இப்போ எப்படி இருக்கிறது சென்னை ஸ்டுடியோக்கள்?

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் - 8

- தமிழ்மகன்


கனவுத் தொழிற்சாலையின் ராஜபாட்டையாக இருந்தது சென்னை கோடம்பாக்கம் சாலை. வடபழனிக்கு மேற்கே சினிமா ஸ்டுடியோக்களும் லேப்களும் ரெக்கார்டிங் தியேட்டர்களும்தான். அதை சார்ந்த சங்கங்கள், அதைச் சார்ந்த தொழிலாளர்கள் வீடுகள், நடிகர்களின் வீடுகள் என்றே இருக்கிறது இப்போது. 80-கள் வரை வளசரவாக்கம். சாலிகிராமம் என்பதெல்லாம் வனாந்திரமான பகுதிதான். நிறைய மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும் அங்கே இருக்கும். பெரிய கட்சி மாநாடுகள் எல்லாம் வளசரவாக்கத்தில் பந்தல் போட்டு நடத்தப்பட்டன.

கடந்த இதழில் எம் தமிழர் சினிமா செய்த இடங்களை எல்லாம் சொல்லியிருந்தேன். அவை எங்கே இருந்தன... இப்போது என்னவாக இருக்கின்றன என ராமச்சந்திரன் என்பவர் கேட்டிருந்தார். பலர் போனிலும் கேட்டனர். அதற்காக இந்த அத்தியாயத்தில் அதை விவரித்துவிடுகிறேன்.

செந்தில், மோகன் ஸ்டுடியோக்கள்: இவை ஒன்றன் பின் ஒன்றாக இருந்தன. இங்குதான் விஜய் நடித்த 'திருமலை', 'மதுர' படங்கள் கடைசி கடைசியாகப் படமாக்கப்பட்டன. கமல்ஹாசன் நடித்த 'மகராசன்', 'தெனாலி' போன்ற பல படங்கள் அங்கே எடுக்கப்பட்டன. பெரும்பாலும் மார்க்கெட், சந்தை போன்ற காட்சிகள் அங்கே தயாராகும். இது வடபழனியில் இருந்து பிரசாத் ஸ்டூடியோ செல்லும் சாலையின் ஆரம்பத்தில் இடது புறம் இருந்தது. இப்போது சாஸ்திரத்துக்கு ஒரு அரங்கம் மட்டும் இருப்பதாகத் தகவல். மீதி இடங்களில் அப்பார்ட்மென்ட்.

பரணி ஸ்டுடியோ: நடிகை பானுமதி அவர்களின் ஸ்டூடியோ. இது சத்யாகார்டன் அருகே உள்ளது.

கற்பகம் ஸ்டுடியோ: பரணி ஸ்டூடியோவைக் கடந்து சிறிது தூரத்தில் எதிர் புறத்தில் உள்ளது. இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஸ்டூடியோ. இதில் பழைமையான ஓட்டு வீட்டு டைப்பில் வீடுகள் இருக்கும். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் பாரம்பர்ய கலைஞராக நடித்த என் ஆச ராசாவே படம் அங்கே படமானதுதான்.

அருணாசலம் ஸ்டுடியோ: இதன் நடுவே ஒரு பஞ்சாயத்து திண்டு இருந்தது. நடுவே அரசமரம் ஒன்று உண்டு. நிறைய பஞ்சாயத்து காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் அங்கே உருவாக்குவார்கள். பெரும்பாலும் கிராமத்து பேட்ச் ஒர்க் காட்சிகளுக்கு அருணாச்சலம் ஸ்டூடியோ பயன்பட்டு வந்தது. இயக்குநர் வி.சேகர் படங்கள் இங்கே எடுக்கப்பட்டவைதான். வடிவேலு ஒரு படத்தில் ஒரு பெண்ணை கைது செய்ய சென்று, ஒட்டுத் துணி இல்லாமல் கிடக்கும் காட்சி இங்கே எடுக்கப்பட்டதுதான். பிரசாத் ஸ்டூடியோவுக்கும் பிரசாத் லேபுக்கும் இடையில் இந்த ஸ்டூடியோ இருந்தது. இப்போது அங்கே அபார்ட்மென்ட் கட்டப்பட்டு இருக்கிறது.

விஜய வாகினி ஸ்டுடியோ: இப்போது கல்யாண மண்டபங்களாகவும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாகவும்

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் - 8

மருத்துவமனையாகவும் பலருக்குத் தெரிந்திருக்கும். வடபழனி பேருந்து நிலையம் தொடங்கி, 100 அடி சாலை வரை வியாபித்திருந்தது அந்த ஸ்டூடியோ. எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை முதல் ரஜினி நடித்த 'பாட்ஷா', 'உழைப்பாளி' வரை அங்கே உருவானவைதான். பாட்ஷாவுக்காக அங்கே செயற்கையாக ஒரு காலனியை உருவாக்கியிருந்தனர். (மாணிக்கம்) ரஜினியின் ஆட்டோ ஸ்டாண்டு, வீடு எல்லாம் அங்கே அமைக்கப்பட்டிருந்தன. ரஜினியை தூர இருந்து பார்க்கலாம். மற்றபடி சுரேஷ் கிருஷ்ணா, யுவராணி, ஆன்ந்த்ராஜ் போன்றவர்களிடம் பேச முடியும். ஓராயிரம் சினிமாக்களை உருவாக்கிய அந்த இடம் இன்று கடித்துக் குதறப்பட்ட கந்தல் ஆடை போல மாறிவிட்டது.

கமல்ஹாசன் நடித்த 'நம்மவர்', 'மகளிர் மட்டும்' படங்களின் படப்பிடிப்புகள் அங்கே நடந்தன. அதனுள்ளே நாகிரெட்டியாரின் பிரமாண்டமான பங்களா ஒன்று இருக்கும். உழைப்பாளி படப்பிடிப்பின் போது ஓரிரு முறை அவரை பார்த்திருக்கிறேன்.


பிரசாத் ஸ்டுடியோ:  இன்றும் நவநாகரிகமாக தன்னை தயார் படுத்திக்கொண்டே இருக்கிறது. எல்.வி. பிரசாத் அவர்களால் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் ஷங்கர், மணிரத்னம் போன்றவர்களுக்கு மிகவும் பிடித்தமான செட்டும் கூட. தம் படத்துக்கான ஏதாவது ஒரு பாடலை அங்கு எடுக்கிறார்கள். மாயாபஜார் போன்ற படங்கள் ஆப்டிகல் எபெக்டுக்காக அங்கே எடுக்கப்பட்டன. இப்போதும் அங்கே 'கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் என ரங்காராவ் பாடும்போது தட்டு தட்டாக லட்டும் சாப்பாடும் நகர்ந்து செல்லும் காட்சியை எடுத்த அந்த ஆப்டிகல் கேமிரா கேட்பாரற்றுக் கிடக்கிறது. அதை ஆபரேட் செய்யத்தெரிந்த ஒரே ஒரு நபர் இப்போதும் அங்கே இருக்கிறார். அவர் பெயர் அன்வர் என நினைவு. இந்த 3டி கிராபிக்ஸ் காலத்தில், முடிந்துபோன ஒரு காலத்தின் தடயமாக அவரும் அந்த எந்திரமும் அங்கே.

ஏ.ஆர்.எஸ். கார்டன்:  அம்பிகா, ராதா ஆகியோருக்குச் சொந்தமானது. மாந்தோப்பு, போலீஸ் ஸ்டேஷன், சிறிய குடியிருப்பு போன்றவை இருந்தன. இது போரூரில் இருக்கிறது. ஷூட்டிங் நடக்கிறதா எனத் தெரியவில்லை.


டி.ஆர். கார்டன்: டி.ராஜேந்திருக்கு சொந்தமான இதில் டி.ஆர் நிறைய படங்கள் எடுத்தார். ஒரு நடுத்தரக் குடும்பத்து தெரு அங்கே உருவாக்கப்பட்டிருந்தது.


சிவாஜி கார்டன்: இது எம்.ஜி.ஆர். வசித்த ராமாவரம் தோட்ட வீட்டுக்கு எதிரே இருந்தது.  இரண்டுபுரமும் தென்னை மரங்கள் நடப்பட்ட காடு போன்ற சாலை இங்கே பிரதானம். சீவல பேரி பாண்டி படத்தின் பேட்ச் ஒர்க் காட்சிகள் பல இங்கு எடுக்கப்பட்டன. கிராமம், காட்டுப்பாதைகளின் விடுபட்டுப்போன காட்சிகளை எடுப்பதற்கு மட்டுமின்றி நிஜமாகவே காடுகளை எடுக்கவும்கூட இங்கே வருவது உண்டு. அது இப்போது கான்கிரீட் வனமாக மாறிவிட்டது. முழுவதும் அப்பார்ட்மென்ட் கட்டப்பட்டுவிட்டது.

கோல்டன் ஸ்டுடீயோ:  இப்போது கிட்டங்கியாக உள்ளது. சாலிகிராமம் மெகா மார்ட் அருகே அந்த கிட்டங்கியைப் பார்க்கலாம்.

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் - 8

ஏவி.எம். ஸ்டுடியோ:  எத்தனையோ பாகப் பிரிவினைகளுக்குப் பிறகும் உலக உருண்டையைச் சுழற்றிக் காண்பித்தபடி தன் வழக்கமான் ஸ்டூடியோக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. நிறைய டி.வி. சீரியல்கள், கேம் ஷோக்கள் நிரந்தரமாக ஒவ்வொரு தளத்தைப் பிடித்துவைத்திருக்கின்றன.

ஸ்டுடியோக்களைப் போலவே விறுவிறுப்பான வரலாறுகளைக் கொண்டவை. சென்னை திரையரங்குகள். சென்னை அண்ணா சாலையில் இப்போது இருக்கும் பழைய போஸ்ட் ஆபீஸ் திரையரங்காக இருந்தது என்றால் யாராவது நம்புவார்களா? அதனுள்ளே டிக்கெட் கவுன்டருக்கான கையை நுழைக்கும் சிறிய அடையாளம் இப்போதும் அதற்கு சாட்சியாக இருக்கிறது.

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு