பிரீமியம் ஸ்டோரி

24-06-09
ஆயிரம் ஜன்னல்!
ஆயிரம் ஜன்னல்
ஆயிரம் ஜன்னல்
 
சத்குரு ஜக்கி வாசுதேவ்
ஆயிரம் ஜன்னல்

வலி இயல்பானது. ஆனால், வேதனை..?

ஆயிரம் ஜன்னல்

ன் அப்பா ஒரு மருத்துவராக இயங்கியபோது, அந்தப் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருந்தார். ஓர் ஊரிலிருந்து மாற்றலாகிப் போகும்போது, அவரை வழியனுப்ப நூற்றுக்கணக்கானவர்கள் ரயில் நிலையத்துக்கு வருவார்கள். நன்றிக் கண்ணீரும் அன்புப் பரிமாற்றங்களுமாக அந்த இடமே நெகிழ்ச்சியாகக் காணப்படும். 'அட! நம் அப்பா இவ்வளவு பிரபலமாக இருக்கிறாரே!' என்று வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டு இருப்பேன்.

ஆயிரம் ஜன்னல்

இளமையில் பொதுவாகவே காட்டிலும் மேட்டிலும் சுற்றிக்கொண்டு சுறுசுறுப்பாகவும் ஓய்வில்லாமலும் இருந்தேன். இயற்கையில் வாழ்ந்ததாலும், இயற்கை தந்ததை உண்டதாலும், மருத்துவர்களிடம் போக வேண்டிய அவசியமே வரவில்லை. தவிர, யோகா எனக்கு இன்று வரை உறுதுணையாக இருக்கிறது.

வேறு ஒரு டாக்டருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது.

மைசூர் அருகே ஒரு பண்ணையில் வசித்தபோது, பேருந்துக்காகக் காத்திருக்கும் நேரத்தில், அருகில் இருந்த ஒரு கிளினிக்கில் போய் அமர்ந்திருப்பேன். கிளினிக்கை நடத்தி வந்த டாக்டர் மிக எளிமையான மனிதர். அதிகமாகப் பணம் வசூலிக்காதவர்.

அப்படி ஒரு நாள் காத்திருந்தபோது, கிராமத்தில் இருந்து ஓர் இளம் பெண்ணை அங்கே அழைத்து வந்தார்கள். அவள் வயது இருபதுகளில் இருக்கும். எனக் கும் அப்போது அதே வயது இருக்கும். அவள் உடல் வில் போல் வளைந்து வளைந்து மூச்சுக்குத் திணறிக் கொண்டு இருந்தது. ஆஸ்துமாவின் உச்சக்கட்டத் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தாள். உடல் ஒரு நிலையில் இல்லாமல் நெளிந்துகொண்டே இருந்தது. உயிருடனும் இல்லாமல், செத்தும் போகாமல் இடையில் மாட்டிக் கொண்டது போன்ற நரகம் அது.

அவளைப் படுக்கவைப்பதே பெரும்பாடாக இருந்தது. அவளை மற்றவர்களுடன் சேர்ந்து நானும் பிடித்து அழுத்திக்கொள்ள, டாக்டர் ஊசி போட்டார். ஆக்ஸிஜன் கொடுத்தார்.அன்றைக்குத்தான் டாக்டர்களின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டேன்.

பொதுவாக, நான் உணர்ச்சிகளுக்கு ஆளாவது இல்லை. ஆனால், அந்தப் பெண் என்னை மிகவும் பாதித்துவிட்டதை விரைவிலேயே அறிய நேர்ந்தது. மைசூரில் இருந்து திரும்பிய பின், பண்ணை வீட்டில் படுத்திருந்தேன். இரவு 2 மணி இருக்கும். ஆஸ்துமா என்னை முதன்முறையாகத் தாக்கியது. மூச்சுவிட முடியாமல், உயரமான கட்டிலில் இருந்து அப்படியே உருண்டு கீழே விழுந்தேன். உடல் முழுவதும் வியர்த்து, தலை நனைந்து ஈரம் சொட்டியது. செத்துவிடப்போகி றோம் என்றே தோன்றியது. தவழ்ந்து தவழ்ந்து வாசல் கதவை அடைந்து கதவைத் திறந்தேன். வெளிக் காற்றைச் சுவாசிக்கவேண்டும் என்ற துடிப்புடன் அப்படியே அந்த வாசலில் கிடந்தேன். கிட்டத்தட்ட ஆறு, ஏழு மணி நேரம் என் உடல் தவித்துத் துடித்தது.

சூரியன் உதிக்கும் வரை அப்படியே அந்த நரகத்தை அனுபவித்துக்கொண்டு கிடந்தேன். அப்புறம் சூரியனில் உட்கார்ந்திருந்தேன். மெள்ள மெள்ள என் உடல் சகஜ நிலைக்குத் திரும்பியது.

அந்தப் பெண்ணைப் பார்த்தது என் மனதில், என் நினைவில் மிக அழுத்தமாகப் பதிந்துவிட்டதே என் ஆஸ்துமாவுக்குக் காரணம். என் யோகா பயிற்சிகளை மும்முரமாக்கினேன். ஆஸ்துமா காணாமல் போனது.

சில மருத்துவர்கள் தங்கள் திறமைகளைவிட புத்திசாலித்தனத்தை அதிகம் நம்புவதைக் கவனித்திருக் கிறேன்.

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்து பார்க்கும் முறைகள் அறிமுகமாவதற்கு முன்பே, ஒரு குறிப்பிட்ட மருத்துவர் அதை கணித்துச் சொல்வதில் மிகத் தேர்ந்தவர் என்று பெயர் பெற்றிருந்தார். அவருடைய கணிப்பு தவறியதாகச் சரித் திரமே கிடையாது. அவர் மூப்பெய்தியபோது, தன் மகனிடம் மருத்துவமனையை ஒப்படைத்தார்.

மகனும் டாக்டர்தான். ''ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை அப்பா! எந்த அடிப்படையை வைத்து கர்ப்பம் தரித்தவுடனேயே அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று மிகச் சரியாகக் கணித்து வந்தீர்கள்?''

''அந்த ரகசியத்தை உன்னிடம் மட்டும் சொல்கிறேன், மகனே! இருபத்தைந்து வகை இருந்தால் கஷ்டம். ஆண், பெண் என இரண்டே வகைதானே இருக்கிறது? பார்த்தவுடன் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதைச் சொல். ஆண் என்று சொன்னால், ரிஜிஸ்தரில் பெண் என்று குறித்து வைத்துவிடு. குழந்தை பிறக்க 9 மாதங்கள் ஆகிவிடும். ஆணாக இருந்தால், பாராட்டை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொள். பெண்ணாக இருந்தால், 'டாக்டர், தவறு செய்துவிட்டீர்களே' என்பார்கள். 'அப்படியா? ரிஜிஸ்தரில் என்ன குறித்து வைத்திருக்கிறேன், பார்ப்போம்' என்று சொல்.''

இப்படிக் குத்துமதிப்பாக இயங்கும் மருத்துவர்களைப் பற்றி என்ன சொல்வது?

இன்னொரு மருத்துவருடன் எனக்கு நேர்ந்த அனுபவமும் வித்தியாசமானது.

மோட்டார் சைக்கிளை எவ்வளவோ வேகமாக ஓட்டியிருக்கிறேன். அப்போதெல்லாம் நடக்காத ஒரு விபத்து, பைக்கை ஒரு நெடுஞ்சாலை யில் நிறுத்திவைத்திருந்தபோது நடந்தது. மோட்டார் சைக்கிள் சரிந்து, கால் வைக்கும் பகுதி என் ஆடுசதையை எலும்பு வரை கெந் திக் கிழித்துவிட்டது. எனக்கோ நேரத்துக்கு வகுப்புக்குப் போயாக வேண்டும்.

பக்கத்தில் இருந்த டாக்டரின் கிளினிக் போனேன். ''இது மிகப் பெரிய காயம். நிறைய தையல்கள் போடவேண்டும். இங்கே அனஸ்தீஷியா இல்லை. மயக்க மருந்து கொடுக்காமல், என்னால் இதைத் தொட முடியாது'' என்றார் டாக்டர்.

''வேறு மருத்துவமனைக்குப் போக நேரம் இல்லை. தயவுசெய்து, மயக்க மருந்து இல்லா மலேயே தையல்களைப் போடுங்கள்'' என்றேன்.

''விளையாடுகிறாயா? வலி உன்னைத் தின்றுவிடும்'' என்றார் டாக்டர்.

விவாதங்கள் நடந்தன. ஒரு கட்டத்தில் டாக்டர் விட்டுக்கொடுக்க முடிவு செய்தார்.

மயக்க மருந்து இல்லாமல், 44 தையல்கள் போட்டு முடித்தார். அதற்குள் அவருக்கு வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டது. நானோ அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்ததைப் பார்த்து அவருக்கு ஆச்சர்யம்.

''உனக்கென்ன வலியே இல்லையா?'' என்றார்.

''அதெப்படி டாக்டர் வலி இல்லாமல் போகும்? வலி உடலைத் திருகி எடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், அந்த வலியினால் மனதில் வேதனை இல்லை. வலி இயல்பானது. ஆனால், வேதனை நாமே உருவாக்கிக்கொள்வது அல்லவா?'' என்றேன்.

டாக்டர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

என்னிடம் அடிக்கடி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.

'சித்தா, ஹோமியோபதி, அலோபதி, நேச்சுரோபதி என்று ஏக முறைகள் இருக்கின்றனவே, எந்த மருத்துவ முறை சிறந்தது?'

என் பதில் என்ன தெரியுமா?

"நீங்கள் விரும்பியதை அடைய மற்றவர்கள் ஒத்துழைப்பு உங்களுக்கு அவசியமாகும்போது, அவர்கள் உங்களிடம் நேசம் கொள்ளும்படி நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறையும் அன்பும் இல்லாது போனால், இது சாத்தியமே இல்லை!"

- சத்குரு ஜக்கி வாசுதேவ்

 
ஆயிரம் ஜன்னல்
-ஜன்னல் திறக்கும்...
ஆயிரம் ஜன்னல்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு