கிஷோர்: ''எப்பவுமே கூட இருக்கிறவங்களுக்கு ஏதாவது அசம்பா விதம் நடந்திருமோன்னு பயமாவே இருக்கும். அப்பப்போ ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்களுக்கு போன் பண்ணி விசாரிச்சுட்டே இருப்பேன்!''
சம்பத்: ''உயரம்னா எனக்குப் பயம். உயரமான மாடியில ஃபைட் ஸீன்னா பயத்துலேயே பஞ்சர் ஆகிருவேன். இதனாலேயே பல மாடி வீட்டு ஃபிகர்களை மிஸ் பண்ணியிருக்கேன் தலைவா. ஃப்ளைட்ல போகும்போது ஜன்னல் ஸீட்னா டரியல்தான். அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன். ஆனா, அந்தப் பயத்தை வெளியில் காட்டிக்க மாட்டேன். ஏன்னா, வில்லன் பயப்படக் கூடாதுல்ல!''
சுமன்: ''அரசியல், அரசியல்வாதிகள்னா பயம். 'சிவாஜி'யில் நான் பண்ணின ஆதிகேசவன் கேரக்டர் மாதிரி ஊரை அடிச்சு உலையில் போடும் பல அரசியல்வாதிகளின் வில்லத்தனம் பத்திக் கேள்விப்படும்போது பயமா இருக்கும்!''
சண்முகராஜன்: '' 'விருமாண்டி'யில மாட்டின காக்கிச் சட்டையைக் கழட்டவே மாட்டியா'ன்னு எல்லோரும் கிண்டல் பண்ற அளவுக்கு போலீஸ் வேஷம் போடுறேன். ஆனா, எனக்குச் சின்ன வயசில் இருந்து போலீஸ்னா பயம். விறைப்பான போலீஸை வழியில பார்த்தா லத்தியைச் சுழட்டி அடிக்கப் போறாரோன்னு அடிவயிறு தன்னால கலங்கும்!''
'காதல்' தண்டபாணி: ''படத்துல 'அவனை வெட்டுடா.. இவனைக் குத்துடா'ன்னு கெத்தா வசனம் பேசிருவேன். ஆனா, சின்ன வயசுல இருந்து அரிவாளைக் கண்டாலே எனக்கு ஈரக்கொலை நடுங்கும். 'அரிவாளால் துள்ளத் துடிக்க வெட்டிக் கொலை'ங்ற நியூஸைப் படிச்சாக்கூட ராத்திரி கனவுல யாரோ அரிவாளால துரத்துற மாதிரியே இருக்கும்!''
|