Published:Updated:

என் ஊர்!

''மலைதான் எங்கள் அடையாளம்!''

என் ஊர்!

''மலைதான் எங்கள் அடையாளம்!''

Published:Updated:
##~##
'தி
னம் தினம் பல லட்சம் கண்கள் தன்னையே உற்று நோக்குவதிலும், உருகிக் கரைவதிலும் எந்தக் கர்வமும் இன்றி, வரைந்து முடித்த ஓவியம்போல ஊருக்கு நடுவே வியாபித்து இருக்கிற இந்த மலையே... எங்கள் எல்லோருக்குமான பொது அடையாளம். இதைச் சுற்றியும், கடந்தும், வணங்கியும், நடந்த நாட்களுக்கிடையே, பதிந்த நினைவுகளில் பொதிந்துகிடக்கிறது என் பால்யம்!

காமராஜர் சிலை, திருவூடல் தெரு, தேரடி வீதி என்று வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தால், நான் படித்த பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரும். பள்ளி மைதானத்தில் நின்று பார்த்தாலே, வேறு மாதிரியான கம்பீரத்தோடு தெரியும் கார்மேல் தேவாலயத்தின் முகப்பும் அதன் வெளிச்சமும். அதற்கு அருகிலேயே மிகுந்த மௌனத்தோடும் கம்பீரத்தோடும்  பெரியார் சிலை!

என் ஊர்!

திருவண்ணாமலையை ஒரு புள்ளியாக்கி எல்லாத் திசைகளில் இருந்தும் வந்து குவியும் மக்கள் கூட்டம் இன்னமும் எங்களை உற்சாகப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை உற்சவத்தின்போது 10 நாட்களும் ஊரும், மக்களும், நகரமும் ஒருவித கற்பூர வாசனையைப் பூசிக்கொண்டு இருக்கும். உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு விபூதிப் பட்டைகளுடன் பையில் பலூன்களும், குழல்களுமாக எங்கள் ஊர்ப் பிள்ளைகளின் முகமே தனி வசீகரத்தில் மின்னும். பத்தாம் நாள் திருவிழா நிறைவின்போது, மாட்டுச் சந்தையும் குதிரைச் சந்தையுமாக நிறையும் அரசு கலைக் கல்லூரியின் மைதானம். காடா விளக்கு வைத்து பொரியும், தின்பண்டங்களும் விற்றுக்கொண்டு இருக்கும் வேட்டியைப் போர்வையாகப் போர்த்தின வியாபாரியும், செயற்கை ரத்தம் பூசிக் கட்டுப் போட்டுக் கொண்ட  பிச்சைக்காரர்களும், சாமியார்களும் கிரிவலப் பாதையை நிறைத்திருப்பார்கள்.

தொழில்நுட்பக் கழிவுகளும், ஃப்ளெக்ஸ் பேனர்களும் அற்ற அப்போதைய டிசம்பர் மாதங்களில், ஒவ்வொருவர் கண்களும், காந்தி சிலை மூலையையும், 16 கால் மண்டபத்தின் முகப்பையும் தேடும். 'முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இலக்கிய இரவு...  டிசம்பர்- 31’ என்ற அந்த கலாபூர்வமான காட்சிவடிவத்துக் கான தேடுதல் அது. ஜெயகாந்தனும், அசோக மித்திரனும் பிரபஞ்சனும், திலகவதியும், கே.என்.பணிக்கரும், பால் சக்காரியாவும், சச்சி தானந்தனும் எங்கள் தேரடி வீதியிலோ, மலை சுற்றும் பாதையிலோ, அரதப் பழசான ஒரு ஆட்டோவிலோ எப்போதும் எங்களுக்குக் காணக் கிடைப்பார்கள். அது இந்த ஊருக்கு மட்டுமே கிடைத்த பாக்கியம்!

அருணகிரிநாதர் துவக்கிவைத்த திருப்புகழின் எழுத்தும், கலை வடிவமும் இப்படியாகப் பயணப்பட்டு, தமிழ் நவீன இலக்கிய செயல்பாடுகளின் முக்கியக் கேந்திரமாக திருவண்ணாமலை இப்போதும் கௌவரப்படுகிறது.

ஜன நெரிசலும், காய்கறி அழுகலும், பச்சை வெற்றிலை வாசமுமாகக் கிடக்கும் அசலி அம்மன் கோயில் தெரு, தென் மாத்தாதி தெரு, மண்டித் தெரு. இவற்றைக் கடக்க நேர்ந்த பகற்பொழுதுகளில் கேட்க வாய்த்த மசூதி தொழுகையின் சத்தமும், பார்க்க நேர்ந்த பெரிய மசூதியின் கம்பீரமும், கை குலுக்க வாய்த்த இஸ்லாமிய சகோதரத்துவமும் இன்றளவும் ஒரு சிறு பகைப் பொறியும் பற்றிக்கொள்ளாமல் பாதுகாத்து வைத்து இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

என் ஊர்!

ரமண ஆசிரமத்தின் பழமை மணம் பரவிக்கிடக்கும் மரங்கள் அடர்ந்த பாதை முழுவதும் வெவ்வேறு நாட்டு மனிதர்களைத் தினம் தினம் தரிசிக்கலாம்.  அவர்களிடம் அரைகுறை ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கும் ஆட்டோக்காரர்களும், கிராம மக்களின் அப்பாவித்தனங்களும் அன்றைக்கு எனக்குச் சிரிப்பதற்குப் போதுமானவை.

நிரம்பி வழியும் சிங்க முக தீர்த்தக் குளக்கரை மர மறைவுகளே எங்கள் கல்லூரிக் காதலர்களுக்கான கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்படும் மறைவிடங்கள். நகரத்தில் இருந்து நடக்கும் தொலைவில் வள்ளுவாகைக் கிராமத்தில் அந்த இடிந்த கூரை, இந்திய ஓவிய ஆளுமை சந்தானராஜின் பூர்வீக வீடு என்பது நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய அடையாளம்.

இருந்த ஒரே ஒரு டூரிங் டாக்கீஸுக்கும் கான்க்ரீட் போடப்பட்டுவிட்டது. மணல் குவித்து உட்கார்ந்த வெற்றிலை எச்சில் துப்பிய தரையில் டைல்ஸ் ஓடுகள் புதைக்கப்பட்டாகிவிட்டது. கிரிவலப் பாதை எப்போதும் புதிய மனிதர்களின் பாதங்கள் பட்டுத் தேய்கிறது. அந்த மண் தரை மீதும் டைல்ஸ் கற்கள் புதைத்தாகிவிட்டது. பாதை முழுக்க வியாபித்து இருந்த கும்மிருட்டை செயற்கையான மெர்க்குரி விளக்குகள் பகலாக்கிவிட்டன.

இயற்கையின் மகோன்னதம் ஒவ்வொரு நாளுமே சிதைக்கப்படுகிறது. மரபுகள் ஒவ்வொரு நாளும் மீறப்படுவது இல்லை; பதிலாக துடைத்து அழிக்கப்படுகிறது. பழமையின் வாசனையும் நம்மிடம் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறது. ஆனாலும், இன்னும் அகாலத்தில் திசைகள் அதிரக் கேட்கும் 'பாப்பம்பாடி ஜமா’வின் பெருமேள சத்தமும், அம்மேளத்தின் பேரதிர்வுக்கு ஈடுகொடுக்கும் பாட்டுக்கார லட்சுமியின் சலங்கை கட்டின காலாட்டமும், பக்கத்துக் கிராம அமைதியைக் கடந்து நகரத்துக்குள் நுழையும் ஏதோ ஒரு கூத்துக் குழுவின் நூற்றாண்டு காலப் பாடலின் ராகமும்கூட... திருவண்ணாமலையின் அடையாளங்களே!''