இதில் என்ன சந்தேகம்?!
எல்லோரும் தமிழில்தான் பேசினார்கள். கரிகால் சோழன் காலத்தில் மேலும் தூய தமிழில் உரையாடி இருக்க வேண்டும். போகப் போக, வடமொழியின் ஊடுருவல் நிகழ்ந்து தமிழில் கலப்படம் ஏற்பட்டது. பிற்காலச் சோழர்கள் தமிழுக்குள் ஊடுருவிவிட்ட சம்ஸ்கிருத வார்த்தைகள் கலந்த தமிழில் பேசினார்கள். (அட்சரம், ஆகாசம், ஹாஸ்யம் போன்ற சம்ஸ்கிருதத் தமிழ் வார்த்தைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூடப் பயன்படுத்தப்பட்டன). எத்தனை தமிழ்ப் பாடல்கள் பண்டைய தமிழ் மன்னர்களைப் போற்றிப் பாடப்பட்டன! சோழர்களின் ஆட்சியில் நடந்த பெருமையான நிகழ்ச்சிகளை விளக்கிச் சொல்லும் 'மெய்க்கீர்த்தி'கள் 'இனிய தமிழ் அகவற்பாவில்' பொறிக்கப்பட்டதாக தமிழ் வரலாற்று மேதை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். ஆனால், அகம்-புறம் பாடல்களை இப்போது படிக்கும்போது சாமான்யர் களாகிய நமக்கு அர்த்தம் புரிய சிரமமாகவே இருக்கிறது. கரிகால் சோழனைப் போற்றி ஒரு புலவர் பாடுகிறார்...
குறும்பறை பயற்றுஞ்
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் - (அகம்)
(அதாவது, மலைகள் மீது ஆடுகளை மேய்க்கும் குறும்பர் குடும்பங்களை கரிகால் சோழன் ஆதரவோடு காப்பாற்றியது பற்றிய பாடல் இது!)
கரிகால் சோழன் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு தலையாட்டினாரா என்று நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது!
|