Published:Updated:

ஹாய் மதன் கேள்வி-பதில்

இது நீர்க் கிரகம்!

ஹாய் மதன் கேள்வி-பதில்

இது நீர்க் கிரகம்!

Published:Updated:
 ##~##
மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

இரவு ஆனதும் எப்படித் தூக்கம் வருகிறது? ஆதி மனிதன் எப்படித் தூங்கி எழக் கற்றுக்கொண்டான்?

மனித மூளைக்கு உள்ளேயும் ஒரு கடிகாரம் உண்டு - Body clock. குறிப்பிட்ட நேரம் விழித்துக்கொண்டு இருந்த பிறகு, தானாகத் தூங்கவைக்கும் கடிகாரம்! அந்தக் கடிகாரமும், சுவரில் மாட்டும் கடிகாரமும் ஒருங்கிணைந்து சுழல வேண்டிய அவசியம் இல்லை. மிருகங்களும் தூங்குகின்றன. கடிகாரத்தைப்

ஹாய் மதன் கேள்வி-பதில்

பார்த்து, 'அட... மணி பத்தரை ஆச்சே!’ என்று சொல்லிவிட்டா தூங்குகின்றன?! 'லோக் சபாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டு போட யாரோ உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொண்டு வந்திருக் கிறார்...’ என்று காதில் சொன்ன வுடன் 'விருட்’டென்று தூக்கத்தில் இருந்து எழுந்துகொள்ள வைப்ப தும் அதே மூளைதான்!

எஸ்.பாலசுப்பிரமணியன், சென்னை-97.

இந்திய மக்களோட அசாத்தியப் பொறுமை காரணமாகத்தான், அரசு இயந்திரம் மிக மெதுவாக இயங்குகிறது என்று சொல்லலாமா?

அரசியல் இயந்திரம், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே வேகமாக நகரும். சாமான்ய மக்களின் வாழ்க்கையைப் பற்றியோ, அவர்களுடைய அல்லல்கள், வேதனைகள் பற்றியோ... அரசியல்வாதிகளுக்கோ, அரசு இயந்திரத்துக்கோ கவலையே கிடையாது. ஆகவேதான், மக்களின் தகுதி என்னவோ, அதற்கேற்ற அரசாங்கம்தான் கிடைக்கும். 'you get the government you deserve!’ என்று ஒரு பொன்மொழி உண்டு. மாறாக, 'சாது மிரண்டால்...’ என்கிற பொன்மொழியைச் செயல்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?!

ஸ்வர்ணா ராகவன், சென்னை-30.

விஞ்ஞான வளர்ச்சியின் உதவியோடு இந்தக் கொடூரமான சுனாமியிடம் இருந்து தப்பிக்கவே முடியாதா?

ஹாய் மதன் கேள்வி-பதில்

நமது (?) பூமியை 'earth’ என்று சொல்வதையே பல விஞ்ஞானிகள் ஆட்சேபிக்கிறார்கள். உண்மையில், இது 'நீர்க் கிரகம்’ - a planet of water! பூமியின் 70 சதவிகிதத்துக்கு மேல் கடல்தான். கடல் தன்னுடைய சுண்டு விரலால் தட்டியதுதான் இந்த சுனாமி! ஆனால், சுனாமி வாராவாரம் ஏற்படுகிற விஷயம் இல்லை என்பது ஆறுதலான விஷயம். தமிழ்நாட்டைத் தாக்கிய சுனாமிக்கு முந்தைய பெரிய சுனாமி 1883-ம் ஆண்டில்தான் தாக்கியது - இந்தோனேஷியா அருகில். அப்போது க்ரெகெடோ என்கிற தீவில் உள்ள எரிமலை வெடித்தது. தொடர்ந்து, கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டு, பிறகு சுனாமி - செயின் ரியாக்ஷன்! பிரச்னை - கரையை நோக்கி சுனாமியின் பயணம் சுமார் 700 கி.மீ வேகத்தில் இருக்கும். தப்பிக்க நேரம் குறைச்சல். சில சமயம் ஒரு மீட்டர் உயர அலைகள்தான் தென்படும் - ஒன்றன் பின் ஒன்றாக படுவேகமாக, ஊருக்குள் புகுந்தும் நிற்காமல் போய்க்கொண்டே இருக்கும் அலைகள். இப்படித்தான் க்ரெகெடோ சுனாமி, சுதாரிப்பதற்குள் 30 மைல் தொலைவில் உள்ள மெராக் என்கிற ஊரை மொத்தமாக அள்ளிக் கொண்டு போய்விட்டது. 36,000 பேர் காலி. சில சமயம், ஒரே அலை 100 அடி உயரத்துக்கு வரும். கடல் அலையின் உயரம் எவ்வளவு உயரத்துக்குப் போக முடியும்? 1958-ல் பசிபிக் கடலில், அலாஸ்கா அருகே ஒரு அலை கிளம்பி... நல்ல காலமாக கடலுக்குள்ளேயே விழுந்தது. அதன் உயரம் 1,740 அடி! சும்மா... கடல் தன் முஷ்டியை உயர்த்திக் காண்பித்த தருணம் அது! அந்த அலையின் உயரத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சரி, ஈஃபில் டவர் உயரம் என்ன தெரியுமோ? - 985 அடி!

வெ.கா, கடையநல்லூர்.

பேக்கு யார்? மக்கு யார்?

விரைவில் மக்கு ஆகப்போகிறவர்தான் பேக்கு! அரசியல்வாதிகள் பொதுவாக மக்களைப்பற்றி நினைத்துக்கொண்டு இருக்கும் கருத்து இதுவே! ஆனால், பேக்கு திடீரென்று புத்திசாலியாக மாறலாம்!

ஜி.மகாலிங்கம்,காவல்காரபாளையம்.

தூக்கத்தில் கனவு கண்டுகொண்டு இருக்கும்போது, இடையில் விழித்து, பிறகு மீண்டும் தூங்கி, கண்ட அதே கனவைத் தொடர்ந்து காண முடியுமா?

நன்றாக விழித்துக்கொள்ளாமல், அரைத் தூக்கத்துக்குக் கொஞ்ச நேரம் வந்து, மறுபடி முழுத் தூக்கத்துக்குப் போனால்... கனவு தொடரும்! எனக்கு அப்படித் தொடர்ந்து இருக்கிறது!

மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

ஒரு பெண்ணைக் கணவனால் நன்கு புரிந்துகொள்ள முடியுமா... அல்லது மகனால் நன்கு புரிந்துகொள்ள முடியுமா?

ஹாய் மதன் கேள்வி-பதில்

அது - கணவன் யார், மகன் யார் என்கிற தனிப்பட்ட நபர்களைப் பொருத்தது. ஆனானப்பட்ட ராமபிரானே, சீதா பிராட்டியை முழுக்கப் புரிந்துகொள்ளவில்லைதானே! மற்றவர்கள் எந்த மூலை? குறிப்பிட்ட தருணத்தில், மனைவி தன்னோடு காதல் புரிய விரும்புகிறாள் என்பதுகூடத் தெரியாத பல கணவன்மார்கள் உண்டு. மகன், அம்மாவைப் புரிந்துகொண்டதும், பிறகு அவனுக்கென்று ஒரு மனைவி வந்து விடுகிறாளே!

எம்.ஹரிஹரன், சென்னை-48.

பொதுவாக, பண்டிகை நாளில் நீங்கள் பொழுதைக் கழிப்பது எப்படி?

பண்டிகை நாள் அகலும் வரை... நன்றாகத் தூங்குவதன் மூலம்!