Published:Updated:

என் ஊர்!

''நம்பி வந்தோரை ஏமாற்றாது!''

என் ஊர்!

''நம்பி வந்தோரை ஏமாற்றாது!''

Published:Updated:
##~##
ழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். சாகித்ய அகாடமி ஆலோசனைக் குழு உறுப்பினர்.ஏழுநாவல்கள்,15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 35 நூல்கள் எழுதி இருக்கிறார். 25 ஆண்டுகளாக 'கனவு’ காலாண்டு இலக்கிய இதழை நடத்தி வருபவர். திருப்பூர் பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

''திருப்பூரில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் அதிகம். அந்தக் காலகட்டத்தில் அவர் கலந்துகொள்ளும் கூட்டம் என்றால் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து கேட்டுச் செல்வார்கள். எம்.ஜி.ஆர் பொதுக் கூட்டம் நடக்கும் பொட்டல் காடு, இப்போது எம்.ஜி.ஆர். நகர் ஆகிவிட்டது. இப்போது அங்கே ஏராளமான பனியன் நிறுவனங்கள். சாதாரண பனியன் நிறுவனத் தொழிலாளியை எம்.எல்.ஏ. ஆக்கியவர் எம்.ஜி.ஆர். இன்று பல பனியன் நிறுவன உரிமையாளர்கள், ஒரு காலத்தில் சாதாரணத் தொழிலாளியாக வாழ்க்கையை துவக்கியவர்கள். காரணம், திருப்பூர் மண்ணுக்கே உரித்தான உழைப்பு!

என் ஊர்!

1950-ல் காதர் என்பவர் முதன்முதலாக பனியன் கம்பெனியை இங்கே தொடங்கினார். 1985-க்கு பின் ஒவ்வொன்றாக சிறு பனியன் கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டன. அவ்வளவு ஏன்? சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புகூட பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு சாதாரண கிராமமாகத்தான் இருந்தது திருப்பூர். அதன் பின்பு இங்கு குடியேறிய மக்களின் உழைப்பு,  வியர்வைதான் வெளிநாட்டு ஏற்றுமதியை சாத்தியமாக்கியது. இன்று ஆயிரக்கணக்கில் நிறுவனங்கள் பெருகி, அசுர வளர்ச்சியுடன் சர்வதேச நகரம் ஆகிவிட்டது திருப்பூர்.

என் ஊர்!

வந்தாரை வாழவைக்கும் பூமி இது. பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பேர் இங்கு வந்து பிழைக்கிறார்கள். 'வேலைக்கு ஆட்கள் தேவை’ அறிவிப்பைத் திரும்பிய இடங்களில் எல்லாம் பார்க்கலாம். பல்வேறு சாதி, மதம் இருந்தாலும் பிரச்னை என்று வந்தது இல்லை. மாதம்

என் ஊர்!

15 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி கொட்டும் ஊரில் தாதாயிஸம், கட்டப் பஞ்சாயத்து எதுவும் இல்லை. காரணம், மக்களின் ஒற்றுமை. பிரச்னை என்று வந்துவிட்டால், உள்ளூர் முரண் பார்க்க மாட்டார்கள். விசேஷம் என்று வந்துவிட்டால், முதலாளி - தொழிலாளி வித்தியாசம் பார்க்க மாட்டார்கள்.

இந்த ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். கே.என்.பழனிசாமி என்பவர்தான் அரசிடம் போராடி, பவானி ஆற்றுத் தண்ணீரை திருப்பூருக்குத் திருப்பி னார். அவரை நகரத் தந்தை என்று சிறப்பித்து சிலையும் வைத்து இருக்கிறார்கள். தேசியக் கொடிக்காக உயிரைவிட்ட திருப்பூர் குமரன் பிறந்தது மட்டுமே சென்னிமலை. அவர் வாழ்ந்தது  இங்கேதான். தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கதர் ஆடை சர்வோதய சங்கம் திருப்பூரில்தான் இருக்கிறது. அதற்காகப் பல ஏக்கர் நிலத்தைக் கொடுத்தவர் இந்த ஊரைச் சேர்ந்த சுதந்திர போராட்டத் தியாகி வீரபாண்டி சுந்தராம்பாள்.

நியாயமான போராட்டங்களுக்குப் பெயர் பெற்ற ஊர் இது. விடுதலைப் போராட்டம், மொழிப் போராட்டம், தொழிற்சங்கப் போராட்டம் என்று ஏராளமான போராட்டங்கள் வெடித்ததும் இங்கேதான். இங்குள்ள ஜெய்வா பாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு பெருமை உண்டு. ஆசியாவிலேயே அதிக அளவில் இங்குதான் 8,000  பெண் குழந்தைகள் படிக்கிறார்கள்.

100 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த செல்லம் கேன்டீனின் டிகிரி காபியும் தயிர் வடையும் அவ்வளவு பிரபலம். இந்த ஊருக்கு என்று ஸ்பெஷல் உணவு ஒன்று உண்டு. 'அரிசி - பருப்பு சாதம்’ என்பார்கள் அதனை. அரிசி, துவரம் பருப்புடன் ஒருவித மசாலா கலந்து சமைப்பார்கள். சின்ன வெங்காயம் நிறைய இருக்கும். அதில் தேங்காய் எண்ணெய்விட்டு சாப்பிட்டால், அந்த ருசிக்கு ஈடு இணையே கிடையாது.

என் ஊர்!

இன்றைக்கு திருப்பூருக்கு என்ன பிரச்னை என்பதை உலகமே அறியும். சாயக் கழிவு நீர்ப் பிரச்னைக்கு மட்டும் அரசும் தனியார் நிறுவனங்களும் சேர்ந்து நல்ல முடிவை எடுத்துவிட்டால், மீண்டும் நொய்யல் ஆற்றுத் தண்ணீரை ருசியோடு அள்ளிப் பருக முடியும்.

பல லட்சம் பேருக்கு வாழ்வு கொடுக்கும் இந்த ஊர், நம்பி வந்தோரை ஏமாற்றாது. இன்னும் அள்ளிக் கொடுக்கும் என்பது என் நம்பிக்கை!''

சந்திப்பு:ஜி.பழனிச்சாமி
படங்கள்: வி.ராஜேஸ், வெ.பாலாஜி