலது புறத்தில் சீதாதேவி, ராமர், லக்ஷ்மணர் எழுந்தருளி உள்ள சந்நிதி. சிற்ப வேலைப்பாடுகள் மிக்க தூண்கள் நிறைந்த அர்த்த மண்டபம். கருவறைக்கு நேர் எதிரில் முழந்தாளிட்ட நிலையில் கருடாழ்வார் தரிசனம் தருகிறார்.

கருவறையில் நரசிம்ம சுவாமி!

எட்டு புஜங்கள். அரக்கன் இரண்யகசிபுவைதொடை மேல் வைத்து, இரு திருக்கரங்களால் அரக்கனின் தலையையும் கால்களையும் பற்றியிருக்கிறார். மற்ற இரு திருக்கரங்களின் கூர் நகங்களால் அரக்கனைக்கிழித்து எறிகிறார். மற்ற நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கத்தி ஆகியன ஏந்தி, கூரிய கோரைப் பற்கள்கொண்டு இருந்தாலும் அமைதியாகக் காட்சியளிக்கிறார்.

அங்கமெங்கும் விலைமதிப்பிலா ஆபரணங்கள். அருகில் பக்தப் பிரகலாதனும் பரவச நிலையில் காட்சி தருகிறார்.

கருவறையை ஒட்டிச் சந்நிதிக்கு இடது புறத்தில் உற்சவ நரசிம்மர் அலங்கார மூர்த்தியாக ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் அருள் பாலிக்கிறார்.

மூலவர் கோயிலுக்கு இடது புறத்தில் அன்னை இல்லம். இதன் முன் மண்டபத் தூண்களில் சீரிய சிற்ப வேலைப்பாடுகள். ஆராவமுதனின் அழ குக்குச் சற்றும் சளைக்காத அழகுடன் அமிர்தவல்லி. மூக்கிலும் நெற்றித் திலகத்திலும் வைரம் ஜொலிக்கிறது. உற்சவமூர்த்தி கஜலக்ஷ்மியாகக் காட்சி தருகிறாள்.

அன்னையின் திருமுன் ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டு உள்ளதால், இங்கு வந்து தரிசிப்பவர் அனைவர் வாழ்வும் வளம் பெறுகிறது. ஆதலி னால் ஆலயத்தில் எந்நேரமும் பரவசமிக்க பக்தர்கள் கூட்டம்.

வெளிப் பிராகாரத்தில் நாகப் பிரதிஷ்டையுடன் பிரமாண்ட அரச மரம். பிராகார வலம் வந்தால், அர்த்த மண்டபத்துக்கு இடது புறத்தில் நிழல் நல்கும் இரு பெரிய மரங்கள்.

எந்த நேரமும் பிரசாத விநியோகம் நடைபெறுகிறது. இறை தரிசனம் அளித்த ஆனந்தம் முகங்களில் துலங்க மக்கள் நிழல் தரும் பந்தலுக்கு அடியிலும் மரத்தடியிலும் அமர்ந்து பிரசாதத்தைப் புசிக்கிறார்கள்.

நரசிம்ம ஜெயந்தியும், நவராத்திரியும், மல்லிகைப்பூ உற்சவம் என்னும் தனித்துவமிக்க திருவிழாவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஆலயத்தில் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம்!

இத்தலம் எய்தி லக்ஷ்மி நரசிம்மரை வணங்குவோருக்கு, பிரகலாதனுக்கு அருளப்பட்ட வண்ணமே அனைத்து வளங்களும் அமர வாழ்வும் வாய்க்கும்!

ஆலயம் ஆயிரம்
 
ஆலயம் ஆயிரம்
-தரிசிப்போம்
ஆலயம் ஆயிரம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு