Published:Updated:

தும்பிக்கை டீச்சர்... துள்ளும் பொடியன்கள்!

அணைக்கட்டுச்சேரி

தும்பிக்கை டீச்சர்... துள்ளும் பொடியன்கள்!

அணைக்கட்டுச்சேரி

Published:Updated:
##~##
''குவா குவா வாத்து
குள்ளமணி வாத்து
மெள்ள உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்னமணி வாத்து!''

- நடன அசைவுகளோடு பாடும் டீச்சரைப் பார்த்துக்கொண்டே குதூகலமாக குதித்துப் பாடுகிறது அந்த 'ஒண்ணாப்பு’க் கூட்டம். அடுத்த வகுப்புக்குள் எட்டிப் பார்த்தால், தரையில் விரித்துவைக்கப்பட்ட நியூஸ் பேப்பரின் மேல் 'லேப்டாப்’பை திறந்துவைத்து பூ, பொம்மை, கோமாளி, குருவி... என்று மனதில் பட்டதை எல்லாம் மவுஸ் பிடித்து வரைகிறார்கள் 'ரெண்டாப்பு’ப் பிள்ளைகள்!

தும்பிக்கை டீச்சர்... துள்ளும் பொடியன்கள்!

பாரதிராஜா பட டீச்சர்களை மனதில் வைத்துக்கொண்டு இப்போது பள்ளிக்கூட வாசலை மிதித்த நாமும் ஏமாந்துதான் போகிறோம்! குழந்தைகளோடு குழந்தையாகக் குதித்துச் சிரித்து ஆட்டமும் பாட்டமுமாகஉற்சாக மாகப் பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் பட்டாபிராம் அருகே உள்ள 'அணைக்கட்டுச் சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி’ ஆசிரியைகள்!

''யானை வருகுது... யானை வருகுது...'' என்று ராகம் போட்டுப் பாடும் டீச்சர், தனது கையை துதிக்கையாக மாற்றிக் குனிந்தவாறே, யானை நடை பயில.... கோரஸ் ஆகப் பாடும் குழந்தைகளும் குட்டி யானைகளாக மாறி, உற்சாகத்தில் பிளிறுகிறார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலும் இதே கலகல ஸ்டைலில் அமர்க்களப்படுகிறது செயல் வழிக் கற்றல் பாடங்கள்!

அடுத்தக்கட்டமாக ஒரு குழுவில், கத்தையான டம்மி ரூபாய் நோட்டுகளை வைத்து கணக்குப் பாடம் நடக்கிறது.

தும்பிக்கை டீச்சர்... துள்ளும் பொடியன்கள்!

''கண்ணா... என்கிட்டே இருந்து பத்து ரூபாயை நீ கடன் வாங்கி இருக்கே. அப்படின்னா மொத்தம் உன்கிட்டே எவ்வளவு ரூபாய் இருக்குன்னு சொல்லு பார்ப்போம்?'' என்று கடன் கொடுத்த டீச்சர் கேள்வி கேட்க, பணப் பதற்றத்தில் பதிலை மாற்றி மாற்றிச் சொல்கிறார்கள் பொடியன்கள். இன்னொரு பக்கம் பேப்பர் பென்சில் சகிதம் குப்புறக் கவிழ்ந்து, 'தட்டாம் பூச்சி, பூசணிக்காய், உண்டியல்...’ என்று வெரைட்டியாகக் கிறுக்குகிறது சுட்டிகள் குரூப்.

''எங்கள் பள்ளியை முன்மாதிரிப் பள்ளியாகத் தேர்ந்தெடுத்து, ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்தெல்லாம் வந்து, அதிகாரிகள் பார்வையிட்டார்கள். பிரிட்டிஷ் கவுன்சிலின் சிறப்பு அழைப் பாளராக எங்கள் பள்ளி ஆசிரியை நிர்மலா லண்டனுக்குச் சென்று வந்துள்ளார். இதேபோல் லண்டனில் இருந்தும் ஓர் ஆசிரியர் குழு எங்கள் பள்ளிக்கு வருகை தரவிருக்கிறது. நமது கல்வி, கலாசாரம் பற்றிய விழிப்பு உணர்வை விளக்க எங்களுக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பு இது!'' - பெருமிதத்தில் பூரிக்கிறார் தலைமை ஆசிரியை பூங்கோதை!

பால்ய காலப் பள்ளி நினைவுகள் அலைமோத 'அணைக்கட்டுச்சேரிப் பள்ளி’யை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் நிற்கிறோம் நாம்!

- த.கதிரவன்

ஆட்டோ ஸ்டாண்ட் அசத்தல்!

தும்பிக்கை டீச்சர்... துள்ளும் பொடியன்கள்!

'அடடே’ போடவைக்கிறது தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனை ஆட்டோ ஸ்டான்ட். அதன் தலைவர் ரவிக்குமார்,

''எங்க ஸ்டான்டுல வேலை செய்யும்போது தண்ணி, தம், பாக்குன்னு எதையும் தொடக்கூடாது. இதை மீறினால் ஸ்டான்டில் இருந்து கல்தா கொடுத்துடுவோம். ஸ்டான்டுக்கு வந்த சீனியாரிட்டிப் படி, அடிதடி இல்லாமல் பயணிகளை சவாரி ஏற்றுவது, தவற விட்ட பணம், நகைகளை பயணிகளிடம் ஒப்படைப்பது என இந்த ஏரியாவில் எங்களுக்கு ஏகப்பட்ட நல்ல பெயர். தினமும் 15 ரூபாய் சந்தா வசூலிச்சு மாசம் 450 ரூபாய்னு சேர்ப்போம். அவசரம், குடும்பச் சூழல்னு கஷ்டப்படுறவங்களுக்கு அதைக் கொடுத்து உதவுவோம். எங்க ஒற்றுமை, ஒழுக்கத்தைப் பாராட்டி யூனிஃபார்ம் தந்தது, அப்பல்லோ மருத்துவமனை!'' என்கிறார் பெருமிதமாக.

'பாட்ஷா’ ரஜினியை பார்த்த  மாதிரி இருக்கே பாஸு!

- க.நாகப்பன்,படம்: அ.ரஞ்சித்