பிரீமியம் ஸ்டோரி

24-06-09
ஹாய் மதன், கேள்வி-பதில்
ஹாய் மதன்
ஹாய் மதன்
 
மெள்ள தமிழ் இனி சாகுமா?
ஹாய் மதன்

சக்தி வி.ரவிச்சந்திரன், சென்னை-18.

ஹாய் மதன்

மனிதர்களில் ஆண், பெண் என இரண்டு இனங்கள் உள்ளன. அதைப் போல் விலங்குகளிலும் உள்ளது. மரம், செடி, கொடிகளில் இவ்வாறு இரண்டு இனம் உள்ளதா?

வம்சவிருத்தி என்று வந்துவிட்டால், அது செடியாக இருந்தாலும் ஆண், பெண் இல்லாமல் நடக்காது. மலர் என்று எடுத்துக்கொண்டால், ஒரே மலருக்குள் ஆண் பகுதி (Stamen), பெண் பகுதி (Pistil) உண்டு. இருவேறு செடிகள், பழங்கள் மற்றும் மலர்களுக்கும் இடையேகூட ஆண், பெண் புணர்ச்சி நிகழலாம். மொத்தத்தில், ஆணிலிருந்து பெண்ணுக்கு மகரந்தம் இடம் மாறி நுழைய வேண் டும். இதைத்தான் மகரந்தச் சேர்க்கை (போலிய னேஷன்) என்கிறோம். மலர்களால் நடந்து சென்று 'காதலிக்க' முடியாது. ஆகவே, பூச்சிகளும் பறவைகளும் உதவிக்கு வருகின்றன. முக்கியமாக தேனீக்கள் மலரில் சுரக்கும் தேனை (புரோட்டீன்களுக்காக!) உண்ணும்போது அதன் உடலில் மகரந்தத் தூள்கள் ஒட்டிக்கொள்ள, தேனீ அதை இன்னொரு மலரில் சேர்ப்பிக்க... வம்சவிருத்தி நிகழ்ந்து... எங்கெங்கு காணினும் மலர்கள். தேனீக்கள் இல்லாவிட்டால் மலர்கள் கிடையாது. ஆகவே, சினிமாக்களில் காதல் ஜோடி கிஸ் பண்ணும்போது, தேனீ இல்லாமல் வெறுமனே இரு மலர்கள் மட்டும் நெருங்கித் தொடுவது போல் காண்பிப்பது விஞ்ஞானரீதியில் அவ்வளவு சரியில்லையாக்கும்!

கே.விஜயகுமார், சென்னை-6.

திடீரென்று, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை அடித்து நொறுக்கும் அளவுக்கு ஏன் இப்படி ஒரு நிறவெறி?!

முதன்முதலில் ஆஸ்திரேலியாவில் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியேறிய மக்கள், நம்மூரில் இருந்து படகுகளில் சென்ற திராவிடப் பழங்குடி மக்களே! உண்மையில் அபோரிஜின்ஸ் (Aborigines) என்று அழைக்கப்படும் அவர்களுக்குத்தான் ஆஸ்திரேலியா சொந்தமானது. கி.பி.1600-ல்தான் ஐரோப்பியர்களுக்கு (வழக்கம்போல போர்ச்சுகீஸ்!) ஆஸ்திரேலியா என்று ஒரு கண்டம் இருப்பதே தெரியவந்தது. கி.பி.1778-ல்தான் முதல் பிரிட்டிஷ் குடி யிருப்பு அங்கே ஏற்படுத்தப்பட்டது. இப்போது சிட்னி நகரம் இருக்குமிடத்தில் முதலில் அப்படிக் குடியேறியவர்கள்... இல்லை, குடியேற்றப்பட்டவர்கள் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளே! பிறகு, வெள்ளையர் வம்சம் பெருகியது. ஒருகாலத்தில் அங்கு வசித்த பழங்குடி மக்களின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கு மேல். வெள்ளையர்களால் துன்புறுத்தப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டு தனி 'ரிசர்வேஷன்'களில் இன்று வாழும் பழங்குடி மக்களின் எண் ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவு. ஆக, அப்போதே - 300 வருடங்களுக்கு முன்பே வெள்ளையர்களின் நிறவெறி ஆரம்பித்து விட்டது!

கி.ச.திலீபன், து.நா.பாளையம்.

தோல்விகள்தான் வரலாறா?

ஹாய் மதன்

இதில் என்ன சந்தேகம்? உலகில் உள்ள ஒவ்வொரு சாதனையாளரும் தோல்விகளைக் கடந்தவர்களே. இடையூறுகள், தோல்விகள் இல்லாத வெற்றி ஜொலிப்பது இல்லை!

சாதனைகள் புரிந்த பலர் கடந்து வந்த சோதனைகளைப் பற்றிப் படித்தால் திகைப்பும் பிரமிப்பும் ஏற்படுகிறது. தாமஸ் ஆல்வா எடிசனுக்கு 'பல்பு' கற்பனையில் தோன்றிவிட்டது. நடைமுறையில் பெரும் பிரச்னை. தொடர்ந்து(எரிந்துபோகாமல்) எரியும் பொருளை (Filament) அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 14 மாதங்கள்,ஆயிரக் கணக்கான பரிசோதனைகள். பட்டு நூலில் ஆரம்பித்து, குதிரை முடி, மரம், ரப்பர், கார்க், அட்டை என்று ஒன்றைக்கூட எடிசன் விடவில்லை. எல்லாமே எரிந்துபோயின! வெறிபிடித்ததைப் போல நண்பர்களின் தாடிகளில் இருந்து முடிகளைப் பிய்த்துக்கொண்டு வந்துகூடப் பயன் படுத்தினார் எடிசன்!

அத்தனையும் தோல்வியில் முடிந்தது. துவண்டு போகாமல் இருக்க சோதனைக்கூடச் சுவர்கள் முழுவதும் 'T.A.' என்று பேப்பர்களில் எழுதி ஒட்டிவைத்தார் எடிசன். 'T.A.' என்றால் Try again!

ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. கடைசி யில் அக்டோபர் 21, ஆண்டு 1879-ல் பல்பு எரிந்தது! அருகே, பதைபதைப்புடன் தூங்காமல் எடிசன் உட்கார்ந்துஇருக்க, இரவு முழுவதும் - பல்பு எரிந்தது. அவர் உபயோகித்தது 'ட்ரீட்' செய்யப்பட்ட கார்பன். தொடர்ந்து உலகம் முழுவதும் இரவில்... ஒளி பிறந்தது!

சிவ.சிவா, மயிலாடும்பாறை.

ஹாய் மதன்

உலகில் வேகமாக அழிந்து வரும் மொழிகளில் தமிழும் ஒன்று என்பது எதிர்காலத்தில் எந்த அளவு சாத்தியம்?

கடந்த 100 ஆண்டுகளில், சுமார் 7 ஆயிரம் மொழிகள் அழிந்துவிட்டன என்பது உண்மைதான். ஆனால், தமிழ் அழிவதற்கான வாய்ப்பு துளியும் கிடையாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, ரொம்பவும் உயிருள்ள, துடிப்பான, பரவலாக வேர்களைப் பரப்பியிருக்கும் மொழி - தமிழ். உலகெங்கும் தமிழர்கள் கையோடு (அல்லது வாயோடு?!) தமிழைக் கொண்டுசென்றிருக்கிறார்கள்.பண்டைக்காலத் தமிழ் இன்று வெகுவாக மாறி இருக்கிறது. எதிர்காலத்திலும் தமிழ் மாறும். ஆனால் அழியாது!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

எது சிற்றின்பம்... எது பேரின்பம்?

தத்துவங்களை விடுத்து அரசியல்ரீதியாக விளக்க வேண்டும் என்றால், ஒருவர் தேர்தலில் நின்று அதில் வெற்றிபெற்றதாகச் செய்தி வருகிறது அல்லவா? அதுதான் சிற்றின்பம். பிறகு, கேபினெட் அமைச்சராக உட்கார்ந்த பிறகு, முதன்முறையாக ஏதாவது 'பார்ட்டி' சில கோடிகள் அடங்கிய பெட்டியை மேஜை மீது வைத்துவிட்டுப் போக, அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்கும்போது ஏற்படுவது பேரின்பம்!

புத்தார்தா, காரைக்குடி.

குறுக்கு வழியில் ஜெயிக்கலாம் என்றிருக்கிறேன். அதற்கு அரசியல்வாதி ஆவதுதான் சரியான சாய்ஸ் என்கிறான் நண்பன். உங்கள் கருத்து?

அது இருக்கட்டும். அரசியல்வாதி ஆவதற்கும் குறுக்கு வழி உண்டே! முதலில் நீங்கள் 'பேட்டை தாதா' ஆக வேண்டும். அதற்குத் தயாரா? (உங்க பெயர் வேற சரி இல்லை!)

 
ஹாய் மதன்
-
ஹாய் மதன்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு