Published:Updated:

என் ஊர்!

''என்னைக் காப்பாற்றிய அம்மா!''

என் ஊர்!

''என்னைக் காப்பாற்றிய அம்மா!''

Published:Updated:
##~##
தா
ன் பிறந்து வளர்ந்த கிராமமான கலிங்கப்பட்டி பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ!

''எனது கிராமம் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் நிறைய. பொதுவாகவே, கிராமத்து அன்பை நகரத்தில் உணர முடியாது. நகரத்தில் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் பெயர்கூடத் தெரியாது. ஆனால், கிராமத்தில் ஏதோ ஒன்று என்றால், ஊரே ஒன்று திரண்டு வரும்!

என் ஊர்!

நான் பள்ளியில் படிக்கும்போது, திருவள்ளுவர் கழகத்தைத் துவக்கினேன்.  கல்லூரி யில் படிக்கும்போது, நானே அதற்குதலைமை தாங்கினேன். அப்போது, தவத்திரு குன்றக்குடி அடிகளாரை வரவழைத்து சொற்பொழிவாற்ற வைத்தது,  இப்பவும் மனதில் பசுமையான பதிவாக இருக்கிறது.

என் ஊர்!

எனது எட்டு வயசில், மகாத்மா காந்தியின் பேரன் கிருஷ்ணதாஸ் காந்தி, ஜெகந்நாதன் ஆகிய  இரண்டு பேரும்  பூமி தான இயக்கத்துக்கு ஆக  எங்கள் ஊருக்கு வந்தார்கள். அவர்கள் முன்னால் என்னைப் பேசவைக்க, என் ஆசிரி யர்கள் சட்டமுத்தன், மாணிக்கவாசகம் ஆகியோர் பயிற்சி கொடுத்தனர். கடை ஏழு வள்ளல்கள் பற்றி அங்கே நான் பேசியதுதான் என் முதல் மேடைப் பேச்சு. பிறகு பள்ளியிலும் கல்லூரியிலும் நாடகம், பேச்சுப் போட்டி என என் திறமைகளை வளர்த்துக் கொண்டேன்.

நான் பத்தாவது படித்து முடிக்கும் வரைக்கும் எங்க கிராமத்தில் மின்சார வசதி கிடையாது. அரிக்கேன் லாந்தர் வெளிச்சத்தில்தான் படிப்பேன். 4 மணிக்கு அப்பா என்னை எழுப்பிவிடுவார். அம்மா சுடச் சுட டீ போட்டுத் தருவார்.    

எங்கள் கிராமத்தில் கண்மாய்க் கரைதான் எனக்கு மிகவும் பிடித்த இடம். மாலை வேளைகளில் அங்கு காலாற நடந்துகொண்டே படிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல, மரக் கிளையில் ஏறி அமர்ந்து படிப்பேன். எங்கள் ஊர் கண்மாயில் கிடைக்கும் கெளுத்தி மீன் அலாதி சுவையுடன்  இருக் கும். அதுவும் என் அம்மாவின் கைப்பக்கு வத்தில் அந்தக்  குழம்பு புளிப்பும் இனிப்புமாக நாக்கை கட்டிப் போட்டுவிடும். ஆர்.வி.எஸ்.சுப்பாராவும் நானும் நல்ல நண்பர்கள். ஒரு  வாலிபால் டீம் வைத்திருந்தோம்.   மாடசாமி, அலெக்ஸாண்டர், சுலைமான் போன்றோர் அவ்வப்போது வந்து விளையாடுவார்கள்.  கேலியும் சிரிப்புமாக ஒவ் வொரு நாளும் எங்களுக்குப் பொழுது போகும்.

எனக்கு நுங்கு சாப்பிடப் பிடிக்கும். எங்கள் நஞ்சையில் கரும்பு ஆலை இருந்தது. மாட்டை வைத்து அந்த ஆலையில் கரும்பு பிழிவார்கள். கரும்பு சாற்றில் நுங்கை வெட்டிப் போட்டு சாப்பிட்டால், அவ்வளவு ருசியாக இருக்கும். அதோடு, கொஞ்சம் பதநீரையும் சேர்த்துக் கொள்வோம். கோடை காலத்தில் அதன் ருசியே தனி.

எனக்கு விவசாய வேலைகள் எல்லாம் அத்துப்படி. கமலை இறைப்பேன். உழவு அடிப்பேன். தண்ணீர் பாய்ச்சுவேன் மண்வெட்டியை வைத்து நிலத்தை சமப்படுத்துவேன். விவசாய வேலை செய்யும்போது வரு கிற வியர்வையின் மணம், சுகம்!  

வீட்டில் அனை வரும் என் மேல் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். நான் பள்ளிக்குச் செல்லும்போது திருக்கு செம்பில் வெந்நீர் எடுத்துக்கொண்டு  பெரியசாமி என்பவர் என்னுடனே வருவார்.  நான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால், அதில் தான் குடிக்க வேண்டும். அந்த அளவுக்குக் கட்டுப்பாடுகள்.  

அப்போது நான் சினிமாவுக்கெல்லாம்  போகவே முடியாது. எங்கள் ஊரில் பீடி கம்பெனிக்காரர்கள்தான் விளம்பரத்துக்காக சினிமா காட்டுவார்கள். 'வாழப் பிறந்தவள்’ என்ற சினிமாவை, ராமகிருஷ்ணா பீடி கம்பெனிக்காரர்கள் ஊரில் ஓட்டினார்கள். அந்தப் படத்தையும் கொஞ்ச நேரம்தான் பார்த்தேன். முதன்முதலாக நான் பார்த்த படம் அதுதான். வீட்டில் திட்டுவார்களே என்ற பயத்தில் பாதியிலேயே வீட்டுக்கு ஓடி வந்தேன். வீட்டுக்குள் நுழையும்போதே அப்பா பார்த்துவிட்டார். கோபத்தில் கதவை அறைந்து சாத்திவிட்டார். பயங்கரமாக நடுங்கிவிட்டேன். அப்புறம் அம்மாதான் அப்பாவை சமாதானம் செய்து, என்னை அவர் கோபத்தில் இருந்து காப்பாற்றினார்கள்.

என் ஊர்!

அப்படி இருந்த நான் பிறகு வீட்டுக்குத் தெரியாமல் படம் பார்க்கத் துவங்கினேன். பொன்கூடலிங்கம் என்ற பள்ளிக்கூட எழுத்தர் ஒருவர் எனக்கு நண்பர் ஆனார். அப்போது என்னிடம் சைக்கிள் இருந்தது. அதை தொழுவம் ஓரமாக நிறுத்தி இருப்பேன். இரவுக் காட்சி பத்தரை மணிக்குத்தான் போடுவாங்க. கிராமம் அடங்கினதும் சுவர் மீது ஏறி நடந்து கேட்டைத் தாண்டிக் குதித்து, சைக்கிளை அழுத்தி பத்தே நிமிடங்களில் டூரிங் டாக்கீஸில் படம் பார்க்க  கூடலிங்கத்துடன் செல்வேன்.  

இப்படி என் இளமைக் காலத்தில் அன்பு, நட்பு, பயம், துணிச்சல் என நிறைய அனுபவங் களைக் கொடுத்து, இந்த வைகோவை உருவாக்கி யது அந்தக் கலிங்கப்பட்டிதான்!'

சந்திப்பு: ஆண்டனிராஜ், படங்கள்: ஜெ.தான்யராஜு