Published:Updated:

மலைகளின் அரசி இரவில் எப்படி?

மலைகளின் அரசி இரவில் எப்படி?

மலைகளின் அரசி இரவில் எப்படி?

மலைகளின் அரசி இரவில் எப்படி?

Published:Updated:
##~##
டி
ட்டிடிங்... 'ஊட்டி நைட் ரவுண்ட்ஸ்!’ என்று குறுந்தகவல் உமிழ்ந்து கண் சிமிட்டியது மொபைல்.

மேட்டுப்பாளையத்தில் ஒரு 'போக்கு’ வண்டியைப் பிடித்து, ஊட்டி பஸ் ஸ்டாண்டில் கால்வைத்தபோது இரவு மணி 7. பகலில் பரபரப்பாக இருக்கும் ஊட்டியின் கமர்ஷியல் ரோடு இரவு 8.30 மணிக்கே இழுத்துப் போர்த்திக்கொள்கிறது. கோத்தகிரி சாலையில் 'ஹைமாஸ் லைட்’ உமிழும் வெளிச்சத்தில் கம்பீரமாகச் சிரிக்கிறது பொட்டானிக்கல் கார்டனின் முகப்பு. தகர டப்பாவுக்குள் நான்கைந்து கட்டைகளை எரித்துக் குளிர் காய்ந்துகொண்டு இருந்தார் இரவுக் காவலர் ஒருவர்.  

மலைகளின் அரசி இரவில் எப்படி?

'சேரிங் க்ராஸ்’ நீரூற்று அருகே ஆவி பறக்கும் இட்லிகள் தயாராக இருந்தன. 'இந்தக் குளிர்தான் எங்களுக்கு முதலீடு. நல்ல வியாபாரம்!’ என்று சிரிக்கிறார் கடைக்காரர். தலைகுந்தா நோக்கிப் பயணித்தோம். முதுமலையில் இரவுப் போக்குவரத்துக்குத் தடை என்பதால், கல்லட்டி சாலை முகப்பிலேயே வனத் துறை தடா போடுகிறது. வனத் துறை ஜீப் ஒன்றில் தொற்றி, கல்லட்டி சாலையில் இறங்கினால், அடர்வனம் எங்கும் கும்மிருட்டு. வண்டுகளின் தொடர் ரீங்காரம். தூரத்தில் ஓநாய் கூட்டத்தின் ஊளை... எங்கோ புதர்கள் மிதிபடும் சரசர சத்தம்... உடன் வந்த வனக் காவலர், 'பக்கத்துல யானைக் கூட்டம் வாக்கிங் போகுது!’ என்று பயம் புகட்டினார்.

நிசப்தமான பாதையில் மெதுவாக ஊர்ந்து முன் னேறியது  ஜீப். ஆம்... வனக் காவலர் சொன்னது உண்மைதான். குட்டி யானைகள் இரண்டும் பெரிய யானைகள் நான்குமாக நடு வழியில் நின்றுகொண்டு இருந்தன. 'பயப்படாதீங்க... வழக்கமா நிக்கிற யானைக் கூட்டம்தான்!’ என்றபடியே ஜீப்பை இடதுபுறம் இறக்கி, யானைக் கூட்டத்தைக் கடக்கிறார் டிரைவர். சிறிது தூரம்கடக்க, பெரிய தந்தத்துடன் யானை ஒன்று சாலையைக் கடந்தது. 'யானைகள் கூட்டமா நின்னாஆபத்து இல்லை. ஒற்றை யானைதான் டேஞ்சர். சிக்கிடக் கூடாது!’ என்கிறார் டிரைவர்.

மலைகளின் அரசி இரவில் எப்படி?

கூடலூர் தாண்டி, தொப்பக்காடு வன விலங்குக் காப்பகம். ஆறு சலசலக்கும் ஓசை. ''புலிக் கூட்டம் தண்ணி குடிக்க வரும். இங்கே இருக்கவே கூடாது!'' என்றபடியே வேகமாக வண்டியைச் செலுத்தினார் டிரைவர். ''இங்க  ஒரு காட்டு அம்மன் கோயில் இருக்கு. வீரப்பன் இருந்தப்ப, அதிரடிப் படையினரின் கண்காணிப்பையும் மீறி பூஜை போட்டுட்டுப் போயிடுவான்!'' என்று ஃப்ளாஷ்பேக்கினார் வனக் காவலர்.

  'ஆத்தா வையும்... ஊருக்குப் போறோம்!’ என்றபடி மீண்டும் ஊட்டி திரும்பினோம். நள்ளிரவு 2 மணி. உறைபனியிலும் ஸ்வெட்டர்களுடன் பீடி வலித்தபடி காத்திருக்கிறார்கள் ஆட்டோக்காரர்கள். குன்னூர் சாலையில் அருவங்காடு தாண்டி னால், நள்ளிரவிலும் தேவாலயம் தகதகக்கிறது. 'சைனா டவுன்’ மலையாளப் பட, இரவு ஷூட்டிங் ஷெட்யூலை முடித்துவிட்டு, கார் ஏறினார்கள் கேரள நட்சத்திரங்கள் திலீப்பும்-காவ்யா மாதவனும். குன்னூர் டவுன் முழுக்கச் சுற்றியதில் நடுநிசி நாய்கள் கூட கண்ணில்படவில்லை!

மர லாரி ஒன்று வந்தது. பாவப்பட்டு ஏற்றிக்கொண்டார் டிரைவர். விடியற்காலை 4.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் எங்களை உதிர்த்துவிட்டுப் போனது லாரி.

ஊட்டி அரசி... இரவில் இன்னும் அழகு!

- எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்