Published:Updated:

ஜேபிசி-க்கு வாய்ப்பு இல்லை : பிரணாப்

Vikatan Correspondent

கொல்கத்தா டிசம் 26:

##~~##

2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு (ஜேபிசி) அமைக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பிரணாப் கூறியது:

ஜேபிசி-க்கு வாய்ப்பு இல்லை : பிரணாப்

நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு (ஜேபிசி) என்பது என்ன?, அது என்ன சொர்க்கத்திலிருந்து வந்ததா?, ஜேபிசி அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துவதன் பின்னணி புரியவில்லை. அடுத்து நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர்கள் வழக்கம்போல பங்கேற்று, அவை நடவடிக்கைகள் எவ்வித இடையூறுமின்றி நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

எங்களுக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளித்தால், அவர்களது பிரச்னையை நாங்கள் கேட்கத் தயார். இந்த விஷயம் தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) விசாரணை தொடங்கியுள்ளது. அந்த அமைப்புக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், விசாரணை அமைப்புகளை உதவி செய்யுமாறு பணிக்க முடியும்.

ஜேபிசி மட்டுமே விசாரணை நடத்த முடியாது. ஜேபிசி என்ன செய்ய முடியும்?, ஜேபிசி இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை, சாட்சிகளை ஆராயும். இதனடிப்படையில் ஒரு முடிவுக்கு வரும். பின்னர் இதுதான் எங்களது அறிக்கை என்று ஜேபிசி தாக்கல் செய்யும்.

அதன்பிறகு ஜேபிசி சுட்டிக் காட்டியுள்ள தவறுகள் குறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். இதைத்தான் இப்போது அரசு செய்து கொண்டிருக்கிறது. மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ), வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு ஆகியன இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே பதிவு செய்யப்டப்பட்டு விட்டது.

ஜேபிசி அமைக்கக் கோருவதன் மூலம் அவர்கள் எதை சாதிக்க நினைக்கிறார்கள்? இது தொடர்பாக விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டவும் அரசு தயாராக உள்ளது. முதலில் இது குறித்து விவாதிப்போம்.

பின்னர் இது தொடர்பான உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ளட்டும். அதன்பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறினாலும் அதை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது விவாதம் நடத்தி அதன் முடிவில் தீர்வு காண்பதாகும். நாடாளுமன்ற ஜனநாயகப்படி எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதோ, அந்த கட்சிதான் ஆட்சி புரிய முடியும்.

பெரும்பான்மை கிடைக்காத கட்சி எதிர்க்கட்சியாக, அரசின் கொள்கைகளை எப்போதும் எதிர்ப்பதையே வழக்கமாகக் கொண்டு செயல்படும். எதிர்ப்பதைக்கூட நாடாளுமன்ற அவையில்தான் செய்ய வேண்டும். ஆனால் இப்போது ஒரு நூதனமான பழக்கம் உருவாகியுள்ளது.அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், அவைத் தலைவர் இருக்கையில் வந்து அமர்வதற்கு முன்பாகவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரது இருக்கையை முற்றுகையிட்டு விடுகின்றனர்.

இதனால் அவையை நடத்த முடியாமல் ஒத்தி வைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இப்படித்தான் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் வீணாகியது. ஜேபிசி அமைத்தால் அதில் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் இடம்பெறுவர். இதேபோலத்தான் பொதுக் கணக்குக் குழுவிலும் இரு அவைகளின் பிரதிநிதிகள் உள்ளனர். இதில் என்ன வித்தியாசத்தை அவர்கள் கண்டுவிட்டார்கள் என்று கூறினார்.