Published:Updated:

என் ஊர்!

சென்னை 28-ம்... தெரு கிரிக்கெட்டும்!

என் ஊர்!

சென்னை 28-ம்... தெரு கிரிக்கெட்டும்!

Published:Updated:
 ##~##
''செ
ன்னையில் ராஜா அண்ணாமலைபுரம். அதாவது, 'சென்னை 600028’தான் நான் பிறந்த ஏரியா. திரும்பிய இடம் எல்லாம் ஸ்ட்ரீட் கிரிக்கெட், ஃப்ளட் லைட் டோர்னமென்ட்தான். 'எப்பப் பார்த்தாலும் ரோட்ல கிரிக்கெட் ஆடிட்டே இருக்கியேடா. உருப்படாமப் போகப்போறே’ன்னு அம்மா திட்டிட்டே இருப்பாங்க. ஆனா, இப்போ 'நீ திட்டின அதே தெரு கிரிக்கெட்டை வெச்சு டைரக்டர் ஆகிட்டேன், பாத்தியா’ன்னு அம்மாவை கலாய்ப்பேன். 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா’ன்னு எங்கப்பா பாட்டு போட்டது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!'' -சிலிர்க்கும் வெங்கட் பிரபு சென்னையின் பெருமை பேசுகிறார்.

''எங்கப்பாவுல ஆரம்பிச்சு இங்கு உள்ள முக்கால்வாசி இயக்கு நர்கள் மதுரை மண்ணைச் சேர்ந்தவங்கதான். 'உங்கப்பா மதுரைன்னா நீயும் மதுரைக்காரன்தான்’னு என்கிட்ட சொல்வாங்க. 'எங்கப்பா வேணும்னா மதுரைக்காரரா இருந்துட்டுப் போகட்டும். நான் பக்கா சென்னை சிட்டிசன்’னு பதிலுக்கு மல்லுக் கட்டுவேன்.

என் ஊர்!

மயிலாப்பூர் லஸ் சிக்னல் பக்கத்துல உள்ள வித்யா மந்திர்தான் நான் படிச்ச ஸ்கூல். நான் எட்டாவதோ ஒன்பதாவதோ படிச்சுட்டு இருக்கும்போது, அஜீத் சாரும் எஸ்.பி.பி.சரணும் பிரைவேட் டுடோரியல்ல படிச்சுட்டு இருந்தாங்க. அஜீத் சார் அப்ப எனக்கு அவ்வளவு க்ளோஸ் கிடையாது. ஆனா, அவரும் சரணும் ரொம்ப க்ளோஸ். ரோட்ல போயிட்டு இருக்கும்போது எங்கேயாவது சரணைப் பார்த்தா, 'சரண்ணா’ன்னு கூப்பிடுவேன். 'டேய் போடா... போடா... போடா... நிக்காத போ’ம்பாரு. 'ஓ.கேண்ணா... ஓ.கேண்ணா... பை... பை’ன்னு சொல்லிட்டே புத்தகப் பையைத் தூக்கிட்டு ஓடுவேன்.

'சென்னை-28’ ஷூட்டிங் சமயம் சோமசுந்தரம் மைதானத்தில் நின்னுக்கிட்டு, 'திரும்பவும் போய் எங்கப்பாகிட்ட என்னால காசு கேட்க முடியாதுடா’ன்னு சரண் அழுததும், 'எப்படியாவது கேளுங்க. இல்லைன்னா படத்தை முடிக்க முடியாது’ன்னு பதிலுக்கு நான் அழுததும் இப்பவும் மனசில் நிழலாடுது.

சென்னையில் எனக்கு ரொம்பப் பிடிச்சது ராத்திரி கையேந்தி பவன்கள். 'பொன்னுரங்கம் பிரியாணி’ன்னு மந்தைவெளி டெப்போவுக்குப் பக்கத்தில் ஒரு கையேந்தி பவன் இருக்கு. அம்சமா இருக்கும்.

'சென்னை-28’ ஷூட்டிங் சமயம் பல தடவை யூனிட்டை அங்கே தள்ளிட்டுப் போயிடுவேன். க்ரீன்வேஸ் ரோட்ல ஒரு வயசான பாட்டி தள்ளு வண்டியில் இட்லி, தோசை, முட்டை தோசை, கறி ஃப்ரை, சால்னான்னு பல அயிட்டங்கள் விப்பாங்க. நாங்க அதை 'ஆத்தாக் கடை’ன்னு சொல் வோம். ரோட்ல கிரிக்கெட் ஆடிட்டு, சாயங்காலம் ஏழெட்டு மணிக்கு அங்கே சாப்பிட்டுட்டு அப்படியே வீட்டுக்குப் போயிடுவோம். அந்த 'ஞாபகம் வருதே’தான் ஆர்குட்ல 'சென்னை கையேந்தி பவன்ஸ்’, 'சென்னை ஸ்ட்ரீட் கிரிக்கெட்’னு கம்யூனிட்டிகள் ஆரம்பிக்கக் காரணம்.

என் ஊர்!

வித்யாமந்திர் ஸ்கூலுக்குப் பிறகு, செயின்ட் பீட்ஸ்ல ஒரு வருஷம் படிச்சேன். அங்க சூர்யா எனக்கு ஒரு வருட சீனியர். அவர் தம்பி கார்த்தி எனக்கு ஒரு வருட ஜூனியர். ஆனால், என்னைப் பார்க்கும்போது அவங்களைவிட அஞ்சாறு வருஷம் பெரியவன் மாதிரி தெரியுறேன்ல? பக்கத்து கிளாஸ் வாத்தியார்கிட்ட டியூஷன் வெச் சேன்னு சொல்லி என் கிளாஸ் வாத்தியார் என்னை ஒன்பதாம் வகுப்புல ஃபெயிலாக் கிட்டாரு. விரக்தியின் உச்சத்தில் இருந்த சமயம் அது. அப்ப பாஸ்டன் ஸ்கூல் உள்ளேயே 10-ம் வகுப்பை பிரைவேட்டா நடத்திட்டு இருந்தாங்க. 'எட்டாவது சர்டிஃபிகேட் இருந்தாபோதும்... டைரக்டா டென்த் எழுதலாம். நோ பிராப்ளம்’னு புதுப்பாதை காட்டினாங்க.  பாஸ்டன் ஸ்கூல்ல ஒரு முறை ப்ரேயர்ல மொத்த ஸ்கூலுக்கு முன்னாடியும் முட்டி போடச் சொன்னாங்க. அப்ப அங்க கார்த்திக் ராஜா ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்துச்சு. முட்டி போட்டு இருந்த என்னைப் பார்த்ததும் 'குடும்ப மானத்தை கெடுக்குறதுக்குன்னே  வந்திருக்கியேடா’ங்ற மாதிரி முறைச்சுது.  நான் உடனே, முகத்தைப் பாவமா வெச்சுக்கிட்டு 'கார்த்தி... வீட்ல சொல்லிடாத’ன்னு கெஞ்சினேன். பிறகு ஹைஸ்கூல், யுனிவர்சிட்டி எல்லாம் லண்டன்லதான் படிச்சேன். ஆனா, ஒவ்வொரு வருஷமும் கண்டிப்பா சென்னை வந்துடுவேன்.

நான் கல்யாணம் பண்ணிருக்கிற பொண்ணு பிறந்து வளர்ந்ததும் சென்னை-28 ஏரியாதான். ஆனா, கல்யாணத்துக்கு முன்னால அவங்களை அந்த ஏரியாவுல நான் பார்த்ததே இல்லை. சென்னை-28க்கும் எனக்கும் அந்த அளவுக்கு நெருங்கிய பந்தம்.

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை 28-ல் இருந்த எங்க சொந்த வீட்டில்தான். பணப் பிரச்னையால் அதை வித்துட்டோம். அதே இடத்தில் அப்பா-அம்மாவுக்கு ஒரு வீடு வாங்கித் தரணும்ங்றதுதான் இப்போ  என்னோட லட்சியம். கூடிய சீக்கிரமே அது நிறைவேறும்னு நம்புறேன்!''

- ம.கா.செந்தில்குமார்