Published:Updated:

ஹாய் மதன் கேள்வி-பதில்

'எம்.ஜி.ஆர்'-க்குத் தடை!

ஹாய் மதன் கேள்வி-பதில்

'எம்.ஜி.ஆர்'-க்குத் தடை!

Published:Updated:
##~##
வெ.கா, கடையநல்லூர்.

இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் அந்த இடத்தில் என்ன இருந்தது?

'ஒன்றும் இல்லை’ என்கிறார்கள் விஞ்ஞானிகள் - Nothingness. அந்த 'ஒன்றும் இல்லாததற்கு’ முன்பு என்ன இருந்தது? யாருக்கும் தெரியாது. இன்னொரு பிரபஞ்சம் இருந்து, அது சுருங்கி மறைந்து வெற்றிடமாக மாறி இருக்கலாம். ஆனால், அந்த வெற்றிடத்தில் ஒரு புள்ளி தோன்றியது உண்மை. ஒன்றுமே இல்லாத இடத்தில் ஒன்று தோன்ற முடியாது என்கிறது விஞ்ஞானம். அதாவது, you can't get Something from Nothing!

பிறகு எப்படி அந்தப் புள்ளி தோன்றியது? தெரியாது! புள்ளி என்றால் சாதாரணப் புள்ளி அல்ல. அந்த 5,000 கோடிப் புள்ளிகளை இந்த வாக்கியத்தின் கடைசியில் வரும் முற்றுப்புள்ளிக்குள் வைக்க முடியும். புரோட்டான் (PROTON) என்று அழைக்கப்படும் 'அந்த’ப் புள்ளி பாசிட்டிவ் மின் சக்திகொண்டது. ஓர் அணுவின் கருப்பொருள் அதுவே. அணுவுக்கு உள்ளே ஒரு குட்டி உலகம் உண்டு - மைக்ரோ சூரிய மண்டலம் மாதிரி!

ஹாய் மதன் கேள்வி-பதில்

அணுவின் கருப்பொருளாக புரோட் டான் மற்றும் மின் சக்தி இல்லாத நடு நிலைமையான நியூட்ரான் மற்றும் இந்த இரண்டையும் சுற்றி 'வட்டமிடும்’ எலெக்ட்ரான் இருக்கிறது. எலெக்ட்ரான் என்பது நெகட்டிவ் மின் சக்தி. இவற்றைத் தனக்குள் கொண்டுள்ள அணு (ATOM) புரோட்டானோடு ஒப்பிடும்போது 'பிரமாண்டம்’ என்றாலும், உங்கள் தலையில் உள்ள ஒரே ஒரு முடிக்குப் பின்னால் ஐந்து லட்சம் அணுக்கள் அடியோடு ஒளிந்துகொள்ள முடியும். 'மணல் மனிதன்’போல நாம் எல்லோரும் அணுக்களால் ஆன உயிர் உள்ள சிலையே!

அணுக்களுக்கு அநேகமாக சாவே கிடையாது. கோடான கோடான கோடி ஆண்டுகள் அணு வாழும். அந்த விதத்தில் நாம் சாசுவதமே!

நான் முன்பு சொன்ன அந்த புரோட்டான் திடீரென்று பிரபஞ்சத்துக்கு முன் இருந்த வெற்றிடத்தில் தோன்றி, பிறகு வெடித்தது. வெடித்த அந்தச் சிதறல்களில் இருந்து மகா பிரமாண்டமான பிரபஞ்சம் தோன்றியது. மற்றும் 'கேலக்ஸி’கள். நம்ம பால்வீதி (galaxy)யில் மட்டும் சுமார் (சூரியனைப் போல) 40 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் உண்டு. 'பால் வீதி’யைப்போல சுமார் 20 ஆயிரம் கேலக்ஸிகள் பிரபஞ்சத்தில் உண்டு. சூரிய நட்சத்திரத்தின் பக்கத்து வீட்டுக்காரர் 'ஆல்ஃபா ஸென்ட்டாரி’ என்கிற நட்சத்திரம். அவரே  நமக்கு 4.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறார். 50 ஆயிரம் கி.மீ ஸ்பீடில் போகும் ஒரு விண்வெளிக் கலத்தில் நீங்கள் சென்றால், 'ஆல்ஃபா’ நட்சத்திரத்தை அடைய 25 ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும்!

இந்த அத்தனையும் திடீரெனப் படுவேகமாகச் சுருங்க ஆரம்பித்து, மீண்டும் ஒரு 'புள்ளி’யாக மாறி, அது மீண்டும் வெடித்து, புத்தம் புதிய பிரபஞ்சம் தோன்றி, அங்கே 'பூமி’ என்கிற தக்குனூண்டு புள்ளியில் ஒருவர் அமர்ந்து, 'இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் என்ன இருந்தது?’ என்று கேட்கலாம். 'முன்பு இருந்த ஒரு பிரபஞ்சத்தில், ஏதோ ஒரு மூலையில் வெ.கா. என்பவர் இதே கேள்வியைக் கேட்டு, மதன் என்பவர் பதில் சொல்லிவிட்டாரே!’ என்று யாரும் சொல்லப்போவது இல்லை!

சிவபாரதி, சிதம்பரம்.

ஓர் அழகிய அனுபவம் தந்த தங்களின் முதல் ரயில் பயணம் எது?

தஞ்சாவூருக்கு அப்பா, அம்மாவுடன் இரவில் ரயில் பயணம். நான் குழந்தை. என்னைக் கீழே படுக்கவைத்துவிட்டு, அவர்கள் தூங்கிவிட்டார்கள். எழுந்து பார்த்தால் என்னைக் காணோம். அலறி அடித்துக்கொண்டு அழுது, பிறகு செயினைப் பிடித்து இழுத்து, வண்டி நின்று கலாட்டா! 'சரியாத் தேடிப் பாருங்கம்மா’ என்று கார்டு சொல்ல, ஈனஸ்வரத்தில் எங்கிருந்தோ முனகல் சத்தம் கேட்க... தூங்கியவாறே புரண்டு, சீட்டுக்கு அடியில் இருந்த பெட்டிக்கும் பின்னால் போய் ஓரமாக... தொடர்ந்து நான் தூங்கியிருக் கிறேன். கலாட்டாவில் கண் விழித்து நான் வீறிட, பெருங்குரலுடன் அம்மா ஓடி வந்து என்னைத் தூக்கிக்கொண்டாள். எல்லோரும் தலையில் அடித்தவாறு நகர்ந்தனர். பிற்பாடு எனக்கு வயசான பிறகு அம்மா விவரித்த நிகழ்ச்சி இது. (இதில் 'அழகிய அனுபவம்’ எங்கே வந்தது என்று நீங்கள் கேட்பது புரியுது... விடுங்க!)

கே.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு.

ஏதாவது ஒரு வேலைக்குச் சேரும்போதும், பாஸ்போர்ட் வாங்கும் போதும், காவல் நிலைய விசாரிப்பு என்றெல்லாம் இருக்கும்போது - ஒரு பொறுப்பான அமைச்சர் பதவி ஏற்கும்போது, ஏன் இதுமாதிரி நடைமுறைகள் இல்லை?

நான் என்ன கேட்கிறேன் என்றால், ஏன் வாக்குச் சாவடி முன் ஒவ்வொரு வேட்பாளர் மீதும் உள்ள கிரிமினல் வழக்குகள் பற்றிய தகவல்களை நோட்டீஸாக ஒட்டிவைக்கக் கூடாது? உணர்ச்சி வசப்படாமல் ஒரு முறை படித்துவிட்டு, பிறகு க்யூவில் போய் நிற்கலாமே!

எம்.பரஞ்சோதி, சென்னை-28.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தவறுதான். அதே சமயம், பணம் தருபவர்களுக்கு வாக்களிப்பதுதானே மனசாட்சியின்படி நியாயம்? அவருக்கு ஓட்டுப் போடாதது வாக்கு மீறும் செய்கைதானே?

ஓட்டுப் போட பணம் வாங்குவது சட்டப்படி குற்றம். குற்றத்தைச் செய்துவிட்டு, மனசாட்சி பற்றிப் பேசுவது அபத்தம். சரி, ஒரு குற்றத்தைச் செய்தால், குறைந்தபட்சம் அதற்குப் பிராயச்சித்த மாவது செய்ய வேண்டாமா? பணம் தந்தவருக்கு ஓட்டுப் போடாமல் இருப்பதுதான் பிராயச்சித்தம்! போகப் போக, 'இந்தப் பயலுக பணத்தை வாங்கிக் கிட்டு நமக்கு ஓட்டுப் போடாம இருக்கானுங்களே!’ என்று புலம்ப ஆரம்பிப்பார்கள். அது ஜனநாயகத் துக்கு நல்லதுதான்!

ஜெ.காந்திமதி, மதுரை-8.

இலவசங்களை ஏன் வரவேற்கக் கூடாது?

கிழிந்த சட்டை அணிந்திருக்கும் ஓர் ஏழைக்கு புதுச் சட்டையை இலவசமாகத் தருவது என்ன தவறு?

ஹாய் மதன் கேள்வி-பதில்

அதை இப்படிக் கொஞ்சம் பாருங்களேன். உங்கள் தொகுதியில் உள்ள ஒவ்வொருவருக்கும் செருப்பு இலவசமாகத் தரப்படுகிறது (எந்தத் தலைவரும் தன் சொந்தக் காசில் செருப்பு வாங்கித் தர மாட்டார். அது மக்கள் தரும் வரிப் பணத்தில் வாங்கப்படும் செருப்பு என்பதை நினைவில் கொள்ளவும்.) மாறாக, உங்கள் தொகுதியில் (அதே வரிப் பணத்தில்!) செருப்புத் தொழிற்சாலை ஒன்று துவங்கப்படுகிறது. அதில் உங்கள் தொகுதியில் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கிறது. நீங்கள் சம்பாதித்து உங்களுக்குப் பிடித்த செருப்பை வாங்கிக்கொள்ளலாம். செருப்பா, தொழிற்சாலையா, எது பெட்டர்?

அ.சூர்யமூர்த்தி, கோவை.

இந்தத் தேர்தலில் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் என்னவோ?

தேர்தலிலா? அல்லது குறிப்பாக இந்தத் தேர்தலிலா? இந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர். மாதிரி தொப்பி - குல்லாவுடன் மேக்கப் அணிந்து, கை அசைத்துக்கொண்டு பலர் நடமாடுவது... பார்க்கச் சகிக்கவில்லை. எம்.ஜி.ஆர். என்ன அழகு! கட்சித் தலைமை இதற்குத் தடைவிதிக்க வேண்டும்!