Published:Updated:

ஆயிரம் ஜன்னல்

ஆயிரம் ஜன்னல்


17-06-09
ஆயிரம் ஜன்னல்!
ஆயிரம் ஜன்னல்
ஆயிரம் ஜன்னல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
சத்குரு ஜக்கி வாசுதேவ்
ஆயிரம் ஜன்னல்

ஆயிரம் மணி நேர போதனைகளைவிட...

ஆயிரம் ஜன்னல்

மெரிக்கா போயிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட மாநாடு ரத்தாகிவிட்டது. கோல்ஃப் விளையாட அழைத்தார்கள். எப்படியும் சிறிது தொலைவு நடக்க வேண்டும் என்று நினைத்திருந்ததால், அதை கோல்ஃப் மைதானத்தில் நடக்கலாம் என்று முடிவு செய்து போனேன். விளையாட்டு பற்றிய சில குறிப்புகளை அவர்கள் சொன்னார்கள். 'பந்து எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கள். அடித்து அனுப்புகிறேன்' என்றேன்.

வாழ்க்கையே அப்படித்தான். எங்கே போக வேண்டும் என்று தெரியும்; அங்கே எப்படிப் போக வேண்டும் என்பதும் தெரியும். அவ்வளவுதான். மற்றதைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது?

முதல் நாளே சிறப்பாக ஆடினேன் என்று அவர்கள் சொன்னார்கள்.

மைதானத்தில் உங்களுடன் பலர் இருந்தாலும், கோல்ஃப் என்பது உங்களுடன் நீங்கள் விளையாடும் மிக எளிமையான விளையாட்டு. அதனாலேயே அதைப் பலர் ஆடிப் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால், அது மிக நுட்பமான விளையாட்டு என்பதால், வெகு சீக்கிரத்தில் எரிச்சலாகிவிடுகி றார்கள்.

கால் பந்தாட்டம் போலவோ, கிரிக்கெட் போலவோ உடல்ரீதியாக நீங்கள் மிகவும் துடிப்பானவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உடல்திறனைவிட மனத் திறனைத்தான் அதிகம் கோருகிறது கோல்ஃப்.

நடப்பதற்கு மட்டும் களைக்கக் கூடாது. நடப்பதுபற்றிப் பேசுகையில், கிளைடரில் பறந்த அனுபவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

எனக்கு 22 வயது இருக்கும். ஒரு முறை நீலகிரி மலைகளில் இருந்து கிளைடரில் பறந்தேன். எங்கோ வெகு தொலைவில் தரை இறங்கினேன். சூரியனைவைத்துத் திசையை அனுமானித்து, அங்கிருந்து நடந்தேன்... நடந்தேன்... இரவு பகலாகக் காடுகளில் பல கிலோ மீட்டர்கள் நடந்தேன்.

கையோடு எடுத்துப் போயிருந்த ஒரு சாண்ட்விச்சைப் புசித்தேன். பசி அடங்கவில்லை. ஆங் காங்கே ஒன்றிரண்டு கிராமங்கள் தட்டுப்பட்டன. அங்கே இருந்தவர்கள் தமிழைத் தவிர, வேறு எதுவும் பேசவில்லை. எனக்கோ அப் போது தமிழ் தெரியாது.

எப்படியோ ஒரு டீக்கடையைக் கண்டுபிடித்தேன். அங்கே சுடச்சுட இட்லிகள் தயாராகிக்கொண்டு இருந்தன. எனக்கு இருந்த பசிக்கு 25 இட்லிகள் உள்ளே போகும்போல் இருந்தது. என் கையிருப்பைப் பார்த்தேன். நான் கண்டுபிடிக்கப்பட எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாத நிலையில், எல்லாப் பணத்தையும் செலவு செய்ய முடியாது என்று, ஒன்றரை ரூபாய் கொடுத்து இரண்டே இரண்டு இட்லிகள் மட்டும் வாங்கிச் சாப்பிட்டேன்.

என் குழுவினர் கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் கழித்துத்தான் என்னைக் கண்டுபிடித்தார்கள். இன்றைக்கு என்றால் எங்கே இருக்கிறேன் என்று செல்போனில் சில கணங்களுக்குள் தெரியப்படுத்திவிடலாம். போனை ஆன் செய்துவைத்திருந்தால், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றுகூடக் கண்டுபிடித்துவிடும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறி இருக்கிறது. அப்போதெல்லாம் 10, 15 மைல்கள் நடந்தால்கூட ஒரு தொலைபேசி கண்ணில் படாது.

நகரத்துக்கு வந்திருந்த தாத்தா காலையில் ஒரு வாக் போய்விட்டுத் திரும்பினார்.

"என்ன ஊரடா உங்கள் ஊர்? பணக்காரர்கள் எல்லாம் அல்பமாக நடந்துகொள்கிறார் களே!"

"ஏன் தாத்தா?"

"வழியில் புல் நிறைந்த ஒரு மைதானம் வழியே வந்தேன். ஆங்காங்கே வெள்ளை நிறப் பந்துகள் உருண்டுகிடந்தன. கேட்பாரற்றுக் கிடக்கிறதே, பேரனுக்குக் கொடுக்கலாம் என்று அவற்றை எடுத்துப் பையில் போட்டேன். அதைப் பார்த்துவிட்டுச் சிலர் என்னைத் துரத்தினார்கள். இத்தனைக்கும் அத்தனை பேரும் வசதியானவர்கள். அவர்கள் கையில் சிக்காமல் வந்துவிட்டேன்" என்று தாத்தா மூச்சிரைத்தார்.

கோல்ஃப் பற்றி அறியாதவர்கள் அதன் மைதானத்தில் நடந்தால், அப்படித்தான் நேரும். அந்த அளவுக்கு மற்ற விளையாட்டுக்களில் காணப்படும் ஆர்ப்பாட்டம் இல்லாத விளையாட்டு அது.

யாரும் பந்தை உங்களை நோக்கி வீச மாட் டார்கள். அதே போல், நீங்கள் அடிக்கும் பந்தைத் தடுக்கவோ, குறுக்கிட்டுத் திசை மாற்றவோ எதிரணியினர் யாரும் கிடையாது. அது உங்கள் திறமையை வெளிப்படுத்த நீங்களாக விளையாடும் ஒரு விளையாட்டு.

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும், உங்கள் வெற்றியைப் பெரும்பாலும் தீர்மானிக்கும் முக்கியமான விஷயம் என்ன? உங்கள் உடலையும் மனதையும் எந்த அளவுக்கு உங்களால் ஆளுமையில் வைத்திருக்க முடிகிறது என்பதுதான்! விளையாட்டும் அப்படித்தான்!

ஒரு தலைவனுக்கு உரிய அம்சங்கள் என்னென்ன? செய்வதில் முழுமையாக ஈடுபட வேண்டும்; குறை இன்றித் தன் பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும், தோல்வியால் துவண்டு போகாமல், மறுவாய்ப்பு கிடைத்ததாக நினைத்து ஏற்றுக்கொள்ளும் மனநிலை வேண்டும்.

வாழ்க்கையின் மிக எளிதான அம்சம் அதுதான். உங்கள் அகம் முழுமையாக அமைதி அடைந்துவிட்டால், வெற்றியோ தோல்வியோ... வாழ்வின் ஒவ்வோர் அம்சமும் எளிதாகத் தோன்றும். வாழ்க்கையே போராட்டம் இன்றி எளிமையாக நடக்கும். உள்ளே அமைதியாக இல்லையென்றால், ஒவ்வொன்றும் கடினமாகத் தோன்றும். சிறு சிறு விஷயம்கூட சிக்கலாகத் தோன்றும். இவை எல்லாமே விளையாட் டிலும் காணப்படும் அம்சங்கள்தாம்.

ஈஷா நடத்திய கிராமோத்சவ் விளையாட்டுக்களில் இதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. கிராமோத்சவத்தில் கிட்டத்தட்ட 300 குழுக்கள் விளையாட்டுக்களில் ஈடுபட்டன. மூன்று லட்சம் மக்களுக்கு மேல் பங்குகொண்டனர்.

கிராமத்தில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவே தயங்கிய பலர் விளையாட்டுக்களில் ஈடுபட்டபோது, தங்கள் அணியை வழிநடத்தத் தாங்களாகவே முன் வந்தார்கள். அவர்களுக்குள் புதைந்துகிடந்த திறமை வெளிப்பட்டது.

இன்னொரு விஷயம், விளையாட்டில் மற்றவரை உங்களுடன் சேர்த்துக்கொண்டு உள்ளடக்கிக்கொள்ளும் தன்மை இருக்கிறது. உங்கள் அணியினர் என்று அடுத்தவரை விருப்பு வெறுப்புகளைக் கடந்து சேர்த்துக்கொள்கிறீர்கள். அனைவரும் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒரே நோக்கமாக, ஒரே இலக்கை மனதில் இருத்திச் செயல்படுகிறீர்கள். மற்றவரை உங்களுடன் சேர்த்துக்கொள்ளும் தன்மைதான் ஒரு நல்ல சமூகம் அமைவதற்கான அடிப்படை.

ஆயிரம் மணி நேரங்கள் ஆன்மிக போதனைகள் செய்வதைவிட, பல கடவுள்களின் பெயர்களைச் சொல்லி மதப் பிரசாரம் செய்வதைவிட, ஒரு மணி நேரம் விளையாட்டில் ஈடுபடுத்தினால், ஒரு சமூகம் இன்னும் தங்களை அழுத்தமாகப் பிணைத்துக்கொள்வதைப் பார்க்க முடிகிறது.

உடலையும் மனதையும் கூர்மையாக வைத்துக்கொள்வதற்கும், செய்வதில் முழுமையான ஈடுபாடுகொள்வதற்கும் ஆதாரமாக இருப்பதால்தான், பொதுவாகவே விளையாட்டு என்னை மிகவும் வசீகரிக்கிறது!

ஆயிரம் ஜன்னல்
''தியான லிங்கம் ஏழு நாட்களில் ஏழுவிதமான பலன்களைத் தரும் என்று சொல்லப்படுகிறதே, அது எப்படிச் சாத்தியமாகும்?''

''தியான லிங்கம் என்பது முடங்கிக்கிடக்கும் சிற்பம் அன்று. அது உயிரோட்டம் உள்ள அமைப்பு. அதன் ஏழு சக்கரங்களும் அடுத்தடுத்து இயங்குவதால், ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சக்தி மிகுந்திருக்கும்.

செல்வம், ஆரோக்கியம் போன்ற குறிப்பிட்ட நலன்களை விரும்புபவர்களுக்கு மட்டும் அந்தந்த நாளில் மிகுந்துள்ள சக்தி உதவும். மற்றபடி, ஆன்மிக நலன்களுக்காக தியான லிங்கத்தை நாடுபவர்கள் எல்லா நாட்களிலும் ஒரேவிதமான சக்தியைப் பெறுகிறார்கள்!''

-சத்குரு ஜக்கி வாசுதேவ்

 
ஆயிரம் ஜன்னல்
-ஜன்னல் திறக்கும்...
ஆயிரம் ஜன்னல்