Published:Updated:

நானும் விகடனும்!

பாலகுமாரன்படம் : கே.ராஜசேகரன்

நானும் விகடனும்!

பாலகுமாரன்படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##
சு
மார் 55 வருடங்களுக்கு முன்பு, அதாவது என் 10 வயதில் ஆனந்த விகடனில் வெளியான ஓவியர் கோபுலுவின் படத்தைப் பார்த்துப் பார்த்து, வரையப் பழகிக்கொண்டு இருந்தேன். தில்லானா மோகனாம்பாளின் படம் அது. பெரிய பெரிய கண்களும் கனிந்த உதடுகளுமாக இருந்த முகம் மட்டும் காட்டுகிற அழகிய ஓவியம்.

'அடடா... ஏ க்ளாஸ். என்ன அருமையா போட்டுருக்கார்!’ என்று என் அம்மா சிலாகித்தார். எனக்கு ஆமாம் என்று தோன்றியது. இவ்வளவு அழகிய படத்தை வெறுமே பார்த்துப் பாராட்டினால் போதுமா? உடனே, அதைப் பார்த்து அதுபோலவே வரைய வேண்டும் என்று தோன்றியது.

நானும் விகடனும்!

திரும்பத் திரும்பப் படம் பார்த்து மனதில் நிறுத்திக்கொண்டேன். ஒரு நோட்டுப் புத்தகத்தில் அதுபோலவே வரைய முயற்சி செய்தேன். கொஞ்சம் முக்கோண ரூபமாக இருக்கும் முகம். அந்த முக்கோணம் சரியாக வரவில்லை. முகத் தின் இடப் பக்கத்துக்கும் வலப் பக்கத் துக்கும் வித்தியாசம் வந்தது. கண்களின் அளவுகளும் மாறின. எனக்குச் சரியாக வரைய வரவில்லை. என்ன செய்வது?

அந்தப் படத்துக்குக் கீழே காகிதம் வைத்தேன். அந்தப் படத்தின் மீது அழுத்தமாக பென்சிலில் வரைந்தேன். முகக் கோணம் மிகச் சரியாக வந்தது. 'அட்றா சக்கை’ என்று என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.

பெரிய பெரிய கண்கள், திலகம், கனிந்த உதடுகள், அழகிய முகம். எனக்குப் படம் வரைய வந்துவிட்டது. இடதும் வலதுமான பங்கீடு மிகச் சரியாகப் புரிந்துவிட்டது.

அம்மா படம் பார்த்தாள்.

'நீ வரையக் கத்துக்க ஒரு படத்தைப் பாழ் பண்ணிட்டயா?’ என்றாள்.

பென்சிலில் அழுந்தப் படம் வரைந்ததில், விகடனில் இருந்த வண்ணப் படம் லேசாகக் கிழிந்துவிட்டது.

அதனால் என்ன... எனக்குப் படம் வரைய வந்துவிட்டது. அந்த 10 வயதில் ஒரு படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பது தெரிந்துவிட்டது. முகம் வரைவதின் சூட்சுமங்கள், இடது, வலது பங்கீடுகள் மனசுள் தெளிவாகப் பதிந்துவிட்டன. நான் பல முறை அந்தப் படத்தைப் பல இடங்களில் வரைந்தேன். பிறகு, கோபுலுவின் மற்ற படங்களைத் தேடித் தேடிப் பார்த்து வரைந்தேன்.

படம் வரைய வரைய... எப்படி ஒரு விஷயத்தைப் பார்ப்பது என்பதும் உள்ளே பதிந்துபோயிற்று. முகத்தை, கண்களை, உதடுகளைப் பார்க்கப் பார்க்க... பல்வேறு செய்திகள் உள்ளே வந்தன. செய்திகள் உள்ளே பெருகப் பெருக... சம்பவங்கள்பற்றி சரியாக யோசித்தேன். சம்பவ அடுக்குகள் உள்ளே ஏற்பட, கதை எழுத வந்துவிட்டது. அதாவது, இன்றைக்கு நான் 256 நாவல்கள் எழுதக் காரணம், அன்றைக்கு நான் பார்த்து வரைந்த, ஆனந்த விகடனில் வெளியான திருவாளர் கோபுலுவின் தில்லானா மோகனாம்பாள் உருவம்!

ஒன்றில் இருந்துதான் ஒன்று உருவாகும் என்பது உண்மையாயின்... நான் எழுத்தாளனாக உருவாக ஆனந்த விகடனே காரணம்!

வேறு யாராவது அந்தப் படத்தை அப்படி மேலே பென்சிலில் அழுந்த எழுதிப் பாழ் செய்திருந்தால், முதுகு விரிய அடித்திருப்பார்கள். அம்மா லேசாக நொந்துகொண்டு அதிகம் பாராட்டினாள். அவளும் என் வளர்ச்சிக்குக் காரணம்.

ஆனந்த விகடன் ஓவியர் திரு. மாலியின் படங்கள் குறைவான கோடுகள் உடையவை. அதே சமயம், விதவிதமான உட்காரும் நிற்கும் கோணங்கள் காட்டுபவை. கால் மடித்து, முதுகு வளைத்து உட்கார்ந்திருப்பினும் சுவரில் சாய்ந்து நின்றாலும் திரு. மாலியின் ஓவியங்கள் உடல் அளவுகள் மாறாது, இவற்றைப் பார்த்து வரைய வரைய மனிதர்களின் 'அவுட்லைன்’ பார்க்க மனம் பழக்கமாயிற்று.

10 வயதில் வந்த இந்தப் பார்க்கிற பழக்கம், 30 வயதில் கவிதை எழுத, கதை எழுத மிகவும் உதவி செய்தது. அதாவது, படங்கள் பார்த்துப் பார்த்து என்னைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கை பார்க்கக் கற்றுக்கொண்டேன். சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை பார்த்துப் பார்த்துக் கதை எழுதக் கற்றுக்கொண்டேன். கதைகள் எழுதி எழுதி, என்னைப்பற்றித் தெளிவாகப் புரிந்துகொண்டேன். என்னை நான் தெளிவாகப் புரிந்துகொண்டதால், வாழ்க்கை இதமாக மாறியது. தெரியாமப் பண்ணிட்டேன் என்று சொல்வதில்லை. 'எல்லாம் தெரிந்த சுகம்’ உண்டாயிற்று!

அந்த 10 வயதில் எனக்குள் ஆனந்த விகடன் போட்ட வித்து, இன்று ஆல மரமாக இந்த 65 வயதில் வளர்ந்து உள்ளும் புறமும் பார்க்கும் சுகம் கொடுத்தது. இது கொடுப்பினை. பெரும் பேறு. ஆனந்த விகடன் தந்த ஆசீர்வாதம்!

ஆனால், கதைகள் எழுத வந்த பிறகு, ஆனந்த விகடனை நெருங்க முடியவில்லை. மற்ற வாரப் பத்திரிகைகளில் உள்ளே புக முடிந்தது. விகடனில் அனுமதி இல்லை.

நானும் விகடனும்!

திரு. ஜெயகாந்தனுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து ஆனந்த விகடன் வரவேற்க... கிளாஸு, மாஸு எல்லா எழுத்தாளர்களும் விகடனில் எழுதப் பேராவல் கொண்டார்கள். சிலர் பிடிவாதமாகத் தனித்து இருந் தார்கள். நான் உள்ளே புக விரும்பினேன். விகடன் ஆசிரியர் திரு.பாலசுப்ரமணியன் ஒரு வாய்ப்பு கொடுத் தார். தீபாவளி இதழில் தனிப் புத்தகமாக 'பச்சை வயல் மனது’ குறுநாவல் வெளியாயிற்று. நான் பரவலாகத் தமிழ் வாசகர்களால் பேசப்பட்டேன். 'தாயுமானவன்’ தொடர்கதை எழுதியபோது வாசகர்களோடு நெருக்கமானேன். எல்லா வாரப் பத்திரிகைகளிலும் என் கதைகள் வர, நிமிர்ந்து நின்றேன். சிறுகதையில் இருந்து குறுநாவல் வடிவுக்கு வர விகடன் வழி வகுத்தது.

எழுத்தாளர்களை, நேரம் குறித்து அழைத்து, காபி கொடுத்துப் பேசவைத்து, பேசுவதை வெற்றிலைப்பாக்கு மெல்லும் மணத்தோடு கண் மூடிக் கேட்டு, அபிப்ராயம் சொல்லி, பாராட்டி உற்சாகப்படுத்துவது விகடன் ஆசிரியர் திரு.பாலசுப்ரமணியன் அவர்களின் வழக்கம். அவர் பேசப் பேச... எழுதுபவருக்குத் தன் படைப்பு பற்றி இன்னும் அதிகம் புரியும். ஆனால், என் செருக்குக் காரணத்தால் நான் அவரோடும் கடும் சண்டை போட்டிருக்கிறேன்.

'பயணிகள் கவனிக்கவும்’ தொடர்கதை வெளி வந்த நேரம், 'பாலகுமாரன், நாவல் முடிவு சரியில்லையே! அந்த கேரக்டர் அப்படிப் பண்ணாது. யோசனை பண்ணேன்!’

'பண்ணியாச்சு, அப்படித்தான் அந்த குணச்சித்திரம் பண்ணும்!’

'மாத்துய்யா, நல்லா வரும்!’

'மாத்தறேன். ஆனா, என் பேர் போட வேண்டாம் சேவற்கொடியோன்னு போட்டுக்கங்க!’ திரு.பாலசுப்ரமணியன் அந்தப் பெயரில் கதைகள் எழுதியது உண்டு.

'என்ன முரட்டுத்தனம்!’ அவர் நொந்துகொண்டார். என் போக்குக்கு அனுமதித்தார். எழுத்தாளர்களைப் பேசச் சொல்லி, விவாதித்துக்கொண்டாடும் பத்திரிகை விகடன்.

மிகச் சரியான ஓவியங்களுடன், தன்னுடைய படைப்பு பல்லாயிரக்கணக் கான வாசகர்கள் படித்துப் பாராட்டு பெறுவது, ஓர் எழுத்தாளன் அடையும் பெருமிதங்களில் மிகப் பெரியது. வாழ்வுக் கான உற்சாக டானிக் அது!

நான் சுயம்பு இல்லை.

நானும் விகடனும்!

என் தாயார் முதல் பல நூறு கைகள் என்னைத் தடவித் தடவி வளர்த்தன. அதில் விகடனின் கரம் வலுவானது. அழுத்தமானது. ஆனந்த விகடன் தடம் என்னுள் பதிந்திருக்கிறது. என் தடமும் ஆனந்த விகடனில் உண்டு.

இன்றைக்கு 55 வருடங்களுக்கு முன்பு ஒரு சிறுவனுக்கு ஓவிய வழிகாட்டியாக இருந்த விகடன், அந்தச் சிறுவனை மடியில் வைத்துச் சீராட்டியது. அவன் வளர்ந்து பிரபலமாகி, இன்று நிறைவாக வாழ்கிறான்.

சங்க இலக்கியங்களில் செவிலித்தாய் என்ற பாத்திரம் அடிக்கடி வரும். ஆனந்த விகடன் எனக்கு செவிலித்தாய். பெற்ற தாயைவிட செவிலித்தாய் ரொம்ப சிநேகம், அதிக உரிமை, கூடுதல் அக்கறை, பொறுப்பும் பிரியமும் அதிகம். ஆனந்த விகடனை நான் அப்படித்தான் உணர்கிறேன். ஆனந்த விகடனும் என்னைத் தன் குழந்தையாக உணரும் என்று நினைக்கிறேன்!''