Published:Updated:

நானும் விகடனும்!

நா.கதிர்வேலன்படங்கள் : கே.ராஜசேகரன்

நானும் விகடனும்!

நா.கதிர்வேலன்படங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:
நானும் விகடனும்!
 ##~##

''விகடன் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். இத்தனை  வருஷமா என்னோட சந்தோஷம், துக்கங்கள்ல கூடவே வர்ற நண்பன். 'நீ பண்ணினது சரி, தப்பு’ன்னு உரிமையா, கொண்டாடுற, குட்டுற நண்பன். பொதுவா, நான் வேலை செய்வதில் ஆர்வமா இருப்பேன். ஓடிட்டே இருக்கிறது பழகிப்போச்சு. அதுவும், சமீபத்தில் என் பொண்ணு மறைந்த பிறகு, உட்கார்ந்து யோசிக்கவே பயமா இருக்கு. அன்பானவங்களைத் தொலைக்கிறதைவிட வேறு துயரம் இருக்கா? அதனால், இன்னும் இன்னும்னு வேலைகளை இழுத்துப் போட்டுக் கிட்டு அதிவேகமா ஓடுறேன். அந்த நேரத்துல என்னைக் கொஞ்சம் இயல்புக்கு இழுத்துட்டு வந்தவங்கள்ல விகடனும் ஒருத்தன். இப்பவும் எப்பவும் 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப் பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’தான் என் பிரார்த்தனையும்!

நானும் விகடனும்!

ஆரம்பத்துல, எனக்கு பத்திரிகைகள் படிக்கிற பழக்கமே கிடையாது. இன்ஸ்டிட்யூட் படிக்கும்போது, 'இந்த வாரம் விகடன் பார்த்தியா?’ன்னு யாராவது, ஏதாவது முக்கியமான விஷயம்னு சொன்னா மட்டும்தான் பார்ப்பேன். எப்பவும் சினிமா... சினிமா... சினிமாதான். கேமராமேன் ஆன பிறகுதான் படிக்கிற பழக்கம் வந்து விகடனை ரெகுலராப் படிக்க ஆரம்பிச்சேன். இப்போ வரைக்கும் என் வெள்ளிக் கிழமை விகடனுக்குத்தான். காரணம் என்னன்னு யோசிச்சா, விகடன் என்னை லேசாக்குது... கனமாக்குது! விகடனுக்கும் எனக்குமான உறவு ஏற்பட்டது சினிமா விமர்சனங்களால்தான். இன்ஸ்டிட்யூட்ல படிக்கும்போது, ஒவ்வொரு படத்துக்கும் விகடன் மார்க் எவ்வளவுன்னு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். விகடன் விமர்சனம் கோடம்பாக்கத்துக்கு ஆக்சிஜன். எவ்வளவோ நல்ல படங்கள் முதல்ல சரியாகப் போகாமல், விகடன் மார்க்குக்குப் பின்னாடி பெரிசா பிக்கப் ஆகி, ஹிட் ஆகியிருக்கு. நல்ல படைப்புகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறதுதான் ஒரு பத்திரிகையின் முதல் கடமை. அதை விகடன் சரியாப் பண்ணும்.

'மௌன ராகம்’ ரிலீஸ் ஆனப்போ, 'விகடன் மார்க் என்ன? என்னைப்பத்தி என்ன எழுதிஇருக்காங்க’ன்னு எதிர்பார்ப்போட காத்திருந்தேன். நிறையக் கஷ்டங்களோட எடுத்த படம் அது. மணிக்கும் அது சவாலான நேரம். விமர்சனம் சிலாகிச்சு வந்தது. என் ஒளிப்பதிவைக் குறிப்பிட்டு, 'சபாஷ்’ பாராட்டு. இப்போ நினைச்சாலும் அதை முதல் முறை படிச்சப்போ ஏற்பட்ட சந்தோஷமும் உற்சாகமும் மனசுக்குள் பொங்கிப் பெருகுது. அதே மாதிரி 'நாயகன்’ ஒளிப்பதிவுக்கு என்னை ஸ்பெஷலாப் பாராட்டி இருந்தாங்க. ஒளிப்பதிவில் நான் ஏதாவது புதுசா செய்திருந்தா, அதற்கு அந்தப் பாராட்டுக்கள்தான் தூண்டுதல். ஒரு கலைஞ னுக்கு அங்கீகாரம்தான் எனர்ஜி... எரிபொருள். அது கிடைக்கலைன்னா, அவன் சுருண்டுருவான். என் அசிஸ்டென்ட்டுகளுக்கு நான் தர்ற முதல் சம்பளம், அங்கீகாரம்தான். 'இவன் நிஜமாத் தகுதியாகிட்டான்’னு உணர்ந்துட்டா, 'ஒரு நிமிஷம் இங்க இருக்காத... போ... போய் உன் கணக்கை ஆரம்பி’ன்னு அனுப்பிருவேன். அவனுக்கான அடையாளம், அங்கீகாரத்தைத் தர வேண்டிய நேரத்தில் தந்தாகணும். விகடன் இதை எப்பவும் சரியா செய்வான். 'நாயகன்’ல இருந்து 'யாவரும் நலம்’ ஒளிப்பதிவுக்கு விருது அளித்தது வரை, என் தகுதிக் கான மரியாதையைத் தவிர்க்காமல் தருகிறான் விகடன்!

நான் புகைப்படக் காதலன். ஒளிப்பதிவைவிட, போட்டோகிராஃபியை இன்னும் அதிகமா நேசிக்கிறவன். ஒவ்வொரு நொடியையும் காலாகாலத்துக்கும் உறையவைக்கிற அந்த வித்தை ரொம்ப அற்புதமானது. முன்னாடி எங்கே போனாலும் போட்டோஸ் எடுத்துட்டே இருப்பேன். 15 வருஷத்துக்கு முன்னாடி விகடன்ல நான் எடுத்த போட்டோக்களை வாங்கி ஒரு தொடராகவே வெளியிட்டாங்க. ஒவ்வொரு போட்டோவுக்கும் பிரபலங்கள்   அவங்க பார்வையை எழுதினாங்க. என் புகைப்படங்களுக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ் மறக்க முடியாத அனுபவம். விகடன்ல வந்ததால அந்த போட்டோஸ் ஹிஸ்டரிஆச்சு. அது இப்பவும் எனக்குப் பெரிய ஞாபகம்.

நானும் விகடனும்!

நான் வெவ்வேறு வெர்ஷனில் இயங்கிட்டு இருக்கும்போதும், தவறாம விகடனில் என் பேட்டி வந்துரும். எங்கேயோ ஹைதராபாத் பக்கம் தெலுங்குப் படம் பண்ணிட்டு இருப்பேன். மும்பையில், இந்திப் படத்தில் இருப்பேன். 'அமிதாப்போடு இந்திப் படமாமே... ஒரு இன்டர்வியூ பண்ணலாம்’னு யாராவது விகடன் ரிப்போர்ட்டர் லைனுக்கு வருவார். அதே மாதிரி 'நானும் விகடனும்’ வரை எந்தப் பகுதி ஆரம்பிச்சாலும், அதுல எனக்கு ஒரு சீட் கன்ஃபார்ம். எந்தத் தடையும் இல்லாம ரொம்ப ஆத்மார்த்தமாப் பேசின விஷயங்கள் விகடன்லதான் வந்திருக்கு. குறிப்பா, நா.கதிர் வேலன் எழுதின சில பேட்டிகளை என்னால எப்பவும் மறக்க முடியாது.

எனக்கு நிறைய சமூகக் கோபங்கள் இருக்கு. இந்த அரசியல், அதிகாரம், மக்களோட இயலாமை பத்தி பெரிய ஆதங்கங்கள் இருக்கு. 'தெஹல்கா’ மாதிரி ஒரு மீடியா இங்கே இல்லையேன்னு நிஜமா வருத்தமா இருந்தது. ஆனால், விகடன் வைக்கிற நடுநிலையான அரசியல் விமர்சனங்கள் மனசுக்குள் புது நம்பிக் கையை உண்டாக்குது. குறிப்பா, ஈழப் பிரச்னைகளில் ஒரு கலைஞனா, மனிதனா... உங்களைப்போலவே எனக்கும் சொல்ல முடியாத வலி.

கண்ணு முன்னாடி நம்ம குழந்தைகளை, அம்மாக்களை, சகோதரிகளைக் கொன்னு குவிச்ச அவலத்தை, மன்னிக்க முடியுமா... மறக்க முடியுமா? அந்த நேரத்தில் 'பா’ பட ஷூட்டிங்கில் மலேசியாவில் இருந்தேன். அங்கே இருந்த தமிழ் மக்கள் வேதனையில் கொந்தளிக்குறாங்க. அவ்வளவு பெரிய துயரம் நடக்கும்போது, இந்தியாவின் பல மீடியாக்கள் அதை எப்படி டீல் பண்ணினாங்கன்னு நமக்குத் தெரியும். நிறைய பொய்களும் வியாபாரமுமா நடந்த கூத்துக்கள் எனக்குப் பெரிய அதிர்ச்சி. ஆனா, ஈழ விவகாரத்தை ரொம்ப உண்மையா, உணர்வுபூர்வமா, மனிதநேயத்தோடு அணுகிய  விகடனுக்கு ஹாட்ஸ் ஆஃப். ஈழம் தொடர்பா அப்போ ப.திருமாவேலன் எழுதி விகடன்ல வந்த கட்டுரைகள் என் வலி, கோபம், இயலாமைக்குத் துணை நிக்கிற நண்பனின் குரலாக இருந்தன.

விகடனில் நான் முதல்ல படிக்கிறது ஜோக்ஸ். இப்போ வரை அதன் ஸ்பெஷலே அதான். ரொம்ப தரமாகவும், குபீர் கொண்டாட்டமாகவும், டாபிக்கல் சுவாரஸ்யத்துடனும் இருக்கும். அப்புறம் தொடர்கள். 'இவன்தான் பாலா’, வண்ணதாசனின் 'அகம்புறம்’, 'வடிவடிவேலு வெடி வேலு’ன்னு ரசிச்சு நேசிச்சு வாசிச்சேன். வெறும் தகவலா இல்லாமல், அந்த வி.ஐ.பி. பேசுற அதே அடையாளத்துல சுவாரஸ்யமாப் படைக்குறது விகடன் ஸ்பெஷல். சமீப நாட்களா நான் முதலில் வாசிக்கிற பக்கங்கள் 'விகடன் மேடை’யும், 'வலைபாயுதே’வும்!

புதுத் திறமைசாலிகளை அடையாளம் கண்டு ஆளுக்கு முன்னாடி அங்கீகரிப்பது விகடனின் பிரத்யேகக் குணம். இப்போ ரெண்டு வாரத்துக்கு முன்னாடி 'யுத்தம் செய்’ கேமராமேன் என் சிஷ்யன் சத்யாவைப்பத்தி எழுதி இருந்தாங்க.

'விகடன் பார்த்தீங்களா சார்... என்னைப்பத்தி வந்திருக்கு’ன்னு அவன் வெள்ளிக் கிழமை காலையிலேயே போன் பண்ணான். அவன் குரலில் தொனிச்ச குதூகலமும் உற்சாகமுமே அவனோட அடுத்த முயற்சிகளில் முனைப்பா ஈடுபடுத்தும். விகடனின் பெரிய பலம், எப்பவும் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து யோசிக்கிறதுதான். அதனால இன்னும் 85 வருஷம் கழிச்சும் விகடன் இளமையாகவே இருக்கும்.

ஏன்னா, எப்பவும் விகடனை இயக்குவது இளைஞர்கள்தான்!''