Published:Updated:

நாயகன் - அன்னை தெரசா

நாயகன் - அன்னை தெரசா


17-06-09
நாயகன் அன்னை தெரசா
நாயகன் - அன்னை தெரசா
நாயகன் - அன்னை தெரசா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
அஜயன் பாலா
நாயகன் - அன்னை தெரசா

சென்ற இதழ் தொடர்ச்சி...

'நாம் செய்யும் சேவை கடலின் ஒரு துளி போன்றதுதான். ஆனால், அதை நாம் செய்யாவிட்டால், கடலில் ஒரு துளி குறைந்துவிடும் அல்லவா?'

- அன்னை தெரசா

நாயகன் - அன்னை தெரசா

1964-ல் இந்தியாவுக்கு போப் ஆண்டவர் ஜான் பால் சுற்றுப் பயணம் வந்தார். போப்புக்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் விலை உயர்ந்த கான்டினென்டல் காரைப் பரிசாக அனுப்பிவைத்தார். சுற்றுப்பயணம் முடிந்து விமானநிலையத்துக்கு வந்த போப், அந்த காரை அன்னைக்குப் பரிசாகத் தந்தார். பரிசு தருபவர் போப்பாண்டவர் என்பதால், அன்னை அதனை மறுக்கவில்லை. ஆனால், அதற்குள் பல விமர்சனங்கள். 'பணக்கார காரில் பவனி வந்து, அன்னை ஏழைகளுக்குச் சேவை செய்யப் போகிறாரா?' என எழுதினர். பரிசு கொடுப்பதும் பெறுவதும் அன்பின் வெளிப்பாடு. அந்தப் பரிசை உடனே விற்றால், கொடுத்தவரின் உணர்வை நாம் மதிக்கவில்லை என்று அர்த்தமாகிவிடும். இந்த நாகரிகத்துக்காக ஒரு வாரம் பொறுத்திருந்த அன்னை, அடுத்த வாரமே காரை ஏலம்விட முயன்றார். 'இதனால் வரும் நிதி நல்ல செயலுக்குப் பயன்படப்போகிறது. எனவே, ஏலம் எடுப்பவர்கள் நல்ல விலைக்கு எடுங்கள்' என அறிவிப்பு செய்தார் அன்னை. அது போலவே, அந்த விலை உயர்ந்த கார் நல்ல விலைக்கு ஏலம் போனது. அந்தத் தொகை முழுவதையும் அறக்கட்டளைக்கான கணக்கில் சேர்த்தார்.

சேவைக்கு இன்னும் இன்னும் அதிகப் பணம் தேவைப்பட்டது. அந்தச் சமயத்தில் பணக்காரர் ஒருவர் அன்னையிடம் ஒரு பெருந்தொகையைக் கொடுத்துவிட்டு, ஓர் ஆலோசனையும் தந்தார். இந்தப் பணத்தை அப்படியே வங்கியில் போட்டு, அதன் மூலம் மாதாமாதம் வரும் வட்டிப் பணத்தை சேவைக்காக வைத்துக்கொள்ளும்படி சொன்னார். அன்னை 'இந்தத் தொகை இப்போது தேவை இல்லை' என மறுத்தார். பணக்காரருக்கு அதிர்ச்சி. அவர் சென்ற பின்னர், சகோதரிகள் அன்னையிடம் இது குறித்துப் பேசியபோது, 'ஒரு நோயாளி உயிருக்குப் போராடும்போது ஒன்றுக்கும் பயன்படாத பணம் இருந்தாலும் ஒன்றுதான்; இல்லாவிட்டாலும் ஒன்றுதான். இவ்வளவு பணம் வரும்... இவ்வளவு செலவு செய்யலாம் என்று கணக்குப் போட்டா நாம் இந்தச் சேவையைத் துவக்கினோம். எல்லாம் தானா கவே நடக்கும். நமக்குத் தேவையான பணத்தை இறைவன் கொடுப்பான்' என அவர்களைச் சாந்தப்படுத்தினார் அன்னை. அதே பணக்காரர்தான் இறப்பதற்கு முன், தனது மொத்த சொத்துக்களையும் அன்னையின் ஆசிரமப் பணிகளுக்கே எழுதிவைத்து விட்டு இறந்தார்.

அன்னையின் பல்வேறு குணங்களில், மற்றவர் மனம் நோகாத குறும்பும் ஒன்று. அன்னை அடிக்கடி சேவை செய்வதற்காக விமானத்தில் செல்ல வேண்டி இருந்ததால், தனக்கு இலவச அனுமதி தருமாறு இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அவர்களோ அன்னையின் கோரிக்கைக்குப் பதில் எதுவும் சொல்லாமல் தட்டிக்கழித்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அன்னை, 'வேண்டுமானால் என்னை உங்கள் விமானத்தில் பணிப்பெண்ணாகப் பணிபுரிய அனுமதியுங்கள். உங்களுக்கான பணத்தை வேலை செய்து கழித்துவிடுகிறேன்' என எழுதினார். அடுத்த நாளே அந்தக் கடிதத்துக்குப் பதில் வந்தது. அவரது இலவச பயணத்துக்கான அனுமதிக் கடிதம்தான் அது.

ஒருமுறை, அன்னை காசா விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அவரைப் பரிசோதித்த பாதுகாப்பு அதிகாரி அன்னையிடம், 'ஆயுதம் எதை யாவது ஒளித்துவைத்திருக்கிறீர்களா' எனச் சிரித்துக் கொண்டே கேட்க, பதிலுக்கு அன்னை 'ஆமாம், இருக் கிறது' என்றதும் அதிகாரி அதிர்ந்தார். 'உலகிலுள்ள அனைவரையும் தாக்கும் அன்பு எனும் பலமான ஆயுதம்' என்றார் அன்னை கண்களில் ஒளி சிந்தச் சிரித்துக்கொண்டே. அந்த அதிகாரியின் உடல் பரவசத்தில் அதிர்ந்தது.

விலை உயர்ந்த சேலை அணிந்துகொண்டு ஒரு பெண் அன்னையின் ஆசிரமத்துக்குச் சேவை செய்ய வந்தார். அன்னை அந்த சேலையைத் தடவிப் பார்த் தார். அப்போது அந்தப் பெண் பெருமிதத்துடன் 'இது போன்ற விலை உயர்ந்த சேலைகளைத்தான் நான் அணிவேன்' எனக் கூறினாள். அன்னைக்கு அவர் மனதை நோகடிக்க விருப்பமில்லை. 'இந்தச் சேலையின் விலை எவ்வளவு?' எனக் கேட்டார். '800 ரூபாய்' என பதில் சொன்னார் அந்தப் பெண். 'அப்படியானால் எனக்காக ஒன்று செய்... நாளை முதல், சேலையை 500 ரூபாய்க்குள் எடுத்துக்கொள். மீதமுள்ள 300 ரூபாய்க்கு, எங்கள் விடுதியில் இருக்கும் ஏழைப் பெண் களுக்கு எவ்வளவு வருமோ அத்தனை சேலைகளை வாங்கிக்கொண்டு வா. உன்னைப் போல அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்' எனக் கூறினார். அதன்பின் அதுவே 400, 300, 200 எனக் குறையத் துவங்கியது. அன்னை 'போதும். இனிமேல் நீ குறைக்க வேண்டாம்' எனக் கூறினார். ஆனால், அந்தப் பெண்ணோ, 'ஏன் எனக்கான மகிழ்ச்சியின் அளவைக் குறைக்கிறீர்கள்? கொடுப்பதன் இன்பத்தை இப்போதுதான் நான் முழுமையாக உணர்கிறேன்' என்றார்.

சேவை செய்வதற்குக்கூட அன்னை பல சங்கடங் களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. ஏழைகளுக்கு இலவச உதவி செய்து, அவர்களை மேலும் சோம்பேறி ஆக்குகிறீர்கள் எனப் பலரும் குற்றம் சாட்டினர். அவர்களது குற்றச்சாட்டில், 'ஒருவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது சாலச் சிறந்தது' என்ற வாசகம் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வந்தது. அன்னை அதற்குப் பதில் சொல்கிறபோது, 'நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், நான் மீன் பிடிக்கவே தெம்பில்லாமல் இருப்பவர்களைத்தான் குளிப்பாட்டி, சோறூட்டி மீண்டும் தெம்பு பெற என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அது முக்கியப் பணி என்றும் நினைக்கிறேன். அந்தப் பணி செய்வதற்குத்தான் இங்கு அதிகமான சேவையும் தேவைப்படுகிறது. அதனால், என் பணி முழுமையாக முடிவுற்றதும் நானே உங்களிடம் அவர்களை அனுப்பிவைக்கிறேன். நீங்கள் அவர்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்' என்றார்.

ஜனவரி 4, 1970 அன்று அன்னைக்கு ஒரு கடிதம் வந்தது. அல்பேனியாவிலிருந்து வந்திருந்த அக்கடிதத்தை எழுதியிருந்தவர் அவரது சகோதரி அகா. கடிதத்தில் அன்னையின் தாய் பெர்னாய் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாகவும், கடைசியாக ஒரு முறை அன்னையைப் பார்க்க விரும்புவதாகவும் எழுதியிருந் தார். அன்னைக்கு மனம் கனத்தது. உலகுக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்த பின் இப்போது தன் தாயாருக்காகக் கலங்கலாமா என்று உள்ளுக்குள் மனச் சாட்சி கேள்வி எழுப்பியது. ஆனால், அதனையும் மீறி, அவர் புறப்படத் தயாரானார். காரணம், தாயாரிடம் இருந்துதான் சேவை எனும் அருங்குணமே அவ ருக்குத் தோன்றியது. அதனால், அவர் தாய் மட்டுமின்றி ஒருவகையில் குருவும்கூட! குருவின் விருப்பத்தை நிறை வேற்ற வேண்டியது சிஷ்யையின் கடமை அல்லவா! அதனால், அல்பேனியாவுக்குப் புறப்பட்டார். ஆனால், அல்பேனிய அரசு ஓர் எச்சரிக்கை விடுத்தது. 'இங்கே உங்கள் தாயாரைப் பார்க்க வரலாம். எந்தத் தடையும் இல்லை. ஆனால், உங்களை நாங்கள் திருப்பி அனுப்பு வோமா எனக் கூற முடியாது' எனக் கூற, தன் பய ணத்தை ரத்து செய்துவிட்டார் அன்னை.

கனத்த இதயத்துடன் தன் தாயாருக்குப் பிரத்யேகமாகப் பிரார்த்தனை செய்துவிட்டு, வழக்கம் போலத் தன் வேலைகளைப் பார்க்கப் புறப்பட்டார். தெரசாவின் சேவையைப் பாராட்டி உலகெங்கிலுமிருந்து பல விருதுகள் வந்தன. 1971-ல் போப்பாண்டவர் அமைதி விருது வழங்கிக் கௌரவித்தார். இக்காலங்களில் அன்னையின் கால் படாத தேசமே இல்லை எனும் அளவுக்கு, உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று தன் சேவையைச் செய்துவந்தார். 128 நாடுகளில் சேவை மையங்களைத் துவக்கினார். ஆனால், உலகில் எங்கு சுற்றியபோதிலும், சொந்த மண்ணை மிதிக்க முடியாத ஏக்கம் அவருக்குள் இருந்து வந்தது. 1978 மார்ச் 28-ல் அந்தக் குறையும் நீங்கியது.

அவரது சொந்த ஊரான ஸ்கொப்ஜியிலிருந்து அழைப்பு வந்தது. அதற்கு அல்பேனியா அரசும் அனு மதித்திருந்தது. ஆனால், அதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே அன்னையின் தாயாரும், சகோதரி அகாவும் இறந்திருந்தனர்!

 
நாயகன் - அன்னை தெரசா
-சரித்திரம் தொடரும்
நாயகன் - அன்னை தெரசா