Published:Updated:

காஞ்சிக் கூத்து!

காஞ்சிக் கூத்து!

காஞ்சிக் கூத்து!

காஞ்சிக் கூத்து!

Published:Updated:
##~##
தி
ரைப்படங்களும் தொலைக்காட்சியும் இந்த மண்ணோடு இணைந்த கலைகள் பலவற்றை மறக்கடித்துவிட்டன. சென்ற வாரம் காஞ்சிபுரத்தில் நடந்த கூத்து மரபு திருவிழா, அந்த ஆதங்கத்துக்கு ஒருநாள் ஆறுதல் அளித்தது. சங்கீத நாடக அகாடமியும், காஞ்சிபுரம்-புஞ்சரசந்தாங்கள் கட்டைக் கூத்து சங்கமும் இணைந்து ஆறு நாட்கள் நடத்திய இந்தத் திருவிழாவில் 12 குழுக்கள் பங்கேற்க, தெருக்கூத்து பட்டையைக் கிளப்பின.

''முன்னெல்லாம் வெகு விமரிசையா கூத்து நடக்குமுங்க. கூத்து நடக்குற ராவுல மொத்த ஊரும் தெரண்டு வந்து வேடிக்கைப் பார்க்கும். எடம் பிடிக்கிறதுக்கே போட்டா போட்டியா இருக்கும். ஆனா, இப்ப அப்டிலாம் இல்லீங்க. ரிக்கார்டு டான்ஸும் ஆர்கெஸ்ட்ராவும் திருவிழாவுல போட ஆரம்பிச்சுட்டாங்க. இருந்தும் எங்க ஊருல விடாப்பிடியா இந்தக் கூத்து நிகழ்ச்சியை 20 வருஷங்களா பண்ணிட்டு இருக்கோம்!'' என்கிறார்கள் உள்ளூர்ப் பிரமுகர்கள்.

காஞ்சிக் கூத்து!
காஞ்சிக் கூத்து!

''கூத்துத் திருவிழா நடத்துவது மட்டும் இல்ல... எங்க சங்கத்தின் மூலமா இந்தக் கிராமத்திலேயே கூத்துப் பயிற்சியும், கூத்துக் கலை குருகுலமும் இயங்குகிறது. 12-ம் வகுப்பு வரை இங்கு தங்கி படிப்பதற்கு அனைத்து வசதிகளும் குருகுலம் வழங்குகிறது. படிப்பினூடே தினமும் கூத்துக்கலை பயிற்சி, அது தொடர்பான பயிலரங்குகளும் நடப்பதால் இந்தக் குருகுலத்தின் மூலம் நமது கலையை அழிந்து விடாமல் காப்பாற்றி வருகிறோம்!'' என்கிறார் இச் சங்க அமைப்பாளர்களில் ஒருவரும் கூத்துக் கலைஞருமான ராஜகோபால்.

ந.முத்துசாமி, பிரளயன், அ.ராமசாமி, பிரசன்னா ராமஸ்வாமி, தேவிகா போன்ற ஆளுமைகளின் ஒருங்கிணைப்பில் வந்திருந்தனர் கூத்து நடிகர்கள். இதனை சங்கீத நாடக அகாடமி ஏற்று நடத்தியதால் கூடுதல் கவனம் பெற்றது.

''சித்திரை தொடங்கி ஆறு மாசத்துக்கு அப்டி இப்டி எங்காவது கூத்து போட கூப்பிடுவாங்க. தொடர்ந்து நிகழ்ச்சி இருக்காதுதான். இல்லாத நாட்களில் கூலிவேலை, விவசாயம்னு மாறிக்கிட வேண்டியதுதான். இந்த கலை ரத்தத்துலயே ஊறிடுச்சுங்க. அவ்வளவு சீக்கிரம் வுட முடியாது!'' என்கிறார் ஏழுமலை என்ற கூத்துக் கலைஞர்.

''கர்ண மோட்சம் கூத்து மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் நடத்தப்படக் கூடியது. அதை இரண்டு மணி நேரமாகச் சுருக்கிக் கொடுக்கும்போது சமகால பார்வையாளன் அதை நோக்கி தன் கவனத்தைத் திருப்பத் தொடங்குவான். இதுவும் ஒரு கலையியல் பொழுதுபோக்கு அம்சமாக மாறும். மேலும் இரண்டு மணி நேரமாகச் சுருக்கும்போது கூத்து தொய்வில்லாமல் சுவாரஸ்யமாகவும் இருக்கும்!'' என்பது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் கருத்து.

காஞ்சிக் கூத்து!

''இப்படியாக இரண்டு மணி நேரத்துக்குள் நாம் மொத்தக் கதையையும் சொல்லிவிட முடியாது. அதே சமயம் இந்த இரண்டு மணி நேர வடிவத்துக்குள் சொல்லவேண்டிய சங்கதிகளை கூத்துக் குழு கலைஞர்கள் மட்டுமே முடிவு செய்யாமல், இக்கலை தொடர்பான ஆய்வாளர்களும், நாடக ஆளுமைகளின் பங்களிப்போடும் செய்யப்படும்போதுதான் இந்த முயற்சி முழுமையடையும். அது நடைமுறைக்கு வரும் பட்சத்தில், வெகுஜன ரசனையில் ஒரு மாற்றத்தையும் பள்ளி, கல்லூரிகள் வரை மிக எளிதாகவும் கூத்துக் கலையை நகர்த்திச் செல்ல முடியும்!'' என்கிறார் நாடக நடிகரும், முத்துசாமியின் மாணவருமான தம்பி சோழன்.

ஆறு நாட்களும் இரவில் கூத்தும் அடுத்த நாள் அது தொடர்பான கலந்துரை யாடலுக்கும் ஏற்பாடு செய்திருந்தது சங்கீத நாடக அகாடமி. அழிந்து வரும் பல நாட்டுப்புறக் கலைகளை, அடையாளப் படுத்தி வரும் தேசிய அளவிலான நிறுவனம் இது. ''இன்னும் எவ்வளவோ நிகழ்த்தப்படாத, அறியப் படாத பல கூத்துக்கள் இப்போதும் கிராமங்களில் இருக்கவே செய்கின்றன. இது மாதிரியான முயற்சிகள் மூலம் மட்டுமே அவற்றை ஒருங்கிணைக்க முடிகிறது. இந்த இரண்டு மணி நேரம் என்பது கூத்துக் கலையை எல்லா மட்டத்திலும் கொண்டு செல்வதற்கான அறிமுகமாகக் கொள்ளலாம். ஆனால், அதே சமயம் கூத்துக் கலையை முழுமையாக ரசிக்க வேண்டுமெனில் கண்டிப்பாக நீங்கள் கிராமப்புறங்களில் நடத்தப்படும் கூத்து இரவுகளை தேடித்தான் செல்ல வேண்டும்!'' என்கிறார் ந.முத்துசாமி.

- நீரை.மகேந்திரன்