Election bannerElection banner
Published:Updated:

புது மணம்... புதுமைக் குணம்!

'என் விகடன்' ரிலீஸ்

 ##~##
'செ
ன்னைக்கு விசில் அடிங்கோ!'' - கிரிக்கெட் உற்சாகத்துக்கு நிகராக சென்னை 'என் விகடன்’வெளியீட்டு விழாவிலும் விசில் மேளா. பரபரப்புகளால் நிரம்பி வழியும் சென்னை பெருமக்களின் ஆசுவாசத்துக்கும் சுவாரஸ்யத்துக்கும் இனி 'என் விகடன்’ இணைப்பும் விகடனோடு பவனி வரும்!

கடந்த 17-ம் தேதி மாலை சென்னை தி.நகர் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் என் விகடன் வெளியீட்டு விழா. வாசகப் பெருமக்களின் வாஞ்சையும், வர்த்தகப் பிரமுகர்களின் ஆதரவும் ஹோட்டலையே நிறைத்திருக்க... மேடை ஏறினார்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் 'ஈரோடு’ மகேஷ§ம் 'விஜய் டி.வி’ ரம்யாவும்!

''வணக்கம் சென்னை!'' என மகிழ்ச்சி துள்ளிய ரம்யாவின் வார்த்தைகள் கலகலப்பு வரவேற்பு அளித்தது. 'ஈரோடு’ மகேஷ§க்கு எடுத்துக் கொடுக்க வேண்டுமா என்ன..? ''விகடன் இதழ் ஆரம்பிச்சு 85 வருடங்கள் ஆச்சு. விகடனைப் பார்த்தா தாத்தா மாதிரியா தெரியுது. இளமையும் புதுமையுமாப் பூத்துக் குலுங்கும் விகடன் இப்போ என் விகடனாகவும் உங்களை வசப்படுத்த வரப்போகுது!'' என குஷி கியர் தட்டினார்.

புது மணம்... புதுமைக் குணம்!

புது மணமும் புதுமைக் குணமுமாக தயாராகி இருந்த 'என் விகடன்’ முதல் இதழை டான்ஸி நிர்வாக இயக்குநர் உமாசங்கர் வெளியிட, சென்னை மேயர் மா.சுப்ரமணியன் பெற்றுக்கொண் டார்.

மேடையில் தொடர்ந்தது மகேஷ்-ரம்யா கலகல  கலாட்டா. ''மகேஷ்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா... எத்தனையோ பேர் காமெடி பண்ணாலும், மகேஷ் காமெடிதான் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்!'' என ரம்யா திடீர் ஐஸ் வைக்க... ''உண்மைதான்... என் காமெடிக்கு மக்கள் முதல்ல சிரிப்பாங்க... அப்புறம் ஏன்டா சிரிச்சோம்னு சிந்திப்பாங்க!'' என தன்னைத்தானே கலாய்த்துக்கொண்டார் மகேஷ்.

தொடர்ந்து தமிழகப் பிரபலங்கள் பலரும்  விகடன் உடனான தங்க ளது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வீடியோ காட்சிகள் திரையிடப்பட்டன. சூர்யா, விஜயகாந்த், அமீர், லிங்குசாமி, ஓவியர் ம.செ.,  சிவகுமார், சௌம்யா அன்புமணி, பார்த்திபன், சுசித்ரா, கார்த்தி என பலதரப்பட்ட வி.ஐ.பி-க்களும் விகடன் உடனான நெருக்கத்தையும் நெகிழ்வையும் பரிமாறினார்கள். வி.ஐ.பி-க்களின் வீடியோ சிலிர்ப்பு அடங்கும் முன்னரே, விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் 85 வருடங்களை வெற்றிகரமாகக் கடந்த மகிழ்வுடனும், வாசகப் பெருமக்களுக்கு நன்றி பகரும் நெகிழ்வுடனும் பேசிய வீடியோ காட்சி ஒளிபரப்பானது.

அடுத்து, சென்னை என் விகடன் தீம் ஸாங் ஒளிபரப்பப்பட்டது. தமிழக அடையாளங்களை ரம்மியமாகப் பதிவு செய்து இருந்த வீடியோ காட்சிகள் சென்னையின் அன்றைய, இன்றைய நாகரிகத்துக்கு சாட்சியான இடங்களை யும் அச்சு அசலாகத் திரையில் பரவ விட்டன.

'டான் டான் டான்
ஆனந்த விகடன்...
என்றும் நம் விகடன்...
இன்று என் விகடன்!’
- என்று முதல் முறையே தாளமிடத் தூண்டும் வசீகர இசை. சென்னையின் ஆன்மாவை வெளிப்படுத்தும்  நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு மெருகு சேர்த்தது ரமேஷ் விநாயகத்தின் மயக்கும் இசை. அசத்தல் காட்சிகளால் அந்த வீடியோவை ரசனையாகப் படம் பிடித்து இருந்தார்கள் 'நீயா... நானா’ இயக்குநர் ஆண்டனி தலைமையிலான மெர்க்குரி நெட்வொர்க் நிறுவனத்தினர். இதை இயக்கியவர் சார்லஸ்.

மகேஷ§ம் ரம்யாவும் மீண்டும் மகிழ்ச்சி மத்தாப்பூக்களால் அரங்கை நிறைக்க,  இறுதி நிகழ்ச்சியாக பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது ரியாஸ் தலைமையிலான 'எக்ஸ்.டி டான்ஸ்’ குழுவினரின் அட்டகாச ஆட்டம்.

சென்னையின் பீட்டர் பார்ட்டிகள் ஹிப்ஹாப் பாடல்களுக்கு ஆட, குப்பத்துக் கொத்துப் புரோட்டாக்கள் செம குத்துப் பாடல்களுக்கு போட்டியாக டான்ஸ் ஆடுவது போன்ற ஸ்க்ரீன்ப்ளே. இரு தரப்பும் விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்ட, இறுதியில் ஒரு பெண், 'என் விகடனை’க் காண்பித்து, ''ஏய் இங்கே  பாருங்கப்பா... நம்ம ரெண்டு கோஷ்டி ஆட்களைப் பத்தியும் இதில எழுதி இருக்காங்க!'' என்று சொல்ல, சண்டை போட்டவர்கள் சமாதானமாகத் கட்டித் தழுவி ஃப்ரெண்ட்ஸ் ஆகிறார்கள்.  

இறுதியில்... 'என்றும் நம் விகடன்... இன்று என் விகடன்!’ - என்று மேடையில் ரியாஸ் குரூப் ஆட, அவர்களோடு சேர்ந்து பார்வையாளர்களும் ஆட.... தொடரவிருக்கும் கொண்டாட்டங்களுக்கு அது முதல் புள்ளி!

- இரா.சரவணன், படங்கள்: கே.ராஜசேகரன், கே.கார்த்திகேயன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு