Published:Updated:

நிருபன் முகங்கள்... முகமூடிகள் -முகத்திரை கிழிக்கும் தொடர்

நிருபன் முகங்கள்... முகமூடிகள் -முகத்திரை கிழிக்கும் தொடர்

முகங்கள்... முகமூடிகள்
நிருபன் முகங்கள்... முகமூடிகள் -முகத்திரை கிழிக்கும் தொடர்
நிருபன் முகங்கள்... முகமூடிகள் -முகத்திரை கிழிக்கும் தொடர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிருபன்
நிருபன் முகங்கள்... முகமூடிகள் -முகத்திரை கிழிக்கும் தொடர்
முகத்திரை கிழிக்கும் தொடர்
நிருபன் முகங்கள்... முகமூடிகள் -முகத்திரை கிழிக்கும் தொடர்
நிருபன் முகங்கள்... முகமூடிகள் -முகத்திரை கிழிக்கும் தொடர்

ந்தப் பிரமுகரை நேரில் பார்ப்பவர்கள் நெகிழ்ந்து விடுவார்கள். அமைதி குடி கொண்ட முகம்... அதிர்ந்து பேசாத குணம்... தெய்விகக் களை என அந்த பிசினஸ் புள்ளிக்கு மீடியா ஆட்கள் மத்தியிலும் நல்ல மதிப்பு. ஆனால், கண்ணீரும் வியர்வையும் கலந்து கட்டிய புகழ் சாம்ராஜ்யம், கடலோரக் கிராமத்தில் இருந்து கிளம்பிய ஒரு புகாரால் சுக்குநூறாகிப் போனதுதான் துயரம்.

அழுது அழுது சோர்ந்துபோன கண்களும் தலைவிரி கோலமுமாக அந்தப் பெண்ணைப் பார்த்த கணம் எனக்கு இப்போதும் நினைவில் நிற்கிறது.

காலை ஆறரை மணிக்கு அந்தக் கிராமத்தில் ஆஜர். போட்டோகிராபரைக் கொஞ்சம் முன்னாடியே இறக்கிவிட்டு, நான் மட்டும் அந்தப் பெண்ணின் வீடு தேடிச் சென்றேன். செங்கல் வைத்துக் கட்டப்பட்ட, சிமென்ட் பார்க்காத வீடு. ஆச்சர்யமாகக் கதவு திறந்ததே அந்தப் பெண்தான். எளிமையான சேலையில் இயல்பான பக்கத்து வீட்டுப் பெண் போன்ற அழகுடன் இருந்தார். அத்தனை பெரிய கண்களில் சின்னதாகச் சோகம்.

தயக்கமாக விவரம் சொன்னதும், ''ஸாரி சார்... சொல்ல வேண்டியதை எல்லாம் போலீஸ்கிட்ட சொல்லிட்டேன். என்னைத் தொந்தரவு செய்யாதீங்க!'' எனக் கண் கலங்கிக் கும்பிட்டார். என் அடுத்த வார்த்தைக்குள்ளாகவே கதவு சாத்தப்பட்டது. அந்தப் பெண்ணின் அழுகை ஏனோ மனதைப் பிசைந்தது. 'அவரிடம் பேசாமல் போவதில்லை' என்ற வைராக்கியத்துடன் அருகில் கிடந்த கட்டிலில் உட்கார்ந்துகொண்டேன். அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு முரட்டு உருவம் என்னை நெருங்கி விசாரித்தது. ''மேடம்தான் வெயிட் பண்ணச் சொன்னாங்க!'' என்றேன்.

அந்த முரட்டு உருவமே என்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்றது. ''நான்தான் ஏதும் பேசுற ஐடியால இல்லைன்னு சொல்லிட்டேனே... அப்புறமும் ஏன் சார்!'' என்றபடியே அந்தப் பெண் மறுபடியும் விசும்பத் தொடங்க, எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. 'ஸாரி சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்து விடலாமா?' என்று யோசித்தபடியே தயக்கத்தோடு எழுந்தேன். அதற்குள் அந்தப் பெண்ணின் மனம் இளகத் தொடங்கி இருந்தது. கொஞ்சம் கோபத்தோடு நிமிர்ந்து, ''என்ன கேட்கணுமோ, கேளுங்க!'' என்றார். ''நீங்க என்ன சொல்லணுமோ, அதைச் சொல்லுங்க... இந்த நேரத்துல உங்களை நான்எதுவும் கேட்க விரும்பலை!''

''நான் சொல்றதைத்தான் யாருமே நம்பமாட்டேங் குறாங்களே... பணத்துக்காக பொய்ப் புகார் குடுத்தேன்னு மனச்சாட்சியே இல்லாமப் பேசுறாங்க. அந்த அளவுக்கு நல்லவர் வேஷம் அவருக்கு எடுபடுது. ஒரு பெண்ணா இழக்கக் கூடாததை இழந்த என்னைப்பத்தி யாரும் கவலைப்பட மாட்டேங்குறாங்க. யார் யாரோ மிரட்டுறாங்க!'' என்று குமுறிக் கொட்டத் தொடங்கியவர், ஒரு கட்டத்தில் மனசுவிட்டு அனைத்து விஷயங்களையும் கொட்டத் தொடங்கினார்.

அந்த பிசினஸ் புள்ளியின் செக்ஸ் டார்ச்சராக அவர் விவரித்த விஷயங்களை இப்போதும்கூட என்னால் நம்ப முடியவில்லை. ''நான்தான் சார் அவருக்கு உயிர். திரும்புற திசையெல்லாம் நான் நிக்கணும். பாசமாப் பழகணும். அவரைத் தாங்கணும். ஆபீசுக்குப் போனாகூட போன்ல என்கிட்ட பேசிட்டேதான் இருப்பார். ஒரு நிமிஷம்கூட நிக்க நேரம் இல்லாம... ஓய்வு இல்லாம உழைக்கிற மனிதரா வெளியே தெரியிற அவர், முழு நேரத்தையும் எனக்காகத்தான் செலவு பண்ணிட்டு இருந்தார். இப்போ என் வாழ்க்கையைப் பாழடிச்சிட்டு அவரும் பைத்தியமாத் திரியுறார்!''

வெளி வந்த பேட்டியில் நாகரிகமான சங்கதிகளை மட்டுமே குறிப்பிட்டு இருந்தேன். ''ஒரு வேகத்துல பல அந்தரங்கங்களையும் சொல்லிட்டேன். நல்லவேளை எல்லாத்தையும் நீங்க எழுதலை!'' என்று மகிழ்ச்சியாக அவரே தொடர்புகொண்டார். அதன் பிறகு அடிக்கடி போனில் பேசி தகவல் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நட்பாகவும் இருந்தார்.

கோர்ட், விசாரணை எனக் காலம் உருண்டு ஓடியது. இடையிடையே நான் அந்தப் பெண்ணிடம் பேசியபோது, அவர் மனதளவில் தேறி இருந்தார். இதற்கிடையில் அவர் ஓர் அரசியல்வாதியின் பாதுகாப்பான பராமரிப்பில் இருப்பதாகத் திடீர் பரபரப்பு. அது குறித்து தகவல்கள் திரட்டிக் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன். அது வெளியானதும் எதிர் பார்த்தபடியே அவரிடம் இருந்து போன்... 'எப்படிச் சமாளிப்பது?' என்ற யோசனையுடனேயே போனை காதுக்குக் கொடுக்க, ''உங்க பத்திரிகையில வெளியான என் போட்டோஸ் ரொம்ப நல்லா இருக்கு. அதைஎல்லாம் எனக்குத் தர முடியுமா?'' எனத் தயங்கித் தயங்கிக் கேட்டார். பெருமூச்சுடன் உடனே அவருடைய சகலவித புகைப்படங்களையும் பிரின்ட் போட்டு நீட்டினேன்.

அப்போது, ''உங்களைப் பத்தி செய்திகளும் படங்களும் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்துட்டே இருக்கே... அதைப்பத்தி உங்களுக்கு வருத்தமே இல்லையா?'' என மனதில் பட்டதைப் பட்டெனக் கேட்டு விட்டேன். மெல்லிய சிரிப்போடு என்னைப் பார்த்தவர், ''மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நான் எட்டாவது படிக்கிறப்ப ஸ்கூல்ல எல்லாரும் ஒண்ணா நின்னு குரூப் போட்டோ எடுத்தாங்க. அதை வாங்கி வீட்ல மாட்டி அழகு பார்க்கணும்னு எனக்கு அவ்வளவு ஆசை. ஆனா, அதை வாங்கக் கையில பத்து ரூபா இல்லை. அம்மாகிட்ட கெஞ்சிப் பார்த்தேன். 'உனக்கெதுக்குடி போட்டோ?'ன்னு அவங்களும் கண்டுக்கல. கடைசி வரை என் முதல் போட்டோவை வாங்கிப் பார்க்க முடியாமலே போச்சு. ஆனா, இப்போ திரும்புற பக்கமெல்லாம் என் போட்டோதான். நான் எதுக்காக ஏங்கித் தவிச்சேனோ... அது நான் விரும்பாமலே இப்போ நடக்குது. வாழ்க்கை ரொம்ப விசித்திரமானதுஇல்ல!'' - அவர் பேச்சில் வியப்பும் வேதனையும் சரிசமமாக இருந்தது.

அதன் பிறகு வேறு ஓர் ஊரில் குடியேறி ஒரு தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொண்டு முன்னேறிய அவர், ஒரு கட்டத்தில் இரண்டாவது திருமணத்துக்கும் தயாரானார். ''என்னை மனசார ஏத்துக்கிற ஒரு நண்பர்... அவரை முழுக்க நம்பி கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்லிட்டேன். பழைய வம்பு வழக்கு களையும் மனசிலேர்ந்து அழிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அந்த பிசினஸ் புள்ளிக்கு போன் பண்ணிக் கல்யாண செய்தியைச் சொல்லிட்டேன். அவரும் ஓ.கே. சொல்லி வாழ்த்து சொன்னார்!'' - வாழ்த்து சொல்ல அழைத்த என்னிடம் அவர் பூரிப்புடன் சொன்னது இது.

திருமணத்துக்குப் போயிருந்தேன். அந்த பிசினஸ் புள்ளி அனுப்பி இருந்த ஒரு பெரிய பார்சல் மணமகள் அறையில் இருந்தபடி என்னைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது!

தமிழ் சினிமாக்களில் போலீஸாக நடிப்பவர்களுக்கு அந்தப் பரபரப்பு காவல் அதிகாரிதான் ரோல் மாடல். விறைப்பும் முறைப்புமாக வளைய வந்தாலும், சினிமா வில்லன்களையே தோற்கடிக்கும் அவரது ரியல் முகம்..

- அது... அடுத்த வாரம்...

 
நிருபன் முகங்கள்... முகமூடிகள் -முகத்திரை கிழிக்கும் தொடர்
நிருபன் முகங்கள்... முகமூடிகள் -முகத்திரை கிழிக்கும் தொடர்