Published:Updated:

ஆலயம் ஆயிரம் - முக்தி நல்கும் மும்மூர்த்திகள் சுசீந்திரம் தாணுமாலயன்

ஆலயம் ஆயிரம் - முக்தி நல்கும் மும்மூர்த்திகள் சுசீந்திரம் தாணுமாலயன்

காஷ்யபன், ஓவியங்கள்: ஜெ.பி
ஆலயம் ஆயிரம் - முக்தி நல்கும் மும்மூர்த்திகள் சுசீந்திரம் தாணுமாலயன்
ஆலயம் ஆயிரம் - முக்தி நல்கும் மும்மூர்த்திகள் சுசீந்திரம் தாணுமாலயன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம் - முக்தி நல்கும் மும்மூர்த்திகள் சுசீந்திரம் தாணுமாலயன்
முக்தி நல்கும் மும்மூர்த்திகள் சுசீந்திரம் தாணுமாலயன்
ஆலயம் ஆயிரம் - முக்தி நல்கும் மும்மூர்த்திகள் சுசீந்திரம் தாணுமாலயன்
ஆலயம் ஆயிரம் - முக்தி நல்கும் மும்மூர்த்திகள் சுசீந்திரம் தாணுமாலயன்

ஞானாரண்யம் என்று அறியப்பட்ட நற்றலம் ஒன்றில் அத்திரி மகரிஷி, மனையாள் அனுசூயாவுடன் ஆசிரமம் அமைத்து இல்லறம் இயற்றிக்கொண்டு இருந்தார். அச்சமயம், அவனியில் மழை பொய்த்தது. பூமி வறண்டது. பஞ்சம் தழைத்தது.

அத்திரி மகரிஷி யாத்திரை சென்றிருந்த வேளை அது. பரிதவித்த பாமர மக்கள், அனுசூயாவிடம் தமது அல்லல் களை அகற்ற வேண்டினர்.

அனுசூயாவும் மணாளனின் பாத தீர்த்தத்தால் மழைக் கடவுளைப் பூஜித்தாள். அவள் கற்பிற் சிறந்த காரிகை என்பதால், வருணனும் மனம் இரங்கி மழையாகப் பொழிந்தான். பஞ்சம் நீங்கியது. மக்கள் அவளை வாழ்த்திச் சென்றனர்.

நற்றவ முனிவர் நாரதர் அனுசூயா பற்றி அறிந்தார். அவர் கலைமகள், திருமகள், மலைமகள் என்னும் மூன்று தேவியரிடமும் அனுசூயாவின் கற்பின் மகிமையை அவர்கள் பொறாமையுறும் வண்ணம் புகழ்ந்தார்.

அனுசூயாவின் கற்பின் தூய்மையைச் சோதித்து அறிய முடிவு எடுத்தனர் மூன்று தேவியரும். அவர்களின் விருப்பப்படி மும்மூர்த்திகளும் முதுமை அந்தணர் வடிவில் ஆசிரமம் அடைந்து, அனுசூயாவிடம் அன்னம் யாசித்தனர்.

அவர்களுக்கு அன்னம் அளிக்க வந்த அனுசூயாவிடம், 'ஆடையற்ற நிலையில் உணவு படைக்க வேண்டும். அல்லாவிடில் உண்பதற்கு இல்லை' என்றனர்.

அதிர்ந்த அனுசூயா, மணாளனை மனதில் எண்ணி அவரது பாத தீர்த்தத்தை அந்தணர்கள் மீது தெளிக்க... மூவரும் பச்சிளம் குழந்தைகள் ஆயினர். அனுசூயா அவர்களுக்கு உணவூட்டினாள். தொட்டிலில் இட்டாள். ஆசிரமத்திலேயே வைத்து பரிபாலனமும் செய்தாள்.


கணவரைக் காணாத தேவியர் மூவரும் ஆசிரமம் அடைந்தனர். அங்கே குழவிகளாகக் குதூகலித்துக் கொண்டு இருந்த கணவர்களைக் கண்டு திகைத்தனர். தத்தம் மணாளனை மீட்டுத் தருமாறு அனுசூயாவிடம் யாசித்தனர்.

அனுசூயாவும் அவர்களிடம் ஆதிசக்தியை ஆராதனை செய்து மீளுமாறு கூறினாள்.

அவர்கள் அவ்வாறே செய்ய, அனுசூயா தனது கணவரின் பாத தீர்த்தத்தால் மும்மூர்த்திகளையும் சுய உருவு அடையச் செய்தாள்.

தீர்த்த யாத்திரை முடிந்து திரும்பிய அத்திரி மகரிஷியும், தேவர்களும், நாரதரும் மும்மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசித்து மகிழ்ந்தனர்.

மும்மூர்த்திகளையும் அங்கேயே எழுந்தருளுமாறு அனுசூயா வேண்ட... அவர்களும் ஞானாரண்யத்துக் கொன்றை மரத்தடியில் மூன்று சிவலிங்கங்களாக எழுந்தருளினார்கள்.

பின் நாட்களில் கௌதமரின் சாபத்தால் தன்னுடல் கெட்ட இந்திரன் ஞானாரண்யம் வந்து தாணுமாலயனைப் பூஜித்து, சாப விமோசனம் அடைந்தான். அன்று முதல் அத்தலம் சுசீந்திரம் என வழங்கப்படலானது.

எழில் கொழிக்கும் நாஞ்சிலின் நாகர்கோவிலில் இருந்து 6 கி.மீ. தொலைவில் கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது சுசீந்திரம். ஆழி மண்டபத்துடன் தெப்பக்குளம், கோபுரம், தேர் என நேர்த்தியாகக் காட்சி தருகிறது ஆலயம்.

பிரதான கிழக்கு வாயிலைக் கடந்ததும் உயிர்த்துடிப்பு மிக்க சிற்பங்கள் நிறைந்த ஊஞ்சல் மண்டபம். கிழக்குப் பிராகாரத்தில் முதல் தரிசனம் தட்சிணாமூர்த்தி.

அதனை அடுத்து சிற்பத் தூண்கள் நிறைந்த நவக்கிரக மண்டபம். இதன் கற்கூறையில் நவக்கிரகங்களும் அமைந்திருப்பது ஆலயத்தின் தனிச் சிறப்பு.

வசந்த மண்டபத்தின் பின்புறம் பிரமாண்டமான நீலகண்ட விநாயகர், பார்வதி தேவியுடன் காட்சி நல்குகிறார். பரமசிவன் அருந்திய ஆலகால விஷம் அவரது கழுத்துக்குக் கீழே இறங்காவண்ணம் அவரது கண்டத்தை அழுத்தினாள் அன்னை. அதனைக் கழுத்திலேயே நிலைபெறச் செய்ய விநாயகரால்தான் இயலும் என்பதால், சிவனே இங்கு நீலகண்ட விநாயகராக எழுந்தருளி இருப்பதாகப் புராணம் புகல்கிறது.

பிரமாண்ட பிராகாரங்கள். மேற்குப் பிராகாரத்தின் இடது கோடியில் சாஸ்தா சந்நிதி. வலது கோடியில் வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபச் சந்நிதியில் ராமரும் சீதா தேவியும் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் அளிக்கின்றனர்.

ஆலயம் ஆயிரம் - முக்தி நல்கும் மும்மூர்த்திகள் சுசீந்திரம் தாணுமாலயன்

வடக்குப் பிராகாரத்தின் மையத்தில் முருகனின் அருட்கோயில். வள்ளி-தெய்வானை சகிதம் திருநீற்றுக் காப்புடன் காட்சி தரும் குமரனின் எழில் நெஞ்சை நிறைக்கிறது.

இதே பிராகாரத்தில் அலங்கார மண்டபத்தின் அருகில் அறம் வளர்த்த அன்னையின் சந்நிதி. மஞ்சள் பட்டாடை உடுத்தி, கிரீடம் தரித்து, கரத்தில் கமலம் ஏந்தி, கருணை வடிவாகக் காட்சி தருகிறாள் அன்னை.

ஈசான்ய மூலையில் ஆஞ்சநேயரின் விசுவரூப தரிசனம். பணிவுடன் கரம் கூப்பி நிற்கும் அனுமனின் 18 அடி உயரப் பேருருவம் பிரமிக்கவைக்கிறது. இவ்வாறு குதூகலத்துடன் புன்னகை புரியும் ஆஞ்சநேயரை வேறெங்கும் காண இயலாது.

ஆஞ்சநேயருக்குப் பின்னால் அமைந்திருக்கும் சித்திரா மண்டபத்தை அடுத்து, கிழக்குப் பிராகாரத்தில் 12 அடி உயரமுள்ள வெள்ளை மாக்கல் ரிஷபம்.
இவருக்கு அருகில் இருக்கும் கொன்றை மரத்தடியில் அனுசூயாவின் வேண்டுகோளுக்கு இணங்கி தாணு, மால், அயன் மூவரும் சுயம்பு மூர்த்திகளாக லிங்க வடிவில் எழுந்தருளி உள்ளனர்.

கொன்றையடிக்கு இடதுபுறத்தில் திருமலை நாயக்கரால் அமைக்கப்பட்ட கல் மண்டபத்தில், ஆறரை அடி உயர வழுவழுப்பான கருங்கல் கருடாழ்வார், திருமால் கோயிலை நோக்கிக் கரம் கூப்பி நிற்கிறார்.

வெள்ளை நந்திக்கு நேர் எதிரே அலங்காரத் தூண்கள் நிறைந்த அர்த்த மண்டபம்.

அடுத்திருக்கும் கருவறையில் தாணுமாலயப் பெருமான். ஜோதி வடிவக் கவசம் தரித்து வரிசையாக மேல் நோக்கிச் செல்லும் பிறைகளுடன் காட்சி தருகிறான். பாணத்துக்கு இருபுறங்களிலும் சரம் சரமாகப் பூக்கள். ஆவுடையாரை வேஷ்டி அலங்கரிக்கிறது.

தாணுமாலயப் பெருமானின் சந்நிதிக்கு வலது புறத்தில், கருடாழ்வாருக்கு எதிரே விஷ்ணு சந்நிதி.

கருவறையில் திருமால் திருவேங்கட விண்ணவரப் பெருமாள் என்ற திருநாமத்துடன், மேலிரு கரங்களில் சக்கரமும் சங்கும் ஏந்தி சேவை சாதிக்கிறார்.

சைவ, வைணவ ஒற்றுமைக்கோர் எடுத்துக்காட்டாக தாணு, மால், அயன் மூவரும் உறையும் சுசீந்திரம் வெறும் கலைக்களஞ்சியம் மட்டுமல்ல... பக்தி வளர்க்கும் பண்ணையும்கூட!

தலத்தின் பெயர்: சுசீந்திரம். சுவாமியின் திருநாமம்: தாணுமாலயன். எங்கே உள்ளது: தமிழ்நாட்டில். எப்படிப் போவது: சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் சென்று நாகர்கோவிலில் இறங்கினால் அங்கிருந்து சுசீந்திரத்துக்குப் பேருந்து, ஆட்டோ, கார் மூலம் செல்லலாம். எங்கே தங்குவது: நாகர்கோவிலில் வசதியான விடுதிகள் உள்ளன. தரிசன நேரம்: காலை 4.30 மணி முதல் பகல் 11.30 மணி வரை; மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை!

- தரிசிப்போம்

 
ஆலயம் ஆயிரம் - முக்தி நல்கும் மும்மூர்த்திகள் சுசீந்திரம் தாணுமாலயன்
ஆலயம் ஆயிரம் - முக்தி நல்கும் மும்மூர்த்திகள் சுசீந்திரம் தாணுமாலயன்