Published:Updated:

என் ஊர்!

மழைக்காகவும்... மகளிர்க்காகவும்...

என் ஊர்!

மழைக்காகவும்... மகளிர்க்காகவும்...

Published:Updated:
 ##~##
''மெ
ரினா கடற்கரையில் இருந்து தொடங்கும் ராதா கிருஷ்ணன் சாலையை ஒட்டிய பகுதி கைலாசபுரம். அங்குதான் நான் பிறந்தேன். நாங்க மொத்தம் ஒன்பது பசங்க. நான் மூத்தவன்!

ராதாகிருஷ்ணன் சாலை அப்போ அவ்வளவு அகலமா இருக்கும். இப்ப ரொம்பவே குறுகிடுச்சு. இப்ப உள்ள யெல்லோ பேஜஸ் அருகே 'கிரிஜா பங்களா’ என்ற பெயரில் அப்ப சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் வீடு இருந்தது. பங்களா முன்னால்  பெரிய ஆல மரம். அதுக்கு எதிரே யோகலட்சுமி கல்யாண மண்டபம். அதெல்லாம் இப்போ என்ன ஆச்சுன்னே தெரியலை. கல்யாணி ஹாஸ்பிட்டல் மட்டும் அப்படியே நினைவுகளைச் சுமந்து நிற்குது!  

என் ஊர்!

இப்போ சிட்டி சென்டர் இருக்கும் பகுதிக்கு 1980-களில் 'ரெட்டைக் குழாய்’னு பேர். அதுக்குப் பக்கத்துல குப்பம். அதுக்காக இரண்டு மாநகராட்சிக் குடிநீர் குழாய்கள் இருக்கும். அதுதான் பேர்க் காரணம். திருவல்லிக்கேணி - கைலாசபுரம்தான் அப்ப என் உலகம். இருசப்ப கிராமணி தெருவில் ம.பொ.சி. வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில் சில வருஷம் படிச்சேன். பக்கத்துல முருகன் கோயில் இருந்ததால, 'முருகன் கோயில் ஸ்கூலு’ன்னுதான் அந்தப் பள்ளிக்குப் பேரு. அப்புறம் பிக் ஸ்ட்ரீட்ல ஒரு சின்ன மாநகராட்சி பள்ளிக்கூடம்,  ராயப்பேட்டை வெஸ்லி ஹையர் செகண்டரி ஸ்கூல்னு மாறி மாறிப் படிச்சாலும், பத்தாவது தாண்டலை. ஒரு எல்லைக் கோட்டை வகுத்துக்கிட்டு அதுக்குள்ளேயே படிச்சு முடிச்சுட் டேன். அதன் பிறகு மழைக்காகவும் மகளிர்க்காகவும்கூட பள்ளி, கல்லூரி பக்கம் ஒதுங்கலை நான்!

என் ஊர்!

முதல் தடவை எம்.எல்.ஏ., ஆனபோது எனக்கு கல்யாணம் ஆச்சு. அப்ப பெரம்பூர் மகாகவி பாரதியார் நகர் 12-வது குறுக்குத் தெருவுல மூணு வருஷம் இருந்தேன். 89-ம் ஆண்டு தேர்தலில் நான் எக்மோர் எம்.எல்.ஏ., ஆனேன். இப்ப புதுசா கட்டி இருக்குற  தலைமைச் செயலகம் இருந்த இடத்தை அப்போ கோஷன் ப்ளாக்னு சொல்வாங்க. அதாவது குதிரைக் காரர்களுக்கு ஒரு பிளாக், பேண்டு வாத்தியக்காரர்களுக்கு ஒரு ப்ளாக்னு வீடுகள் பிரிட்டிஷ் செட்டப்ல தனித் தனியா இருக்கும். சகல வசதிகளும் உள்ள வீடுகள். ஏழு வருஷம் அங்கே இருந்தோம்.

பிறகு அடையாறு,  பெசன்ட் நகர், சாந் தோம்னு சுத்தி இப்ப மீண்டும் அடையாறு! நீண்டு பெருத்திருந்த கடற்கரை சாலை இப்ப ரொம்பவே குறுகியிருக்கு. அப்போ காந்தி சிலை தொடங்கி கடல் வரை மணல் இருந்தது. கடல் தொடங்கும் இடத்தில் ஓர் ஆள் உயரத்துக்கு மணல் மேடா இருக்கும். அப்படியே ஓடி வந்து அந்த மேட்டில் சறுக்கி விழுவோம். திரும்ப ஏறுவது கஷ்டம். சுனாமி வருவதற்கு முன்பே புயல் சீஸனில் பனை மர அளவுக்கு அடித்த அலைகளை எல்லாம் பார்த்திருக்கோம்.  சிவாஜி கணேசன் தொடங்கி ஜெய்சங்கர் வரை எல்லாரையும் இங்கே  ஷூட்டிங்ல பார்ப்போம். 'பில்லா’வுக்காக ரஜினி 'வெத்தல வெத்தல வெத்தலையோ...’ன்னு  ஆடினதைப் பார்த்திருக்கேன்.

பார்த்தசாரதி கோயில் தெப்பத் திருவிழாவும், மயிலை அறுபத்து மூவர் உலாவும்தான் அப்ப எங்க ளுக்கு மிகப் பெரிய திருவிழா. பெரியப்பா குடும்பத்தையே கூட்டிட்டுப் போவாரு. ஐஸ் ஹவுஸ் பஸ் ஸ்டாண்டில்  12-ம் நம்பர் பஸ் ஏறி காமதேனு தியேட்டர்ல இறங்குவோம். சாயங்காலம் வர்ற சாமியைப் பார்க்க மூணு மணிக்கெல்லாம் கொண்டு போய் உட்கார வெச்சுடுவாரு. திருவிழாவை முடிச்சுட்டு, அஜந்தா ஹோட்டல்ல மசால் தோசை சாப்பிட்டு வீட்டுக்குப் போவோம்.

எங்க பள்ளி ஆசிரியர் முகமது அலி. மறக்க முடி யாத, மறக்கக் கூடாத மனிதர். அவரை 'அலி மாஸ்டர்’னுதான் கூப்பிடுவோம். ஸ்கூலைக் கட்டடிச்சுட்டு ஓடியன் தியேட்டர்ல சினிமா பார்த்து திரிஞ்ச எங்களைக் கட்டுப்படுத்திப் படிக்க வெச்சவர். வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதியை எங்களுக்குத்தான் செலவு செய்வார். போன மாசம் அலி மாஸ்டர் இறந்துட்டதாத்  தகவல் வந்தது. எல்லா வேலைகளையும் தூக்கிப் போட்டுட்டு ஓடோடிப் போய் நின்னேன். அவர் மேல இருந்த அதே ப்ரியமும் மரியாதையும்தான் நான் பிறந்த இந்த சென்னை மீதும் எனக்கு இருக்கு!''

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: என்.விவேக்

என் ஊர்!