Published:Updated:

என் ஊர்!

மாவீரன் தடம் பதித்த மண்!

என் ஊர்!

மாவீரன் தடம் பதித்த மண்!

Published:Updated:
 ##~##
பெ
ரியார் திராவிடர் கழகத் தலைவர். தமிழ் உணர்வாளர். ஈழத் தோழர். இனிய தமிழர்.

''மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகில்  உக்கம்பருத்திக்காடுதான் நான் பிறந்த மண். ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே நகரப் பேருந்து வந்து போகும் குக்கிராமம். இனிப்பும் புளிப்பும் கலந்த மிட்டாயாக என்னுடைய ஆரம்பப் பள்ளி நாட்களை அங்குதான் சுவைத்தேன்!

ஊருக்கு நதி அழகு. அதுவும் எங்கள் கிராமத்தில் தண்ணீர் சலங்கை சலசலக்க பேரழகி காவிரி ஓடினாள். அவள்கூடவே நாங்களும் ஓடுவோம். அவள் இருப்பினால் எங்கள் ஊருக்குள் எட்டிப் பார்க்கத்  தாகத்துக்குப் பயம். கிணறு வெட்டினால், 10 அடியில் நன்னீர் கிடைக்கும். வயல்கள் எங்கும் கரும்பு, மஞ்சள், வாழை என்று எல்லாம் பசுமை. ஊருக்கு வெளியே செம்மலை, கத்திரி மலைகளும் பசுமை போர்த்தி இருக்கும்.

என் ஊர்!

1984-ம் ஆண்டு. விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் நடத்த தமிழ்நாட்டில் இடம் தேடிக்கொண்டு இருந்தார் கள். கும்பாறப்பட்டி யில் இருக்கும் எங்கள் தோட்டம் அவர்களுக்குப் பிடித்துப்போனது. அங்கேதான் மாத்தையா, பொன்னம்மான், புலேந்திரன், யாழ்ப்பாணம் தளபதி ராதா ஆகியோர் நூற்றுக்கணக்கான புலிகளுக்குக் களத்தில் சமராட ஆயுதப் பயிற்சி கொடுத்தார்கள்.

புதிய ஆயுதங்கள் எது வாங்கினாலும், பயிற்சி நடக்கும் இடத்தில்தான் சோதனை நடத்துவார்கள்.  ஒரு முறை புதிதாக வாங்கிய 'எம்.60’ கிரைனைட் லாஞ்சரை சோதனை செய்ய மாவீரன் பிரபாகரன் எங்கள் கிராமத் துக்கு வந்தார். அந்த கிரைனைட் லாஞ்சர் 300 மீட்டர் தூரம் பாய்ந்து சென்று வெடிக்கும் திறன்கொண்டது. ஆனால், அன்றைய சோத னையில் 10 மீட்டர் தொலைவிலேயே வெடித்து சிதறி, அதில் ஒரு கூரிய சிதறல் பிரபாகரனின் தொடையில் பாய்ந்துவிட்டது. நண்பர் சின்ன ஜோதி என்பவர் அவரைத் தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு, பிரதான சாலை வரை ஓடி வந்தார். பின்பு, சேலம் மருத்துவமனையில் சேர்த்தோம். அந்தக் காலகட்டத்தில் பல முறை இந்த மண்ணில் மாவீரனின் கால் தடம் பட்ட தால், இந்த மண்ணை புலியூர் என்றே அழைத்தார்கள்!

என் ஊர்!

எங்கள் கிராமத்தின் ஆற்றுக்கு மறு கரையில் இருக்கிறது செங்கப்பாடி கிராமம். மறைந்த வீரப்பனின் சொந்த ஊர். எங்கள் குடும்பத்துக்கும் வீரப்பனின் குடும்பத்துக்கும் அந்தக் காலத்தில் இருந்தே நல்ல நட்பு. ஆனால், வீரப்பன் சிறு வயதிலேயே காட்டுக்குள் சென்றுவிட்டதால், பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோதுதான் வீரப்பனை நேரில் சந்தித்தேன். ஊரைப்பற்றி யும், குடும்பத்தைப் பற்றியும் நிறையப் பேசி னோம். என்னைப் பொறுத்தவரை மரியாதை தெரிந்த மனிதாபிமானி வீரப்பன்.

நான் வளர்ந்த கிராமம் கொளத்தூர். சுற்றுவட்டாரக் கிராமத்தினர் எல்லா நல்லது கெட்டதுக்கும் கொளத்தூருக்கு வந்தாக வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கொளத்தூரில் சந்தை கூடும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடைகளைத் தூக்கிக் கொண்டு சந்தைக்குப் படை எடுப்பார்கள். ஒதுங்கக்கூட இடம் இருக்காது. டவுசரை மாட்டிக்கொண்டு அம்மாவுடன் சந்தைக்கு வந்துள்ளேன். இப்போது கிராமத்தில் நிறையக் கடைகள் முளைத்துவிட்டன. சந்தையில் கூடிய கூட்டமும் குறைந்துவிட்டது!

இயக்க வேலைகளுக்காக நான் அடிக்கடி வெளியூர் போக வேண்டும் என்பதால், மேட்டூ ருக்குக் குடி மாறினேன். மேட்டூர் முழு நகரம் இல்லை. தொழிற்சாலைகள் நிறைய இருக்கும். புகைக்கும் புழுதிக்கும் பஞ்சம் இல்லை. எப்போதும் ஏதாவது ஓர் ஆலையின் பரபரப்பு ஓசை மிரட்டிக்கொண்டே இருக்கும். அந்த இரைச்ச லையும் தாண்டி காவிரியின் முணுமுணுப்பு காதுக்கு இதம். வெளியூர்களில் இருந்து புலம் பெயர்ந்து இங்கே வந்தவர்கள்தான் அதிகம். எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும் என்பதால் இன்றும் நம்பி வருகிறார்கள்.

ஆனாலும், பிறந்த மண்போல எதுவும் வாய்க்காது என்பதால், நேரம் கிடைக்கும் போது என் கிராமத்துக்குக் கிளம்பிவிடுவேன். எப்போதும் மனதுக்கு நிறைவைத் தருவது எங்கள் கிராமம்தான். என் உயிரும் உணர்வும் கலந்த இடம் அது!''

- கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: க.தனசேகரன்