Published:Updated:

இந்திய ஹாக்கி அமைப்பு பிரச்னை தீருமா?

Vikatan Correspondent

புதுடெல்லி, அக்.1,2011

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் நெருக்குதல் மற்றும் ஒலிம்பிக்கில் இந்திய அணி பங்கேற்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் வரும் 4-ம் தேதி ஆலோசிக்கவுள்ளது.

இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை கட்டுப்படுத்த, ஹாக்கி இந்தியா, இந்திய ஹாக்கி கூட்டமைப்பு ஆகிய இரு அமைப்புகள் செயல்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து இரு அமைப்புகளையும் ஒன்றிணைக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முயற்சி மேற்கொண்டது. அதிகாரபகிர்வு விஷயத்தில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனினும், தற்காலிகமாக இரு அமைப்புகளும் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்தன.

இதனை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஏற்கவில்லை. இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை ஒரே ஒரு அமைப்பு மட்டுமே நிர்வகிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு, இந்தியாவில் நடக்க இருந்த சாம்பியன்ஸ் லீக் ஹாக்கி வாய்ப்பை தட்டிப்பறித்தது. 'ஹாக்கி இந்தியா' மட்டுமே சர்வதேச கூட்டமைப்பு அங்கீகரித்த அமைப்பாகும்.

இதே நிலை தொடர்ந்தால், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பங்கேற்பது தடை விதிக்கப்படலாம் என்று சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு எச்சரித்து, இந்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

'ஒலிம்பிக் சாசனம் மற்றும் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால், ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும். இந்தியாவில் ஹாக்கியை நிர்வகிக்க ஹாக்கி இந்தியா அமைப்பை அரசு அங்கீகரிக்க வேண்டும். அதிகாரபூர்வமற்ற மற்ற அமைப்புகளை ஆதரிக்க கூடாது' என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அவசர கூட்டம் வருகிற 4-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

இதில் ஹாக்கி இந்தியா, இந்திய ஹாக்கி கூட்டமைப்பு விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த பிரச்னைக்கு கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயல் தலைவர் விஜய்குமார் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.