004 "1967. நான் சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச புதுசு. ஏதோ ஒரு கூட்டத்துல பேசக் கூப்பிட்டு இருந்தாங்கன்னு போயிட்டேன். 'பொம்மைப் புலியோடு சண்டை போடுறவன் எல்லாம் ஒரு வீரனா? அட்டைக் கத்தி வீரன். கையால கண்ணை மூடிக்காம ஒரு சோகக் காட்சியில நடிக்க முடியுமா?'ன்னு மேடையில பேசுறவங்க எல்லாம் ஏதோ சூசகமாப் பேசுறாங்க. 'என்னங்க சங்கதி?'ன்னு விசாரிச்சா, சிவாஜி ரசிகர்கள் ஏற்பாடு செய்த விழா அதுன்னு சொன்னாங்க. எனக்கு சட்டுனு எல்லாம் விளங்கிருச்சு. என்னைப் பேசச் சொன்னப்போ, 'மேலை நாடுகள்ல எல்லாம் நம்ம சிவாஜியைத் 'தென்னகத்தின் மார்லன் பிராண்டோ'ன்னு பெருமையாப் பேசுவாங்க. அவரோட பெருமைகளைப் பேசினாலே போதும். அவரைப் பாராட்டுறோம்னு மத்தவங்களை அவமானப்படுத்த வேண்டாம்'னு பேசிட்டு உக்காந்துட்டேன். 'ஏய்! இவன் அவங்க ஆளுப்பா'ன்னு கூட்டத்துல ஒரு கோஷ்டி உஷ்ணமாகி, என் போஸ்டர் மேல எல்லாம் சாணி அடிச்சுட்டாங்க.
பத்து நாள் கழிச்சு பொங்கலுக்கு நானும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச 'கந்தன் கருணை' ரிலீஸ். முந்தின நாள்தான் எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டுஇருந்தாங்க. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தமிழகமே பரபரப்பா இருந்தது. நான் குடும்பத்தோடு தியேட்டர்ல படம் பார்த்துட்டு வெளியே வர்றேன். சிவாஜி, முருகன் கெட்டப்ல நான் இருக்குற கட்- அவுட்கள் இருந்துச்சு. அதுல என் முகத்துல சாணி. எம்.ஜி.ஆர். இப்படிப் படுத்த படுக்கையாகிடக்கிறப்ப சிவாஜிகூட நடிச்சுட்டு இருக்கேன்னுஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த வேலை. 'நமக்கு நாளைக்கு ஒருவேளை பரபரப்பான நடிகன்கிற அந்தஸ்து கிடைச்சாக்கூட நம்ம பேரைச் சொல்லி ஒரு ரசிகர் மன்றம்கூட ஆரம்பிக்கக் கூடாது'ன்னு அந்த இடத்துலதான் முடிவெடுத்தேன். இளைஞர்களின் சக்தியை, நேரத்தை, சிந்தனையைக் கெடுக்குற வேலையை நம்ம மனசறிஞ்சு செஞ்சுரக் கூடாதுங்கிறதுல கடைசி வரை உறுதி இருக்கக் காரணமா, என்னை வழி நடத்திய நாள்!''
005 "நாம எவ்வளவுதான் நல்லவனா இருந்தாலும், சினிமாவில் வெற்றிகள்தான் நமக்கான மதிப்பையும் மார்க்கெட்டையும் தீர்மானிக்கும். இது எனக்கு ரொம்பச் சின்ன வயசுலயே புரிஞ்சிட்டாதால, எனக்குள்ள எந்தப் பெரிய எதிர்பார்ப் பும்இல்லாம நடிச்சுட்டே இருந்தேன். சூர்யாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு நடிகனின் மகனாக இருந்தாலும், சினிமா வாடையே இல்லாமல் வளர்ந்தவரு. 'இனிமேதான் நீ கத்துக்க நிறைய இருக்கு'ன்னு மட்டும் சூர்யாகிட்டே சொன்னேன்.ஒரு நாள் ஷூட்டிங் போயிட்டு வந்தவர், ஒரு வாரமா களை இழந்து சோர்வா இருந்தார். என்னன்னு கேட்ட அவங்க அம்மாகிட்டே, வேதனையோடு சில சம்பவங்களைப் பகிர்ந்துக் கிட்டார்.
'நல்ல வேலைக்குப் போயிட்டு இருந்த பையனுக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் தேவையாங்க?'னு என்கிட்ட அவங்க அழு தாங்க. நான் சூர்யாகிட்டே ஒண்ணே ஒண்ணுதான் சொன்னேன், 'சூர்யா! ஒரு நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையேயான ரிலேஷன்ஷிப் என்பது கணவன்-மனைவி உறவு மாதிரி.அதைப் பத்தி நீ உன் மனைவிகிட்டேகூடப் பகிர்ந்துக்கக் கூடாது. ஷூட்டிங்ல உனக்கு என்ன நடந்தாலும், 'சிவகுமார் பையனான நமக்கு இப்படி நடக்குதே'ன்னு நினைக்காதே. அங்கே நீ வெறும் சூர்யாதான். நீ எதிர்பார்க்கிற மரியாதையும்மதிப்பும் உனக்குக் கிடைக்கணும்னா 'சூர்யா'ங்கிற வார்த்தைக்குதிறமையும் தகுதியும் வளர்த்துக்கோ. அதுக்கு என்ன பண்ணணும்னு கேட்காதே! என்ன வேணும்னாலும் பண்ணலாம்!'னுசொன்னேன். அதுக்கப்புறம் சூர்யாவின் அணுகுமுறையே மாறிடுச்சு. மகளை 'ஆஹா ஓஹோ'ன்னு கொண்டாடிட்டு, மகன்களிடம் கொஞ்சம் கெடுபிடியாக இருக்கும் சராசரி தந்தையா நானும் இருந்தேன். ஆனாலும், ஒரு அப்பாவின் வார்த்தைகள் மகனுக்குள் என்ன மாறுதல் உண்டாக்கும்னு எனக்கு அழுத்தமாப் புரியவெச்ச நாள்!''
006 "வாழ்க்கையில் எல்லா திசைகளிலும் ஓடியாச்சு. எல்லா வசந்தங்களையும் வருத்தங்களையும் கடந்தாச்சு. இனிமே வாழ்க்கையில் புதுசா எதுவுமே இல்லையோ... பழசை அசை போட்டுட்டே இருக்க வேண்டியதுதானோன்னு தோண ஆரம்பிச்ச சமயம்... சாலமன் பாப்பையா மதுரை கம்பன் கழக விழாவுக்கு என்னை அழைச்சாரு. சும்மா போய் நின்னா நல்லா இருக்காதேன்னு கம்பராமாயணத்தைப் படிக்கலாம்னு புத்தகத்தை வரவழைச்சா, மூச்சு முட்டிப்போச்சு. விழா தேதிக்குள்ள ஒன்பது பாடல்களைப் படிச்சு பொருள் உணர்ந்துக்கிட்டேன். விழாவுல அதைக் கடகடன்னு நிகழ்கால உதாரணங்களோடு பொருத்தி சரளமாப் பேசவும் ஆச்சர்யமான வரவேற்பு! இலக்கியம், ஆன்மிகம், இதிகாசம்னு இல்லாம பாட்டி கதை சொல்றது கணக் காக் கதை சொன்னது எல்லாருக்கும் புடிச்சுப்போச்சு. 'அட! ஒன்பது பாடல்களுக்கே இத்தனை வரவேற்பா? சிவகுமாரா... இதுதான் நீ எதிர்பார்த்த அடுத்த தளம். புதுப் பாதை. இதுல போ!'ன்னு மனசுக்குள்ள ஒரு குரல். ரெண்டு வருஷம்... தினமும் இரண்டரை மணி நேரம் பயிற்சி. கம்பராமாயணம் முழுக்க ஊறிடுச்சு எனக்குள்ள. 'கம்பன் என் காதலன்'கிற தலைப்புல இரண்டு மணி நேரம் பேசும் இடங்களில் எல்லாம் வயசு வித்தியாசம் இல்லாம ரசிச்சாங்க. 'கம்பன் வாழ்ந்த வரைஅவருக் கான பேரும் பெருமையும் அடையாததால, அவரோட ஆன்மா மோட்சம் கிடைக்காம சுத்திட்டு இருந்திருக்கும். அதுக்கு நீங்க மோட்சம் கொடுத்திட்டீங்கய்யா'ன்னு கவிஞர் புவியரசு கண் கலங்க வாழ்த்தினார். உயிர் உடலைவிட்டுப் பிரியும் கடைசி விநாடி வரை வாழ்க்கை நமக்கானதுன்னு கம்பனுடனான ஒவ்வொரு நாட்களும் புரியவெச்சது!''
007 "சினிமா, நாடகம்னு 24 மணி நேரப் பரபரப்புலயே திரிஞ்சதால, கல்யாணம் கட்டி முதல் 14 வருஷம் 'என்ன அம்மிணி'ன்னு என் சம்சாரத்துக்கிட்ட ஆசையா, பாசமா ஒரு வார்த்தைபேசினது இல்லை. அத்தனை வருஷம் கழிச்சு திடீர்னு ஒரு நாள் அந்தம்மா ஞாபகம் வரவும் அவங்க பிறந்த நாளுக்கு ரகசியமா ஒரு சேலை வாங்கிக் கொடுத்தேன். 'என்ன இது புதுசா?'ன்னு கேள்விகேட்டவங்க, அந்தப் புடவையைக் கட்டிக்கவே இல்லை. 'இத்தனை வருஷம் எப்படி இருந்தீங்களோ... அப்படியே இருங்க'ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு மூஞ்சில அடிச்ச மாதிரி ஆச்சு! 'ச்சே... இந்தம்மா இல்லேன்னா, வீட்டையும் குழந்தைகளையும் இவ்வளவு அழகா, பொறுப்பா யார் பார்த்துட்டு இருந்திருப் பா'ன்னு ஆரம்பிச்ச யோசனை அப்படியே பல திசைகளில் பயணிக்குது.
ஒரு பெண் தன் ஆயுள் முழுக்க தந்தையை, கணவனை, மகனைன்னு யாராவது ஒரு ஆணைச் சார்ந்து இருக்கணும்னு சொல்வாங்க. ஆனா, நல்லா கவனிச்சுப் பாருங்க... அத்தனை ஆண்களும் தங்கள் வாழ்க்கையைக் கழிக்க தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ ஏதோ ஒரு வடிவில் பெண் தேவைப்படுகிறாள். பூமி இல்லாம வாழ்க்கை சாத்தியமில்லைய்யா... அது போலத்தான் பெண்களும்!''
|