2009 பாதிக்கும் மேல் கரைந்துவிட்ட இன்றைய நாளில், இணையம் 2.0-ன் உத்வேகம் குறைந்தபாடில்லை. 2.0-ல் இன்னும் பல நூறு புதிய பயன்பாடுகள் (applications) வரும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. அவற்றில் சில ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற கில்ல ராகவும் இருக்கலாம்.
ஆனால், இணையம் 3.0 என்ற அடுத்த யுகத்துக்கு இப்போதே அடித்தளம் இடப்பட்டுவிட்டது. குறிப்புச் சொற்கள் எனப்படும் Keywords தகவல் சுரங்கமாக இருக்கும் இன்றைய இணையத்தின் உயிர்நாடி. கூகுளின் அடிப்படையான கூகுள்பாட் என்ற ரோபாட் இணையம் எங்கும் உலவி குறிப்புச் சொற்களுக்கான தகவல்களைக்கொண்டு இருக்கும் வலைத்தளங்களைத் தேடிக் கண்டுபிடித்துவைத்து, நீங்கள் தகவல் தேட உதவுகிறது. ஆனால், இதில் இருக்கும் மிகப் பெரிய குறைபாடு, குறிப்புச் சொற்களை தரம் பிரித்து அர்த்தப்படுத்திக்கொள்ள இன்றைய இணையத்தால் முடியாது. விடுமுறை உதாரணத்தையே தொடரலாம். ஆக்ரா சென்று தாஜ்மகாலைப் பார்ப்பது என முடிவு செய்து, அதைப் பற்றிய விரிவான தகவல்களைப் பெறவிரும்பி,
'தாஜ்மகால் விடுமுறை' என கூகுளில் சொடுக்கினால், தாஜ்மகாலுக்கு விடுமுறைக்குச் செல்வது பற்றிய தகவல்கள்கொண்ட வலைத்தளங்களுடன், கடந்த தீபாவளி விடுமுறையின்போது தாஜ்மகால் தேநீர் பருகிய வலைப்பதிவரின் தளமும் தேடல் பதிலாக வரலாம். காரணம் சிம்பிள், தாஜ்மகால் நினைவுச் சின்னமா, தேநீரா என்பதை வித்தியாசப்படுத்திப் பார்க்க இன்றைய இணையத்தால் முடியாது. அதைப் பொறுத்தவரை 'தாஜ்மகால்' என்பது ஒரு குறிப்புச் சொல். தட்ஸ் ஆல்!
இணையம் இப்படியே குறிப்புச் சொற்களால் கட்டப்படும் மீடியாவாக இருந்துவிட்டால், அதன் பலன் இன்னும் சில ஆண்டுகளில் முடிந்துபோகும். ஆனால், இணையத்தில் நடந்துவரும் சில முன்னேற்றங்களை ஒருங்கிணைத்தால், அதன் வலிமை மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவர இயலும்.
இணையத்தின் கட்டமைப்பு கணினிகளாலும், தொலைத்தொடர்பு இணைப்புகளாலும் ஆனது என்றாலும், இணையத்தின் நோக்கம் பயனீட்டாளர்களுக்குத் தகவலைத் தொகுத்துக் கொடுப்பது. மலைமலையாகக் குவிந்திருக்கும் டேட்டாவிலிருந்து தகவல்களைப் (Information) பகுத்துப் பிரித்தெடுக்க வலைத்தளங்கள் தமக்குள் முதலில் டேட்டா பரிமாறிக்கொண்டு, அதிலிருந்து தகவலைத் தொகுக்க வேண்டும். இணையத்தில் பிரபலமாகிவரும் இணைய சேவைக் கூறுகள் (Web Services) இதைச் சாத்தியமாக்கும்.
மனித மனம் சிந்திக்கும் முறைகளுக்கு இணையாக இணையத்தையும் கொண்டுவந்தால், அதன் பயன் பல மடங்கு அதிகரிக்கும். பார்க்கும், கேட்கும், உணரும் விஷயங்களில் இருந்து கிரகிக்கும் டேட்டாவைத் தொகுத்துக்கொண்டே போவதால்தான் மனித மனம் சிந்திப்பதில் செழுமை அடைகிறது. Meta-data என அழைக்கப்படும் டேட்டாவைப் பற்றிய டேட்டாவை, இணையம் திறமையாகக் கையாளத் தொடங்கியிருப்பதைச் சமீபத்தில் வெற்றியடைந்த வலைத்தளங்கள் காட்டுகின்றன. உதாரணத்துக்கு, Tag-ging. ஒருவர் அப்லோட் செய்யும் புகைப்படத்தின் பல்வேறு பகுதிகளை Tagging செய்ய, அந்தப் படத்தைப் பற்றிய 'அறிவு' அதிகரிக்கிறது.
நீங்கள் தயாரோ இல்லையோ, 'Semantic Web', 'Ontology' என்றெல்லாம் காபி, பிஸ்கட் சகிதம் குறுந்தாடியைத் தடவியபடி தியரிட்டிக்கலாகப் பேசிக்கொண்டு இருக்கும் கான்செப்ட்டுகளின் பிராக்டிகல் செயலாக்கம் இணையம் 3.0 விரைவிலேயே வந்துவிடும்.
|