Published:Updated:

ஹாய் மதன்

ஹாய் மதன்


17-06-09
ஹாய் மதன் கேள்வி-பதில்.
ஹாய் மதன்
ஹாய் மதன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
ரஜினியின் புருஷ லட்சணம்!
ஹாய் மதன்

ப.பிரதீப்குமார், சேலம்-16.

இன்னும் 10 வருடங்களில் கல்யாண சம்பிரதாயங்கள் வெகுவாகக் குறைந்துவிடும்தானே?

ஹாய் மதன்

நிச்சயமாக! ஆனால், இன்னும் காலம் பிடிக்கும். எதற்கும் எல்லா திருமணங்களையும் 'டாகுமென்ட்டரி' எடுத்துப் பாதுகாத்துவைப்பதுகூட நல்லது. அந்தக் காலத்தில் மூன்று அல்லது ஏழு நாட்கள்கூடத் திருமணம் நடந்ததாகக் கேள்விப்படுகிறோம். அப்போது என்னவெல்லாம் சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டன என்று நம்மில் யாருக்காவது தெரியுமா? எதிர்காலத்தில், இரண்டு நிமிஷத்தில் திருமணம் நடந்து முடியலாம். அப்போது அந்த ஜோடியிடம் போய் 'எங்கள் காலத்தில் இரண்டு நாள் கல்யாணம் நடக்கும் என்றால், 'அப்படியா!' என்று அவர்கள் ஆச்சர்யப்படலாம் இல்லையா? (தற்போது ஐரோப்பாவிலும் யு.எஸ்.ஸி-லும் ஜோடியாக வாழ்பவர்களில் 40 சதவிகிதத்தினர் திருமணம் செய்துகொள்ளவில்லை!)

பிரைவேட் போலீஸ் ஸ்டேஷன்கள் வருங்காலத்தில் சாத்தியமா?

யூனிஃபார்ம் இல்லையே தவிர, இப்போது மட்டும் பிரைவேட் போலீஸ் ஸ்டேஷன்கள் இல்லை என்கிறீர்களா? கட்டைப் பஞ்சாயத்துகள் என்றால் என்னவாம்? ஜனநாய கத்தில் மத்தியமாநில அரசுகளின் கீழ்தான் காவல் துறை இயங்க வேண்டும். பாரபட்சம் இல்லாமல் பொது-மக்களுக்குப் பாதுகாப்புத் தரும் நல்ல அரசுகளின் கீழ் நல்ல காவல் துறை அமையும். நீங்கள் சொல்வது போல எல்லாம் வருங்காலத்தில் நடக்காமல் இருக்கட்டும்!

பிறகு, இந்து போலீஸ் ஸ்டேஷன், முஸ்லிம் போலீஸ் ஸ்டேஷன்... அப்படியே முதலியார், கவுண்டர், வன்னியர், தேவர், பிராமணர் போலீஸ் ஸ்டேஷன் என்றெல்லாம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது!

மஞ்சு வாசுதேவன், நவி மும்பை.

குட்டிக்கரணம் போடுவதற்கும், பல்டி அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

'கேபினெட்'டில் எங்களுக்கு 10 மந்திரிப் பதவிகள் வேண்டும் என்று அடம்பிடிக்கிறீர்கள். 'நீங்கள் குட்டிக்கரணம் போட்டாலும் நடக்காது!' என்கிறார் பிரதமர். உடனே நீங்கள் பல்டியடித்து 'இரண்டு மந்திரிப் பதவிகளாவது கொடுங்க!' என்கிறீர்கள். இதுதான் வித்தியாசம்!

பி.ஜெயபிரகாஷ், சர்கார்பதி.

ஹாய் மதன்

ஒரு பொய்யைப் பொருந்தச் சொல்வது என்றால் எப்படி என்று விளக்க முடியுமா?

பொய்க்கும் 'முன்னும் பின்னும்' உண்டு! அதையெல்லாம் கவனமாகக் கற்பனை செய்து, நடுவில் பொய்யைக் 'கரெக்டா'க, பொருத்தமாக நுழைக்க வேண்டும்! இல்லாவிட்டால் அசடு வழிய நேரிடும்! உதாரணமாக, இரவு 11 மணிக்கு வீடு திரும்புகிறீர்கள். மனைவி 'ஏன் லேட்டு?' என்று உறுமுகிறார். 'டமாரம்ங்கற படம் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. நம்ம ஃப்ரெண்டு குப்புசாமியோடு ஜலஜா தியேட்டருக்குப் போய்ப் படம் பார்த்துட்டு வரேன்!' என்கிறீர்கள். 'ஓஹோ! அந்தத் தியேட்டர் ஓனர் சர்க்கரையப்பனுக்கு டயாபடீஸ் முற்றி, காலைலேயே செத்துப்போய், தியேட்டர் இன்று மூடப்பட்டதுன்னு பேப்பர்ல போட்டிருக்கு. தவிர, எட்டு மணிக்கு குப்புசாமி போன் பண்ணி நீங்க இருக்கீங்களான்னு வேற கேட்டாரு... முதல்ல பொய்யைப் பொருந் தச் சொல்லுங்க!' என்று டம்ளரைக் குறி பார்த்து உங்கள் மீது வீசுவார், இல்லையா?!

சி.விஜய்குமார், தேவனாங்குறிச்சி.

உத்யோகம் புருஷ லட்சணம் என்கிறார்களே, புருஷ லட்சணம் என்பதன் பொருள் என்ன?

சினிமாவில் பார்த்திருப்பீர்களே! கோடீஸ்வரர் வீட்டில் பிறந்து வளர்ந்த கதாநாயகி ரஜினியைக் காதலிப்பார். பெற்றோரை எதிர்த்து அவரை மணந்துகொள்வார். குடிசையில்தான் வாழ்க்கை. தினமும் ரஜினி (காக்கிச்சட்டை அணிந்துகொண்டு) துறைமுகத்தில்கடுமையாக உழைத்து வீடு திரும்புவார். ஒருநாள் கதாநாயகியின் பணக்கார அம்மா குடிசைக்கு வந்து மகளைப் பார்த்துக் கண் கலங்குவார். ரகசிய-மாக வைர நெக்லெஸ் தருவார். கதாநாயகி புன்னகையோடு அதை வாங்க மறுத்து, 'அவர் உழைச்சுச் சம்பாதிச்சு எனக்கு (மெல்லிசாக) செயின் வாங்கித் தந்தாரும்மா. அது போதும். நான் சந்தோஷமா இருக்கேன்!' என்று திருப்பி அனுப்பிவிடுவார். படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தை இயக்குநர் உருவாக்குகிறார் இல்லையா... அதுதான் புருஷ லட்சணம்!

தி.மு, பெருநாழி.

H2O என இரு வாயுக்கள் சேர்ந்து தண்ணீராக மாறியது எப்படி?

அது இயற்கையின் ஆச்சர்யம்! 1784-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹென்றி கேவன்டிஷ் என்கிற பிரிட்டிஷ் கெமிஸ்ட், ஒரு டெஸ்ட் டியூபில் ஹைட்ரஜன் (H) வாயுவையும், இன்னொரு டியூபில் ஆக்சிஜனையும் (O) இருத்தி, 'டியூப்'-களின் வாய்ப் பகுதிகள் வழியாக இரு வாயுக்களையும் கலக்கிவிட்டுப் பிறகு பிரித்தபோது, 'டப்' என்ற சத்தத்துடன் தண்ணீர்த் துளிகள் உருவாகின. வாயுக்களைக் காணோம்!

இரு வாயுக்கள் இணைந்தால் - அதாவது இரு அணுக்கள் ஹைட்ரஜன், ஒரு அணு ஆக்சிஜன் - தண்ணீர் உரு வாகும் என்பது அப்போது ஆச்சர்யமான கண்டு-பிடிப்பு. ஒரு மாலிக்யூல் தண்ணீரை மைக்ராஸ்கோப்பில் பார்த்தால், நடுவில் உருண்டையாக ஆக்சிஜன் அணுவும், அதன் தலைப் பகுதியில் இரு காதுகள் போல ஹைட்ரஜன் அணுக்களும் - பார்க்க அப்படியே மிக்கிமவுஸ் தலை மாதிரி காணப்படும்!

 
ஹாய் மதன்
-
ஹாய் மதன்