12.8.09 இதழ் தொடர்ச்சி...
'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
இப்படி ஒரு வெற்றியை மார்ட்டின் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. மாண்ட் கோமரி நகரப் பேருந்துகள் அனைத்துமே அன்று சொல்லிவைத்தது போல் காலியாக ஓடின. எங்கு பார்த்தாலும் கறுப்பின மக்கள் கால்நடையாக நடந்து சென்றனர். மக்களிடையே காணப்பட்ட இந்த ஒற்றுமை உணர்வு, மார்ட்டின் லூதர் கிங்குக்கு ஆச்சர்யத்தையும் உற்சாகத்தையும் அளித்தது.
அன்று மாலை சர்ச் கூட்டத்துக்கு புறப்படுவதற்கு முன் மார்ட்டினுக்குள் ஒருவிதப் பதற்றம். தான் துணிந்து விடுத்த அறிவிப்புக்கு முதல் நாள் கிடைத்திருக்கும் வெற்றி மகத்தானது. ஆனால், இது நீடிக்குமா? தொடர்ந்து எதிர்ப்புகள் ஏற்படுமா? நம்மால் சமாளிக்க முடியுமா? இப்படிப் பல கேள்விகள் அவரது சிந்தனையைச் சுற்றிச் சுழன்றன. காரில் போகும்போது கலக்கமாக இருந்தவருக்கு சர்ச்சுக்கு அருகே செல்ல முடியவில்லை. கட்டுக்கடங்காத கூட்டம் அவரை வரவேற்கக் காத்திருந்தது. கண்களில் நீர்வழிய மேடையேறினார்.
''இது முடிவல்ல... ஆரம்பம்!'' - மார்ட்டின் தன் முழக்கத்தைத் துவக்கினார். கைகளில் குறிப்புகள் எதுவும் இல்லாமல் வெள்ளமென வார்த்தைகள் சீறிப் பாய்ந்தன. ''இந்தப் போராட்டம் நமக்கானது அல்ல. நம் முன்னோர்கள் அனுபவித்த அவமானங்களுக்கானது. நமது உறுதிதான் நமது வெற்றி! பேருந்துகளில் நமக்கான உரிமைகள் முழுமையாக வழங்கப்பட்டாத வரை காலவரையற்ற இந்தப் போராட்டம் தொடரும்'' என அவர் அறிவிக்க, அதற்குப் பேராதரவு தெரிவிப்பது போல அனைவரும் கைகளை இடைவிடாமல் தட்டி ஆர்ப்பரித்தனர்.
கூட்டத்தின் இறுதியில் மாண்ட் கோமரி போராட்டக் குழுவின் தலைவராக மார்ட்டின் லூதர்கிங்கை நிக்சன் எனும் பாதிரியார் அறிவிக்க, அனைவரும் அதனை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் போராட்டக் குழுவினர் பேருந்து நிறுவனங்களுக்கு கோரிக்கைகள் சிலவற்றை வாசித்தனர்.
|