எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்

சாவைச் சுமந்த பயணம்

மீனம்பாக்கம் செல்லும் வழியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் அந்தக் காட்சியினைப் பார்த்தேன். ஸ்கூட்டரில் வந்துகொண்டு இருந்த ஒரு கணவன் - மனைவி, அவர்களது இரண்டு பிள்ளைகள் நால்வரும் பாலத்தின் ஓர் இடத்தில் வண்டியை ஓரமாக நிறுத்தி, உற்சாகத்துடன் கை அசைத்தபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

என்ன வேடிக்கை பார்க்கிறார்கள் என்று திரும்பிப் பார்த்தபோது, விமானம் தரை இறங்கிக்கொண்டு இருந்தது. ஆகாயத்தில் விமானம் செல்லும்போது வியப்போடு பார்ப்பவர்களும், அதைக் கூடவே துரத்திச் செல்லும் சிறுவர்களும் என்றும் இருப்பார்கள் போலும். இந்த வியப்பை ரயிலும், கார்களும், அதிநவீனப் பேருந்துகளும் இழந்துவிட்டன. விமானம் இன்றைக்கும் வியக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

விமானம் இந்தியாவுக்கு வந்த கதை சுவாரஸ்யமானது. பாட்டியாலா மகாராஜா 1910-ல் இந்தியாவுக்கு விமானத்தை அறிமுகப்படுத்துவதற்காக பௌல்ஸ் என்ற ஆங்கிலப் பொறியாளரை அனுப்பி, பார்மென் என்ற குட்டி விமானத்தை பிரான்ஸில் இருந்து வாங்கி வரச் செய்தார். 1910 டிசம்பர் 11-ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் கிளம்பியது. முதல்முறையாக விமானத்தில் ஏறிப் பறந்த இந்தியர், காசி மகாராஜாவின் மகன். ஹென்றி பெக்கே என்ற விமானி அந்த விமானத்தை ஓட்டினார். சென்னையில் 1911 பிப்ரவரி 18-ம் தேதி விமானம் பறந்தது. அந்தக் காட்சியைப் பார்க்கப் பொதுமக்கள் திருவிழா போலத் திரண்டு இருந்தார்கள். அன்று துவங்கிய வியப்பு இன்றும் அடங்கவே இல்லை.

மகாத்மா காந்தி விமானத்தில் பயணம் செய்தது இல்லை. விமானத்தில் செல்லும்படியான சந்தர்ப்பம் கிடைத்தபோதும் 'அது ஏழைகள் பயணம் செய்ய முடியாத வாகனம். எனக்கும் அதில் பயணம் செய்ய விருப்பம் இல்லை' என்று தவிர்த்திருக்கிறார் காந்தி. அவரது லண்டன் பயணம் கப்பலில்தான் நடந்தது. இந்தியா முழுவதும் ரயிலிலும் கார்களிலும்தான் பயணம் செய்திருக்கிறார். இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்யாத முதல் அரசியல்வாதி காந்தியாகத்தான் இருக்கக்கூடும்.

விமானத்தில் ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை யாவர் மனதிலும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அது ஒரு ரகசிய விருப்பம். விமானத்தில் பயணம் செய்யப் போகிறோம் என்றும், வயதை மறந்து பெரியவர்கள்கூட சிறுவர்கள் போலக் குதூகலம்கொள்கிறார்கள். விமானத்தில் போகிற ஆசை பலருக்கும் நிறைவேறாமலேயே போய்விடுகிறது.

ஆசைகள் எப்போதும் நாம் விரும்புவது போல நிறைவேறுவது இல்லைதானே. சிலரின் முதல் விமானப் பயணம் சாவின் காரணமாகவே சாத்தியமாகி இருக்கிறது. எனக்குத் தெரிந்த வீட்டில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான ஒரு சம்பவம் நடந்தது. சேலம் அருகில் உள்ள கிராமத்தில் தாய் இறந்துவிட்டார். மகன் மும்பையில் துறைமுகத் தொழிலாளியாக வேலை செய்துகொண்டு இருந்தான். மகனுக்கு போன் பேசி உடனடியாகக் கிளம்பி வரும்படி சொன்னார்கள். விமானத்தில் கிளம்பி வருவதைத் தவிர வேறு வழி இல்லை. அவனோ விமானத்தில் அதுவரை பயணம் செய்தவன் இல்லை. கையிலும் பணம் இல்லை.

விமானத்துக்கு எங்கே டிக்கெட் வாங்குவது... எப்படிப் போவது என எதுவும் தெரியவில்லை. இரண்டு நண்பர்கள் அவனுடன் விமான நிலையத்துக்குப் போயிருக்கிறார்கள். அம்மா இறந்து போன துக்கம் தாள முடியாமல், அவனை அறியாமல் கண்ணீர் வழிந்தபடியே இருக்கிறது. விமானத்தில் தன்னை ஏற்றிக்கொள்வார்களோ என்ற இனம் புரியாத குழப்பம். அன்று கிளம்ப இருந்த விமானத்தில் பயண வசதி கிடைக்கவில்லை. நண்பர்கள் போராடுகிறார்கள். சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் துக்கத்தைச் சொல்லி உதவி கேட்கிறார்கள்.

டிக்கெட் கிடைக்க வழியே இல்லை. துக்கம் தாள முடியாத மகன் சத்தமாகக் கதறி அழ ஆரம்பிக்க, ஒரு பயணி அவன் மீது அக்கறைகொண்டு எதற்காக அவன் அழுகிறான் என்று தெரிந்து, உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்து, தனது இருக்கையில் அவன் பயணம் செய்வதற்கு உதவும்படியாகக் கேட்டுக்கொண்டார். முடிவில் விமான நிறுவனமே அவனுக்காக ஓர் இருக்கையை ஏற்பாடு செய்தது.

விமானம் கிளம்பும் வரை அவனால் காத்திருக்க முடியவில்லை. பகட்டான விமான நிலையத்தின் கடைகள், மனிதர்கள் எதுவும் கண்ணில் படவில்லை. மனதெங்கும் துக்கம், கட்டுப்படுத்த முடியாத அழுகை. விமானத்தில் ஏறி உட்கார்ந்ததோ, அது கிளம்பியதோ எதுவும் தெரியவில்லை. விமான பணிப்பெண் எல்லோருக்கும் தருவது போல அவன் முன்னாலும் சாக்லேட்கள்கொண்ட தட்டினை நீட்டி எடுத்துக்கொள்ளச் சொல்கிறாள். அதைப் பார்த்தவுடன் அவனது துக்கம் இன்னமும் அதிகமாகிறது. வேண்டாம் என்று மறுத்தபடியே குனிந்து அழுகிறான். அருகில் இருந்த பயணிக்கு அவன் துயரம் தெரியவில்லை.

விமானம் நடுவானில் பறந்துகொண்டு இருக்கிறது. மேகங்கள் அவன் கண்ணில் படுகின்றன. சூரியன் ஒளிர்கிறது. ஆனால், மனது அது எதையும் ரசிக்கவில்லை. அவன் நினைவில், இறந்துகிடந்த அம்மாவின் உடலும் அதைச் சுற்றி அழும் சகோதரிகளும் மட்டுமே இருக்கிறார்கள். விமானம் தரை இறங்கி, வெளியே காத்திருந்த வாடகை காரில் ஏறும் வரை மும்பையில் இருந்து தான் எப்படி வந்தோம் என்ற தன் உணர்வே அவனுக்கு இல்லை.

அழுதபடியே ஊர் சென்று, தன் தாயின் இறுதிக் காரியங்களைச் செய்து முடித்தான். துக்கம் வடிந்து 15 நாட்களுக்குப் பிறகு மும்பை திரும்பும் நாளில், விமானத்தில் வந்த நினைவு அவனுக்குள் துளிர்விடுகிறது. சே! எத்தனை நாட்கள் விமானத்தில் போவதைப்பற்றிக் கனவு கண்டிருக்கிறோம். எத்தனை நண்பர்களை வழியனுப்பிவைத்துவிட்டு ஆசையோடு விமானத்தைப் பார்த்து நின்றிருக்கிறோம்; விமானத்தில் செய்த முதல் பயணம், அதை மறுபடியும் நினைத்துப் பார்க்க முடியாதபடி ஆகிவிட்டதே என்று புலம்பி இருக்கிறான்.

எளிய மனிதர்கள் பலருக்கும் முதல் விமானப் பயணம் சாவு வீட்டுக்கு வந்து சேர வேண்டிய அவசரப் பயணமாகவே அமைந்துவிடுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காசிக்குச் செல்வதற்கு நேரிடை விமான வசதி இல்லை என்பதால், டெல்லி சென்று அங்கிருந்து காசி செல்வது என்று கிளம்பினேன். டிசம்பர் மாதம் அது. அதிகாலை சென்னையில் இருந்து விமானம் கிளம்பி டெல்லிக்கு காலை எட்டரை மணிக்குச் சேர்ந்துவிடும். 10 மணிக்கு காசிக்குச் செல்லும் விமானம் கிளம்பும் என்பது திட்டம். ஆனால், அன்று டெல்லி நகரின் மீது கடுமையான குளிர். விமானம் தரை இறங்க முடியவில்லை. ஆகாயத்தில் சுற்றிக்கொண்டே இருக்கிறோம். பனிப் புகைக்குள் நகரம் முழ்கிப்போயிருக்கிறது. தரையோ, மரங்களோ தெரியாதபடி பனி அடர்ந்திருந்தது.

முதலில், ஒரு நகரின் மீது விமானம் சுற்றிக்கொண்டே இருந்தது வேடிக்கையாகத் தோன்றியது. ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் அதுவே அலுப்பூட்டத் துவங்கியது. ஒருவேளை, விமானம் தரை இறங்கத் தாமதம் ஆகும் என்று தெரிந்தால், வேறு ஏதாவது ஒரு விமான நிலையத்தில் இறக்கிவிடுவார்கள் என்று பயணிகள் பேசத் துவங்கினார்கள். ஆகாயத்தில் வெளிச்சம் ஒடுங்கியிருந்தது.

ஒரு மணி நேரம் டெல்லி நகரின் மீதே சுற்றி இருப்போம். முடிவில் ஆகாயத்தில் ஒரு துளை விழுந்தது போல சூரிய வெளிச்சம் தென்படத் துவங்கி, மெள்ள பனிப் புகை கலையத் துவங்கியது. கண்ணில் காட்சிகள் விழ ஆரம்பித்தன. பழைமையான டெல்லி நகரம் புகையும் பனியோடு பார்க்க அத்தனை அழகாக இருந்தது. விமானம் தரை இறங்கியபோது, காசிக்குச் செல்லும் விமானம் கிளம்பிப் போயிருந்தது.

''அதே விமான சேவை இரவு 10 மணிக்கு இருக்கிறது. அதுவரை காத்திருங்கள்!'' என்றார்கள். வேறு வழி இல்லை என்பதால், கையில் இருந்த புத்தகத்தை விரித்தபடியே ஓர் இருக்கை தேடி உட்கார்ந்தேன். அன்றுதான் விமான நிலையத்தை முழுமையாக அறிய நேர்ந்தது.

ஒவ்வொரு விமான நிலையமும் ஒரு தனி உலகம். அது எப்போதுமே பயம் கலந்த வசீகரமாக இருக்கிறது. காவலர்களின் முகங்கள் நம்மை உற்று நோக்குகின்றனவோ என்ற அச்சம் அடிமனதில் எழுகிறது. வந்து போகும் மனிதர்கள், ஏதேதோ நாடுகளில் இருந்து வந்து இறங்கும் பயணிகளின் முகங்கள், பரபரப்பான விமான நிலைய ஊழியர்கள், அவர்களின் அழகான சீருடைகள், வண்ணத்துப்பூச்சிகள் போலத் தாவிச் செல்லும் விமான நிறுவன யுவதிகள், அடுத்த விமானத்துக்காகக் காத்திருப்பவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், சுற்றுலாப் பயணிகள் என்று கலவையான உலகம். விமான நிலையங்கள் உலகெங்கும் ஒன்று போலவே இருக்கின்றன. அதன் நெருக்கடியும், நிமிடத்தில் மாறிவிடும் அதன் இயல்பும் புரிந்துகொள்ளப்பட முடியாதது.

ஒருநாள் முழுவதும் விமான நிலையத்தில் காத்துக்கிடந்தபோது ஸ்பீல்பெர்க் இயக்கிய 'தி டெர்மினல்' படம் நினைவில் வந்தபடியே இருந்தது. விமான நிலையத்தில் மாட்டிக்கொண்ட விக்டர் என்பவரைப் பற்றிய படம். டாம் ஹாங்ஸ் நடித்திருப்பார். மெக்ரம் ஹரிமி நாசர் என்ற இரானியருக்கு உண்மையாக நடந்த சம்பவமே இந்தப் படத்தின் ஆதாரக் கதை. நியூயார்க் விமான நிலையத்தில் செல்லுபடியாகாத ஒரு பாஸ்போர்ட்டுடன் மாட்டிக்கொண்டு வெளியேறிச் செல்ல முடியாமல், மொழி தெரியாமல் மாட்டிக்கொண்ட ஒரு மனிதனின் தவிப்பே இந்தப் படம்.

இரண்டு காரணங்களால் இந்தப் படம் மிக அற்புதமானது. ஒன்று, பெரு நகரங்களில் விமான நிலையத்தில் மாட்டிக்கொள்ளும் மனிதனின் அவஸ்தைகள் நிஜமாகப் படமாக்கப்பட்டு இருக்கின்றன என்பது. இரண்டாவது, இவ்வளவு சிரமப்பட்டு அந்த மனிதன் எதற்காக அமெரிக்கா வந்திருக்கிறான் என்ற காரணம். ஜாஸ் இசையின்

தீவிர ரசிகரான தன் அப்பா ஆசைப்பட்டார் என்பதற்காக, அவருக்கு விருப்பமான ஜாஸ் இசைக் கலைஞர்கள் ஒவ்வொருவராகத் தேடி, அவர்களது ஆட்டோகிராஃப் பெறுகிறான் விக்டர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த பென்னி கோல்சன் என்ற இசைக் கலைஞர் ஒருவர் மட்டுமே பாக்கி.

அவரிடம் ஒரு ஆட்டோகிராஃப் வாங்கினால், இறந்துவிட்ட அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிடலாம். இதற்காகவே அவன் அமெரிக்காவுக்குள் வர விரும்புகிறான். முறையான கடவுச்சீட்டு இல்லை என்று அரசாங்கம் அவனை அனுமதிக்க மறுக்கிறது. ஒன்பது மாத காலம் அவன் நியூயார்க் விமானநிலைய வளாகத்துக்குள்ளாகவே தங்கி வாழ்கிறான். அங்குள்ள மனிதர்களுடன் பழகுகிறான். சிறுசிறு வேலைகள் செய்கிறான். ஆனால், அமெரிக்காவுக்குள் நுழைய முடியவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அமெரிக்காவினுள் நுழைய அனுமதிக்கப்படுகிறான். அவசரமாக பென்னி கோல்சனைச் சந்தித்து ஒரு கையெழுத்து பெறுகிறான் விக்டர். மறு நிமிடம் சோர்வும் நீண்ட அலுப்புடன், தான் வீடு திரும்பப் போகிறேன் என்று டாக்ஸியில் ஏறி உட்காருவதோடு படம் நிறைவு பெறுகிறது.

எல்லாப் பயணங்களின் பின்னாலும் ஓர் ஆசை ஒளிந்திருக்கிறது. அதுதான் உந்தித் தள்ளுகிறது. சாதிக்கவைக்கிறது. 'பறவை, கிளைகளை நம்பி அமர்வதில்லை... தன் காலின் பலத்தில்தான் அமர்ந்திருக்கிறது!' என்று ஒரு முதுமொழி இருக்கிறது. பறவைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது பறத்தல் மட்டுமில்லை. அதன் இடைவிடாத பயணம், மழை, வெயில் பற்றிய முணுமுணுப்பு இல்லாமல் தடை தாண்டிப் போகும் அதன் முயற்சி. இயல்பு மாறாத அதன் களிப்பு யாவும்தான்!

சிறுது வெளிச்சம்!

கவிஞர்களின் புகழ்போற்றும் வகையில் சிலை அமைப்பது உலகெங்கும் இருக்கிறது. தமிழகம் அதில் ஒரு படி மேலே உள்ளது. பல முக்கியத் தமிழ்க் கவிஞர்களுக்கு கோயில்கள், சந்நிதிகளே இருக்கின்றன.

திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். அவர் புகழ் போற்றும்படியாக வள்ளுவர் கோட்டமும் கன்னியாகுமரியில் நெடிதுயர்ந்த சிலையும் இருப்பதைப் பலரும் அறிவார்கள். ஆனால், சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு ஒரு கோயில் இருக்கிறது. சம்ஸ்கிருதக் கல்லூரிக்குக் கிழக்குப் பக்கமாகவும், முண்டகக்கண்ணி அம்மன் கோயிலுக்கு மேற்குப் பக்கமாகவும் உள்ளது இந்தக் கோயில். இங்கே திருவள்ளுவருக்கு சந்நிதி உள்ளது. அவரது மனைவி வாசுகியின் சிலை உள்ளது. திருவள்ளுவர் பிறந்த இடம் என்று அகழி பாய்ச்சிய இடம் ஒன்று உள்ளது. சிறிய நூலகம், குறள்நெறி உரை, அன்னதானம் இடல் என்று சிறப்பான கோயில்!

-இன்னும் பரவும்