Published:Updated:

நாயகன் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

நாயகன் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்


08-07-09
நாயகன் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
நாயகன் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
நாயகன் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
அஜயன் பாலா
நாயகன் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

சென்ற இதழ் தொடர்ச்சி...

'எல்லாக் காலத்திலும் படைப்புத் தொழிலுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு சிறுபான்மைக் கூட்டம்தான் சமூகத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அழைத்துச் செல்கிறது!'

-மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

நாயகன் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

ன்று பேருந்தில், ரோஸா பார்க்ஸ் எனும் கறுப்பினச் சகோதரிக்கு வெள்ளை இன போலீஸாரால் நிகழ்த்தப்பட்ட அவமானம்தான் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் எனும் மாமனிதனை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.

அப்படி அவர் செய்த காரியம் என்ன, அவர் செய்த தியாகம் மற்றும் புரட்சி எத்தகையது போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்வதற்கு முன், அமெரிக்க நாட்டில் கறுப்பின மக்களின் வரலாற்றைச் சற்று பார்ப்போம்.

1492-ல் ஒரு கோடைக்கால காலைப் பொழுதில் ஸ்பெயின் தேசத்தில் இருந்து மூன்று கப்பல்களுடன் புறப்பட்டார் கொலம்பஸ். அவரது எண்ணத்தில் இருந்த தேசம் இந்தியா. அங்குதான் செல்வம் கொழித்துக் கிடக்கிறது. தங்கம், முத்து, வெள்ளி இவற்றுக்கு அங்கு பஞ்சமே இல்லை. மேலும், இயற்கையின்நல்ல விளைச்சல் வேறு. இவை எல்லாம் கேள்விதானே ஒழிய, இந்தியா எந்தத் திசையில் இருக்கிறது என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. இப்படியாகப் பயணப் பட்ட கொலம்பஸ் பல நாட்கள் அங்கும் இங்குமாகக் கடலில் தேடி அலைந்ததுதான் மிச்சம். உடன் வந்த பயணிகள் கொலம்பஸைக் கடுமை யாகத் திட்டத் துவங்கினர். உடனே, ஸ்பெயி னுக்கு கப்பலைத் திருப்பும்படி கட்டளையிட்டனர். ஆனால், கொலம்பஸோ எப்படியும் இந்தியாவைக் கண்டுபிடித்தே தீருவது என்ற வெறியுடன் இருந்தார். இந்த நிலையில்தான் தொலைவில் பச்சைப் பசேல் என ஒரு நிலப்பரப்பு தெரிந்தது. கையில் இருந்த தொலைநோக்குக் கருவியால் அதை ஆவலுடன் பார்த்த கொலம்பஸ், 'கண்டுபிடித்துவிட்டேன் இந்தியாவை... கண்டுபிடித்துவிட்டேன்...' என உற்சாகத்தில் கூவத் துவங்கினார்.

கப்பல் கரையில் ஒதுங்கியதும், கூட்டம் கூட்டமாக அவர்களை நோக்கிப் பழங்குடிகள் வந்தனர். கொலம்பஸின் ஸ்பானிஷ் வீரர்களின் துப்பாக்கிகளுக்கு முன் பழங்குடிகளின் வில்லும் அம்பும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதன்பிறகுதான் கொலம்பசுக்குத் தெரிய வந்தது, தான் வந்திருப்பது இந்தியா இல்லை என்று. இப்படி இந்தியாவைக் கண்டுபிடிக்கும் ஆசையில் கொலம்பஸ் கண்டுபிடித்த தேசம்தான் அமெரிக்கா.

கொலம்பஸ் அப்போது முதன்முதலாக இறங்கிய இடம், இப்போது மேற்கிந்தியத் தீவில் இருக்கும் ஜமைக்கா. தொடர்ந்து, அடுத்தடுத்த தீவுகளுக்குள் நுழைந்த கொலம்பஸ், ராணிக்குத் தகவல் அனுப்பினார். கப்பல் கப்பலாகஸ்பானி யர்கள் வந்து இறங்கினர். கொலம்பஸ் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பழங்குடிகளை ஈவு இரக்கம் இன்றி வெட்டிச் சாய்த்தார். ஹிட்லருக்கு முந்தைய வரலாற்றின் கொடுங்கோலன் கொலம்பஸாகத்தான் இருக்க முடியும்.

ஒருவழியாக, அந்நிலத்தின் பூர்வகுடிகளை விரட்டி அடித்த பின், முதலில் ஸ்பானியர்கள் தென் அமெரிக்கா முழுவதும் ஆக்கிரமித்தனர். இதனால் அந்தப் பகுதி ஸ்பானிய அமெரிக்கா என்றே அழைக்கப்பட்டது. பிற்பாடு வந்த போர்ச்சுகீசியர்களும் பிரிட்டிஷ் தேசத் தவர்களும் வடக்குப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாகக் குடியமர்ந்தனர். பரந்த அந்தச் செழிப்பான நிலப்பரப் பைப் பண்படுத்தி விளைநிலமாக மாற்றவும், அப்படி மாற்றப்பட்ட பண்ணைகளில் வேலை செய்யவும் நன்கு உழைக்கக்கூடிய ஆட்கள் தேவைப்பட்டனர். அப்போதுதான் ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் ஞாபகம் ஐரோப்பியர்களுக்கு வந்தது. கைகளில் துப்பாக்கியுடன் ஆப்பிரிக்காவை நோக்கிக் கப்பல்கள் புறப்பட்டன.

துப்பாக்கி முனையில் கறுப்பினப் பழங்குடிகள் கூட்டம் கூட்டமாகக் கை, கால்கள் கட்டப்பட்டு விலங்குகளைப் போல் கப்பல்களில் ஏற்றப்பட்டனர். அவர் கள் மேற்கு இந்தியத் தீவுகளில் இறக்கப்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்குப் பிரித்துக்கொண்டு செல்லப்பட்டனர். அமெரிக்க வீதிகளில், சந்தைகளில் ஆடு, மாடுகளைக் கயிறு கட்டி விற்பது போல் நிற்க வைக்கப்பட்டு, 'அடிமைகள்... அடிமைகள்' எனக் கூவிக் கூவி விற்கப் பட்டனர். பண்ணை வேலைக்கு ஆட்களுக்காகக் காத்திருந்தவர்கள் அடிமைகளைத் தொட்டுப் பார்த்து, எலும்பு மற்றும் தாடைகளைப் பிடித்துப் பார்த்து நல்ல விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

வீட்டுக்கு அழைத்துச் சென்றதும் முதல் வேலையாக வீட்டு எஜமானரின் பெயரை அந்த அடிமையின் உடம்பில் முத்திரையாகச் சூடுவைத்தனர். பிற்பாடு தப்பித்தாலும், ஆடு மாடுகளைத் தேடிப் பிடிப்பது போல அடையாளம் கண்டுபிடிக்கத்தான் இந்த ஏற்பாடு. அந்த அடிமைகள் நாளுக்கு 20 மணி நேரம் வேலை செய்தனர். பெண் அடிமைகள் எஜமானர்களின் பாலியல் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டியதாக இருந்தது. இப்படிக் காலம் காலமாக அடிமையாக வாழ்ந்த அந்தக் கறுப்பினத்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 300 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் உயர்ந்தது.

இந்தச் சூழலில் அரசியல் அமைப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1789-ல் அடிமை முறையை முழு வதுமாக ஆதரித்துச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இதை எதிர்த்துக் கறுப்பின மக்களிடையே விடுதலைக் குரல்கள் ஒலிக்கத்துவங்கின. ஆங்காங்கே கிளர்ச்சிகள் எழுந்தன. உடனுக்குடன் துப்பாக்கிகள் வெடித்துக் கிளர்ச்சியாளர்கள் பிணமாக்கப்பட்டனர். இச்சமயத் தில்தான், ஒப்பற்ற தலைவன் ஆபிரஹாம் லிங்கன் தோன்றினார். சாதாரண செருப்புத் தொழிலாளியின் மகனான ஆபிரஹாம் லிங்கன், வாழ்வில் படிப்படியாக வளர்ந்து, இறுதியில் 1860-ல் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்தார். அடிமை முறை எத்தனை இழுக்கானது என அமெரிக்கர்களுக்கு உணர்த்தினார். அதனை ஒழித்தே தீருவேன் என்று சபதம் செய்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் முதல்கட்டமாக அடிமைச் சட்டத்தை ஒழிக்கவும் முயற்சி செய்தார். இதனால் அவருக்குக் கடும் எதிர்ப்புகள் தோன்றின. தெற்குப் பகுதியில் தனி அரசாங்கமே தோன்றும் அளவுக்கு இப்பிரச்னை பூதா கரமானது. அது உள்நாட்டுக் கலவரமாகவும் வெடிக்கத் துவங்கியது. அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உள்நாட்டுக் கலவரத்துக்குப் பிறகு, 1865-ல் அடிமை முறையை முழுவதுமாகச் சட்டம் மூலம் ஒழித்துக் கட்டினார் லிங்கன். அப்படி ஒழித்துக்கட்டிய சில நாட்களிலேயே அதே ஆண்டில் ஏப்ரல் 14-ம் நாள் இன வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆபிரஹாம் லிங்கன் சட்டம் மூலம் அடிமை முறையை எடுத்தாலும், இனவெறி மட்டும் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்தது. குலுக்ஸ் கான் என்ற வெள்ளைக் குழுவினர், கறுப்பினச் சகோ தரர்களுக்கும் வெள்ளை இனப் பழங்குடியினருக்கும் எதிராக கொடூரமான வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இனத்தின் பேராலும் மொழியின் பேராலும் மக்கள் அநீதிக்கு ஆட்படுகிறபோதெல்லாம் பாதிக்கப்பட்ட, அல்லது துயரங்களால் வஞ்சிக்கப்பட்ட சமூகத்திலிருந்து தலைவன் ஒருவன் உதயமாவான். அவன் மோசஸ் போல, ஸ்பார்ட்டகஸ் போல, கார்ல் மார்க்ஸ் போல, பெரியார் போல அம்பேத்கர் போல உலகில் எல்லா காலத்துக்குமான வெளிச்சத்தை உருவாக்குவான். அப்படிப்பட்டவராக 1929-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் நாள் ஒரு செவ்வாய்க்கிழமை அதிகாலை, அமெரிக்காவின் அட்லாண்டாவில் பிறந்தவர்தான் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.

 
நாயகன் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
-சரித்திரம் தொடரும்
நாயகன் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்