ஆதிநாட்களில் அசுரர்களில் பலர் அரன் மேல் அடங்காப் பிரியம்கொண்டு இருந்தனர். அவர்களில் பாணாசுரன் என்பவன் கைலாயநாதனை நோக்கிக் கடுந்தவம் இருந்தான். ஈசன் அவன் முன் எழுந்தருளினார். வேண்டும் வரம் யாது என வினவினார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர, வேறு யாரும் தன்னைப் போரில் வெல்லக் கூடாது என்று பாணாசுரன் பரமேஸ்வரனிடம் வரம் கோரிப் பெற்றான்.
அதன் பின் அவன் தேவர்களுக்குத் தீங்குஇழைத்தான். துறவிகளைத் துன்புறுத்தினான். குவலயத்தாரையும் கொடுமைக்கு ஆளாக்கினான். அல்லல்பட்டவர்கள் அன்னை பராசக்தியின் அடிபணிந்தனர். அசுரனை அழித்து அகிலத்தைக் காத்து அருளும்படி வேண்டினர்.
மூன்று கடல்கள் சங்கமிக்கும் முகப்பில் அன்னை ஒரு கன்னியாக அவதரித்தாள். தன்னைவிட்டுப் பிரிந்த தனது காதல் மனைவி, கடலோரத்தில் கன்னியாக உதித்து காலம் கழிப்பதை அறிந்தார் கைலாயநாதன். தனது மண விழாவை மக்கள் மறுபடி கண்டுகளிக்க வேண்டும் என்று எண்ணம்கொண்ட ஈஸ்வரன், கன்னியை முறைப்படி கரம்பற்ற, தேவர்களை அழைத்து ஆலோசித்து, நல்லதொரு நாள் குறித்தார். கயிலைநாதனை மணக்க கன்னி தேவியும் களிப்புடன் சம்மதித்தாள்.
அம்பிகைக்குத் திருமணத்தில் நாட்டம் வந்துவிட்டால், அசுரனை அழிக்கும் எண்ணம் ஆவியாகிவிடுமோ என்று தேவர்கள் பயந்தனர். இருந்தும், ஈசனிடம் இதுபற்றிப் பேசும் துணிவு எவருக்கும் இல்லை. நாரதரோ அமரர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நல்லதொரு திட்டம் தீட்டிஇருப்பதாகக் கூறி அவர்களை ஆற்றுப்படுத்தினார்.
ஈஸ்வரியின் சார்பாக ஈசனைச் சந்தித்தார் நாரதர். அவரை மணப்பதற்கு அம்பிகை இரண்டு நிபந்தனைகள் விதித்திருப்பதாகச் சொன்னார். முதல் நிபந்தனையாக, கண் இல்லா தேங்காய், காம்பு இல்லா மாங்காய், நரம்பு இல்லா வெற்றிலை, கணு இல்லா கரும்பு, இதழ் இல்லாத பூ ஆகியவற்றைச் சீதனப் பொருட்களாகக் கொண்டுவர வேண்டும். இரண்டாவது நிபந்தனையாக, சூரிய உதயத்தில் நிகழும் திருமணத்துக்கு உதயத்துக்கு ஒரு நாழிகை முன்பாகவே மாப்பிள்ளை மணவறைக்கு வந்து சேர வேண்டும்.
|