Published:Updated:

என் ஊர்!

''சோறு போட்டதால் ஸ்கூலுக்குப் போனேன்!''

என் ஊர்!

''சோறு போட்டதால் ஸ்கூலுக்குப் போனேன்!''

Published:Updated:
##~##
''வி
ருத்தாசலம் பக்கத்துல இருக்கிற முதனைதான் என் ஊர். அந்தப் பேர் காரணமே ஒரு சுவாரஸ்யமான கதை. திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ரொம்பவே விசேஷம்னு உங்களுக்குத் தெரியும். அந்தக் கார்த்திகைத் தீபத்துக்கு முதல் நெய் எங்க ஊர்ல இருந்துதான் போகுமாம். நடை பயணமா முதல் நாளே திருவண்ணாமலைக்குக் கிளம்பிப் போய், தீபம் ஏத்த நெய் தருவாங்களாம். அந்த 'முத நெய்’தான் பேச்சுவாக்கில மாறி, மருவித் திரிஞ்சு இப்போ 'முதனை’ ஆயிடுச்சாம். எங்க பாட்டி கதை கதையா இதைப் பத்திச் சொல்லும்.
என் ஊர்!

அதுமட்டும் இல்லாம, தைப் பூசத் திருவிழா எங்க ஊர்ல ரொம்ப விமரிசையா நடக்கும். எங்க வட்டாரத்தில ரெண்டு ஊர்லதான் தைப் பூசம் அமர்க்களப்படும். ஒண்ணு, வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்த வடலூர். இன்னொண்ணு, எங்க முதனை. எல்லோரும் காவடி எடுத்து ஆடி வர்றதைப் பார்த்தா ஜெகஜோதியா இருக்கும். அப்போ மதியம்  உச்சி வெயில்ல  கருட பகவான் வானத்திலே காட்சி தருவார். அந்தச் சமயத்தில் கோயில் குளத்தில் முருகனின் வேலை முழுக்காட்டு வாங்க. அப்படி ஒரு தைப் பூசத்தில்தான் நான் பொறந்தேன். அப்பா தைப்பூசம் திருவிழாவுக்குப் பறை அடிச்சுட்டு இருந்தாரு. அப்போ, அம்மாவுக்குப் பிரசவ வலி வரவும் பாட்டியே வைத்தியம் பார்த்துச்சாம். நான் பொறந்து மூணு மணி நேரம் கழிச்சுதான் அப்பாவுக்கு தகவலே போயிருக்கு. தைப் பூசத்துல பொறந்ததால, எனக்கு வேல்முருகன்னு பேர் வெச்சிட்டாங்க.

சிவபெருமானும் முருகனும்தான் எங்க ஊர்ல இப்பவும் பெரிய சாமிங்க. எங்க ஊர் காணிக் கல்லுகூட சிவலிங்கம் மாதிரிதான் இருக் கும். அப்புறம் முக்கியமான சாமிங்க செம்பனையாரும் வீரனாரும். ரெண்டும் காவல் தெய்வங்க. ஊரு வயக்காட்டுலே இருந்து மக்க மனுஷ வரைக்கும் காத்து நிக்கிற சாமிங்க. அவங்களுக்கு ரெண்டு வெள்ளைக் குதிரை இருக்கும். அந்த குதிரைகளைத்தான் வயக்காட்டைக் காவல் காக்க அனுப்புவாங்களாம்.  

என் ஊர்!

ஊரே வெவசாய பூமிதான். மொச்சை, துவரை, அவரை, எள்ளு, கடலை, கம்பு, கேழ்வரகு, மக்கா சோளம்னு பயிருங்க விளையும். எங்கே பார்த்தாலும் புளிய மரம் இருக்கும். லீவு நாள்ல புளிய மரத்தை உலுக்கி புளியம் பழம் பொறுக்கிட்டுத் திரிவோம். நடவு, அறுவடைன்னு எதுக்கெடுத்தாலும் பாட்டுதான். அவ்வளவு ஏன், தண்ணி எடுத்துட்டு தலையில ஒரு குடம், இடுப்புல ஒரு குடம் வெச்சிட்டு வரும்போதும் பாட்டுதான். அந்த பாட்டெல்லாம் கேட்டுக் கேட்டு வளர்ந்துதான் இப்போ நானும் பாடறேன்.

பொங்கல் சமயத்துல  ஊரு பொம்பளைங்க சாமந்திப் பூவால ஜடை பின்னி, உச்சியிலே மரிக்கொழுந்து வெச்சுக்கிட்டு வருவாங்க. அப்புறம் கோயில் முன்னாடி கும்மிப் பாட்டு பாடுவாங்க. பாட்டும் கூத்துமா திருவிழாக் கோலம்தான். இவ்வளவு இருந்தும் எங்க ஊருல படிக்க பள்ளிக்கூடம் இல்லாமஇருந்ததுதான் சோகம். நான் படிச்ச பள்ளிக்கூடத்துக்கு கட்ட டம் கிடையாது. மரத்தடியில்தான் வகுப்பு நடக்கும். அப்படி ஒருநாள் என்னோட அண்ண னைப் பார்க்கப் போனப்ப, எண்ணிக்கைக்கு ஆள் வேணும்னு சொல்லி வாத்தியார் என்னை ஸ்கூல்ல சேர்த்துக்கிட்டாரு.

மதியம் சாப்பாடு கிடைக்குதேன்னு நானும் சேர்ந்துட்டேன். அப்புறம் மதியச் சாப்பாடை வீட்டுக்குக் கொண்டுவந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தருவேன். அப்புறம் ஞாயித்துக் கிழமை லீவு விட்டாகூட, 'ஏன்டா இன்னிக்கு ஸ்கூலுக்குப் போகலையா’ன்னு கேக்க ஆரம்பிச் சாங்க. அதே மாதிரி ஊருல ஆஸ்பத்திரியும் கிடையாது. யாருக்காவது பாம்பு கடிச்சாக்கூட மாட்டு வண்டியில போட்டு, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோறதுக்குள்ள, நிறையப் பேர் செத்துருக்காங்க. எங்க ஊருல முந்திரி மரம் அதிகம். லீவு நாள்ல முந்திரிப் பழம் பொறுக்கிக் கொடுக்கப் போவோம். அப்படிப் போனா, ஒரு நாளைக்கு சம்பளம் எட்டு ரூவா கிடைக் கும்.

சனி, ஞாயிறுக்கு ஆடு மேய்க்கவும் போவோம். எதுக்குமே லாயக்கு இல்லைன்னா 'மாடு மேய்க்கத்தான் லாயக்கு’, 'ஆடு மேய்க்கக் கூட யோக்கியதை இல்லை’ன்னு கூசாமச் சொல்லிடறாங்க. அதுல என்னங்க அவமானம் இருக்கு? ஒரு வாயில்லா ஜீவனைக் கூட்டிட்டுப் போயி, சாப்பிட வைக்கிறதுல என்ன கேவலம் இருக்கு? அதுவும் இல்லாம, அப்பதான் மர நிழலில் உக்காந்து படிக்கிறதுக்கும் ஏதுவா இருக்கும். இப்படித்தான் இருந்தது என்னோட சின்ன வயசு ஊர் வாழ்க்கை. ஆனா, இன்னிக்கு நிறைய மாறி இருக்குங்க. நிறைய பேர் நல்லா படிச்சி இருக்காங்க. டாக்டர், இன்ஜினீயர்னு ஆகியிருக்காங்க. செல்போன் வந்தாச்சு, கார், டூவீலர் வந்தாச்சு. மக்க மனுஷங்க மத்தியில நிறைய மாற்றம் வந்தாச்சு. எவ்வளவு மாற்றம் வந்தாலும், எங்க ஊரு எங்க ஊருதான். என்ன சொல்றீங்க?''

- படம்: க.பூபாலன்