சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

''பிள்ளையார்தான் என் பிரியமான தோழன்!''

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

''பிள்ளையார்தான் என் பிரியமான தோழன்!''

''உங்களுக்கு ஒரு செய்தி சொல்லட்டுமா? எனக்கு நல்லாச் சாப்பிடவும் பிடிக்கும்; நல்லாத் தூங்கவும் பிடிக்கும்'' - கலகலவெனச் சிரிக்கிறார் செய்தி வாசிப்பாளர் ஜெயஸ்ரீ சுந்தர். குழந்தையை எல்.கே.ஜி.க்கு அனுப்பிவிட்டு வருகிற அம்மா மாதிரி இருக்கிறார் ஜெயஸ்ரீ. ஆனால் மூத்த மகள் எம்.ஓ.பி.யில் எலெக்ட்ரானிக் மீடியா இறுதியாண்டும், இளைய மகள் பத்தாவது வகுப்பும் படிக்கிறார்களாம்!

இளமையின் ரகசியம் பகிர்கிறார் ஜெயஸ்ரீ சுந்தர்.

''தாத்தா, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வை எல்லாருக்கும் தெரியும். அவர் சொல்லிக்கொடுத்ததுதான் 'விரும்பினதைச் சாப்பிடு; போதுமான அளவுக்குத் தூங்கிடு!’ இதைத் தாரக மந்திரமாவே ஏத்துக்கிட்டு, இன்னிக்கும் கடைப்பிடிச்சுக் கிட்டுவரேன்.

அப்புறம், தினமும் காலைல பல்தேய்க்கற மாதிரி, ராத்திரி படுக்கும்போது, மொத்தப் பிரச்னைகளையும் தூக்கி வெளியே வீசிட்டுத்தான் தூங்கப்போவேன். என் கணவர்லேருந்து குழந்தைகள் வரைக்கும் எல்லாரும் கேக்கற கேள்வி, 'அது எப்படி, படுத்ததும் தூக்கம் வந்துருது உனக்கு’ங்கறதுதான்! ஒருநாள் முழுசும் உழைக்கறதுக்கான தெம்பும் ஊக்கமும் தூக்கத்துலதான் இருக்கு. பிரச்னை ஒண்ணு இருந்தா, அது ஒரு முடிவுக்கு வந்தே தீரும். சொல்லப் போனா, 'தீதும் நன்றும் பிறர் தர வாரா’ங்கறது சத்தியமான வார்த்தை. ஆக, பிரச்னையை நாமளே உருவாக்கிட்டு, அதுக்குள்ளே சிக்கித் தவிக்கறதும் கத்திக் கூப்பாடு போடுறதும் அவசியமே இல்லை. நமக்கு வர்ற நல்லது கெட்டது எல்லாத்துக்குமே நாமதான் பொறுப்பு. அதனால, நல்ல, தெளிவான, நிதானமா சிந்திக்கிற புத்தியைக் கொடு; உழைக்கறதுக்குத் தெம்பைக் கொடு’ங்கறதுதான் என் பிரார்த்தனை!

##~##
தினமும் தியானம், வாரத்துக்கு ரெண்டு தடவை யோகான்னு ஒருபக்கம்; தினமும் ஆயில் புல்லிங்; சனிக்கிழமைகள்ல எண்ணெய்க் குளியல்னு அதுவொரு பக்கம்; காலைல டிபனுக்குப் பதிலா ஓட்ஸ் கஞ்சி; அப்புறம் பசிச்சா, முறுக்கு, தட்டை, சீடைன்னு எதுவும் சாப்பிடுறது இல்லை. திராட்சை மாதிரி ட்ரை ஃபுரூட்ஸ்தான் எடுத்துக்குவேன். உணவுங்கறது கிட்டத்தட்ட அம்மா மாதிரி. அம்மா அன்பு கொடுக்கறா; உணவு தெம்பு கொடுக்குது. அப்படியிருக்கும்போது, உணவை பயந்து பயந்து சாப்பிடுறது, அம்மாகிட்ட பயந்து நடுங்கி நிக்கிற மாதிரி! என் மகள்களுக்கு நான் தோழி; எங்களுடைய உணவின் ஒவ்வொரு கவளமும் சத்து மாத்திரைகள்!

இன்னொரு விஷயம்... வீட்ல போர்டு மாட்டி, அதுல சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, திருக்குறள்னு தினமும் ஒரு வாசகம் எழுதி வைக்கறதும் ராத்திரில ஒருமணி நேரமாவது புத்தகங்கள் படிக்கறதும் என் வழக்கம். புத்தகங்கள் ஒருவகையில டாக்டர் மாதிரி; மனசையும் உடம்பையும் மலர்ச்சிப்படுத்துற, மனநல மருத்துவர், புத்தகம்! 'எல்லாம் எனக்குத் தெரியும்’னு நினைச்சுட்டாலே அதன் அடுத்தடுத்த விநாடிகளுக்கு வேலையே இல்லாமப் போயிருது. 'இன்னும் இன்னும் நிறையவே இருக்கு; உலகம் ரொம்பப் பெருசு’னு கத்துக்கறதுக்கு இறங்கிட்டா, தெரிஞ்சுக்கறதுல ஆர்வம் வந்துட்டா, ஒவ்வொரு விநாடியும் சொர்க்கம்; அடுத்தடுத்த நகர்வுகள்ல கொட்டிக்கிடக்குது சந்தோஷப் பூக்கள்!'' என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் ஜெயஸ்ரீ சுந்தர்.

''பிள்ளையார்தான் என் பிரியமான தோழன்!''

''திருச்சில கீழ ஆண்டார் வீதியிலதான் எங்க வீடு. ஜன்னல்லேருந்து பார்த்தா, உச்சிப் பிள்ளையாருக்கு தீபாராதனை காட்றது தெரியும். யார் தயவும் இல்லாம, யாரும் சொல்லிக் கொடுக்காம, நானே பார்த்துத் தெரிஞ்சுக்கிட்ட விஷயம் இது. அன்னிலேருந்து பிள்ளையார்தான் எனக்கு பிரியமான தோழன்! அதுக்கு அப்புறம் சென்னை ஆழ்வார்பேட்டைக்கு குடிவந்தப்ப, எங்க தெருவுலயே பிள்ளையார் கோயிலும் இருந்துச்சு. வீட்லேருந்து பார்த்தா கோயில் கோபுரம் தெரியும்.

கல்யாணமாகி, இங்கே வந்தா... எதிர்ல 'என்ன... என் ஏரியாவுக்கு வந்துட்டியா?’ன்னு கேக்கறார் ஸ்ரீநவசக்தி விநாயகர். ஆக, தெய்வம் நமக்குத் துணை இருக்கும்போது, கவலையும் துக்கமும் எம்மாத்திரம்? எல்லாத்தையும் பிள்ளையார் பார்த்துப்பார்'' -பூஜையறையில், மனைவி ஸித்தியை மடியில் வைத்தபடி சிரிக்கும் ஸ்ரீவிநாயகரை வணங்குகிறார் ஜெயஸ்ரீ.

''பிள்ளையார்தான் என் பிரியமான தோழன்!''

''மூணாவது மாடியிலதான் வீடு. ஷாப்பிங் போனேன்; வெயிட்டான பொருள் கையில இருக்குன்னாத்தான், லிஃப்ட். மத்தபடி எப்போதுமே, அறுபது படியேறித்தான் வீட்டுக்கு வருவேன். ஒருவகையில, நான் வைச்சிருக்கற அலாரம் இது. மூணு மாடி ஏறி முடிக்கும்போது மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்கினா, 'ஏய் ஜெயஸ்ரீ... என்னாச்சு, உடம்பைக் கவனி’ன்னு உள்ளே இருக்கிற ஜெயஸ்ரீ, அலாரக் குரல் கொடுப்பா! நல்லவேளை... இதுவரை அலாரம் அடிக்கலை; கடவுளுக்கு நன்றி; முக்கியமா என் செல்லப் பிள்ளையாருக்கு!'' - தனக்கே உரிய புன்னகையுடன் தெரிவிக்கிறார் ஜெயஸ்ரீ.

அட... புன்னகையின் ஜொலிப்பில் தெரிகிறது, அவரது ஆரோக்கியப் பூரிப்பு.

- வி.ராம்ஜி,    படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்